திருக்குறள் செய்திகள்/94

விக்கிமூலம் இலிருந்து

94. சூது
(சூது ஆடுதல்)

‘வா வா’ என்று அழைக்கிறது; வெற்றியும் தருகிறது. ஒன்று வைத்தால் பத்துக் கிடைக்கிறது. இந்தப் பத்துதான் உன் சொத்தை இழக்கும் வித்து ஆகிறது; தூண்டில் முள்; அதில் உள்ள புழு அதனைத் தின்ன மீன் தாவுகிறது. மாட்டிக்கொண்டு துடிக்கிறது. தூண்டில் முள்ளில் உள்ள புழு கவர்ச்சி தருகிறது. அதே ஆசையைத்தான் இங்கே முதல் வெற்றி உனக்கு அளிக்கிறது.

‘வரும்; போகும்; இது வெறும் விளையாட்டு” என்று கருதலாம்; வருவது ஒன்று; இழப்பது நூறு; இந்த ஒன்று தான் உனக்குத் தெரிகிறது. இழந்த நூறு பற்றி நீ எண்ணிப் பார்க்க மறுக்கிறாய்.

காயை உருட்டுகிறாய்; எதிரி உன் பொருளைச் சுருட்டுகிறான்; என்றாலும் அந்தச் சூது உன்னை மருட்டுகிறது; அதனால் உன் செல்வம் இருட்டுகிறது.

கிழிந்த சட்டை, கிழிந்த நோட்டு, ஒழிந்த வாழ்வு காரணம் என்ன? அழிந்தது உன் செல்வம்; ஒடுகின்ற குதிரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. எது வெல்லும்? சொல்ல முடியாது. நன்றாக ஓடி வந்த குதிரைதான்; அன்று சண்டித்தனம் பிடித்துவிட்டது; நீ வாழ்க்கையில் நொண்டியாகிவிட்டாய்.

பொழுது விடிந்து பொழுது சாயும்வரை அவன் இருப்பது கழகம்; பல்கலைக்கழகம் அன்று: சூதாடும் இடம்: கையால் உருட்டுவது தாயம்; காயும் கையுமாக அன்று மாலைவரை அங்கேயே கழிக்கிறான்; தன்னை வெல்வார் இல்லை என்று பெருமை பேசுகிறான். சோற்றை மறந்தான்; வீட்டைத் துறந்தான். இவன் இறந்தவன் என்றே எண்ண வேண்டியுள்ளது.

ஒன்று தெரியுமா? தத்துவஞானி ஒருவன் உயிரைப் பற்றியே கவலைப்படமாட்டான்; “வாங்குகிற மூச்ச சுழிமாறிப் போனாலும் போச்சு” என்று தத்துவம் பேசி வந்தான். உடம்பு கெட்டுவிட்டது; மருத்துவனிடம் சென்றான்; எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. செலவிடுகிறான். மருத்துவனுக்கு நம்பிக்கை அற்று விட்டது. உயிர் போகும் என்று தெரிவிக்கிறான். நாடிகள் அடங்குகின்றன; உயிர்மீது பற்று; எப்படியாவது பிழைக்க விரும்புகிறான். இவன் பேசிய தத்துவங்கள் எல்லாம் வெறும் மித்தை ஆகிவிட்டன; துன்பம் மிகுகிறது; உடம்பெல்லாம் ஒரே வலி; விடுதலை பெற்றால் சுகம் தான்; அந்தத் துன்பத்திலும் துடிப்பிலும் உயிரைக் காதலிக்கிறான். எப்படியாவது வாழ விரும்புகிறான்.

சூதும் அத்தகையதுதான்; பொருளை இழக்கும் தோறும் அதனை விட முடிவதில்லை; இழந்ததை எப்படி யாவது மீட்டுவிடலாம்; ஒரே ஆட்டத்தில் சரிப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறான்; ஆட்டம் அவனைக் கை விட்டு விட்டது. ஆனால் அவன் அதனை விடமுடிவதில்லை. வாட்டம் அவனைச் சூழ்ந்துகொள்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/94&oldid=1106506" இலிருந்து மீள்விக்கப்பட்டது