திருக்குறள் செய்திகள்/95
நோய் நாடி, நோய்க்குக் காரணம் நாடி, அது தணிக்கும் வழி நாடி, எது செய்ய வேண்டுமோ அதுதான் செய்ய வேண்டும். இது நாடி வைத்தியர் சொல்லும் வழியாகத் தெரிகிறது.
மருத்துவம் இதில் நான்கு பேர் உள்ளடக்கம் பெறுவர். (1) நோயாளி; இவர் இல்லை என்றால் மருத்துவத்துக்கே பேச்சு இல்லை, (2) அடுத்தது மருத்துவர், (3) மருந்து, (4) அதனை அருகிலிருந்து கொடுக்கும் பணிப்பெண் (அல்லது அக்கறை உள்ள சொந்தக்காரர்). இந் நால்வர் மருத்துவத்திற்குத் தேவைப்படுவர்.
நாடியைப் பார்த்தால் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். மிகுந்தாலும் குறைந்தாலும் அவர் நோயாளி என்று முடிவு செய்துவிடலாம். ஒரு குறிப்பிட்ட அளவு தான் உடம்பில் சூடு இருக்க வேண்டும். அதிகமாகி விட்டால் சுரம், காய்ச்சல் என்று கூறுகிறார்கள். அதிகக் கொழுப்பு இருந்தால் உடம்புக்கு இழுக்கு என்கிறார்கள். இரத்தக் கொதிப்பு என்பது மிகைப்பட்ட ஒட்டம் உண்டாக்குகிறது. சருக்கரை அதிகம் ஆகிவிட்டால் அதுவும் தப்பு: உப்பு அளவாக இருக்க வேண்டும். தமிழ் மருத்துயப்படி வாதம், பித்தம், சிலோட்டுமம் இந்நாடிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்பர்.
மருத்துவத்தை முழுவதும் சொல்லிவிட்டால் மருத்துவருக்கே வேலை இல்லாமல் போய்விடும். மருந்து எல்லாம் அருகே இருந்துதான் ஆளைப் பார்த்துத் தேர்வு செய்து பின் எழுதிக் கொடுக்க வேண்டும். ஆளைப் பார்க்காமல் எந்த மருந்தும் தரமுடியாது.
இந்த நோயாளிகள் யாரைக் கேட்டாலும் என்ன சொல்கிறார்கள்; அஜீர்ணம்; இதுதான் பெருவாரி. அதிகம் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறவர்கள்தாம் மிகுதி. “வேளா வேளைக்குச் சாப்பிடவேண்டும். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும்; ‘சூப்’ வைத்துக் குடிக்க வேண்டும். வயிறார உண்ணவேண்டும்.” இப்படிச் சொல்லக் கூடாது; இப்படிச் சாப்பிடுவதால்தான் உடம்பு கெடுகிறது.
(1) உண்டது செரிக்கட்டும்;
(2) உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிடாதே;
(3) அதிக உணவு விரும்பாதே;
(4) பசி அளவு அறிந்து அளவாக உண்க.
இந் நான்கு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் நோய் மிகுதியாக வாராது. வேறு சில புதிய நோய்கள் வருகின்றன: தடுப்புக்கு வழி கூறலாமேயன்றித் தீர்ப்பதற்கு அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது; குடிப்பழக்கம் நோய் தரும்: புகைபிடிக்கக் கூடாது. தீய ஒழுக்கங்கள் பயங்கரமான நோய்களை உண்டாக்கும். இவற்றை எல்லாம் உடம்புக்கு ஒவ்வாதனவற்றுள் அடக்கிவிடலாம். அளவோடு உண்பது வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.