திருக்குறள் செய்திகள்/74
நாடு விளைபொருள்கள் கொண்டதாக இருக்க வேண்டும்; தகுதி வாய்ந்த குடிமக்கள் அங்கே வாழ வேண்டும்; அழிவில்லாத செல்வம் நிறைந்து இருக்க வேண்டும்.
நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைவதாக இருக்க வேண்டும் வேற்று நாட்டவரும் விரும்பித் தங்கு வதற்கு ஏற்றதாக அமையவேண்டும்; கேடுகள் அற்ற நிலையில் விளைபொருள்கள் மிகுதியாக இருக்க வேண்டும்.
பிற நாட்டுக் குடிமக்கள் விரும்பித் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும், அவர்களும் உழைத்து உயர வாய்ப்புகளும் உடையதாக அமைய வேண்டும். எல்லா வகையிலும் வரிகள் மிகுதியாக அரசனுக்கு வர வாய்ப்புகள் இருக்க வேண்டும். மிக்க பசியும், தீராத நோய்களும், அழிக்கும் பகையும் சேராமல் இருப்பதே நாடு எனத் தகும்.
நாட்டில் குழப்பம் விளைவிககும் பல்வேறு பிளவுபட்ட கட்சிகளும், பாழ் செய்யும் உட்பகையும், மக்களை அச்சுறுத்தும் வன்முறையாளர்களும் இல்லாமல் இருப்பது தக்கது ஆகும். கொள்ளையர்கள் தொல்லைகள் இருக்கக் கூடாது.
வெள்ளம், புயல், பூகம்பம் முதலிய இயற்கை அழிவுகள் வாராதனவாக அமைய வேண்டும். அப்படி வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் வலிமையும், வசதிகளும், வளமும் இருத்தல் வேண்டும்; எதிரிப் படைகள் வந்து அழிவு செய்தாலும் தாக்குப் பிடித்துத் தடுக்கும் வலிமை மிக்க அரணும் அமைய வேண்டும்.
ஆறுகளும் மலைகளும் நாட்டிற்கு எழிலையும் ஏற்றத்தையும் தருவன ஆகும். ஆற்று நீர், ஊற்று நீர் அமைய வேண்டும்; மவைளம் மிக்கு நீர்ப்பெருக்கு உடையதாக இருக்க வேண்டும். மலைவீழ் அருவிகள் ஆறுகளைப் பெருக்கித் தரும்; அத்தகைய மவைளமும் ஊட்டம் தருவதாகும்.
நோய் இன்மை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு செய்வன ஆகும்.
நாடு என்பது பிற நாட்டினரை எதிர்பாராமல் வாழும் வளம் உடையது. பிறரை ஒவ்வொன்றுக்கும் எதிர் பார்த்தால் அது நாடு என்று கூறமுடியாது; சுய தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட எல்லா வளமும் ஒருங்கு அமைந்து இருந்தாலும் தகுதி உடைய அரசனின் ஆட்சி அமையவில்லை என்றால் பயன் இல்லை. ஆட்சியும் மாட்சி பெற்று இயங்க வேண்டும். நாட்டுக்கு நல்ல தலைவர்களும் தேவை யாகின்றனர்.