உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/93

விக்கிமூலம் இலிருந்து

93. கள் உண்ணாமை

“குடிகாரன் நாலு தட்டுத் தட்டினாால் விழுந்து விடுவான்; அவனைக் கண்டு பயப்படத் தேவை இல்லை” என்று செர்ல்வார்கள். பகைவர்கள் இவனைக் கண்டு பயப்படவே மாட்டார்கள்.

படித்து இருக்கிறான்; திறமைசாலி; நன்றாக உழைப்பான்; என்ன பயன்? சாயுங்காலம் ஆனால் அது போடாமல் அவனால் இருக்க முடியாது. “குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு” என்று சொல்லுவார்கள்.

அறிஞர்கள் கூடிய சபையில் குடித்துவிட்டு ஒருவன் பேச முடியாது; அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவர்.

பெற்ற தாய்; தன் மகன் சான்றோன் ஆவான் என்று எதிர்பார்த்தாள்; வல்லவனாக வளர்வான் என்று எதிர் பார்த்தாள்; ஆடி அசைந்துகொண்டு வருகிறான்; நாடி தளர்ந்து நின்றுகொண்டு ‘ஏடி வாடி போடி’ என்ற சொற்களை உதிர்க்கிறான். “அடப்பாவி உன்னைப் பெற்றேன்; இந்த வயிறு புலி கிடந்த வயிறு என்று பெருமைப் பட்டேன்; புளிகரைத்து ஊற்றுவாய் என்று எதிர் பார்க்கவில்லை” என்கிறாள்.

கட்டிய வேட்டி அவிழ்ந்துவிடுகிறது; ஜட்டியோடு தடுமாறுகிறான். வெட்கம் அவனை விட்டு வெளியேறி விடுகிறது. மானம் ஈனம் அது எதுவும் இல்லை. நிதானம் தவறிவிட்டான்: ஈன புத்தியோடு ஞான நன்னெறி பேசி உளறுகிறான்.

புளிக்கும் கள்ளைக் களிப்புத் தரும் என்று குடிக்கிறான். அது விஷம்; விஷமத்தனத்துக்கு அது வித்தாகிறது.

ஏன்? மற்றவர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். உடம்பெல்லாம் புழுதி, கண்டபடி உளறுகிறான். அவன் எள்ளல் பொருள் ஆகிறான்.

நீரில் முழுகியவனை எடுத்துவிடலாம்; குடியில் முழுகியவனைத் தெளிவுபடுத்தி மீட்க முடியாது.

குடிகாரன் எப்படி இருப்பான் என்பதனை அறிய ஒரு குடிகாரனின் ஆட்டத்தைக் கவனி; அதற்குப் பிறகு குடியை நாடுவதை நீ நிறுத்திவிடுவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/93&oldid=1106504" இலிருந்து மீள்விக்கப்பட்டது