உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில். 39. இறைமாட்சி

விக்கிமூலம் இலிருந்து
திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்
பொருட்பால்
39. இறைமாட்சி

பொருட்பாலில் முதல் அதிகாரமாகக் காணப்படுவது ‘இறைமாட்சி’ ஆகும். இறை என்பது பொதுவாக இறைவனை - கடவுளை- குறிக்கும். ஆனால், இங்கு மன்னன் எனும் பொருளில் வருகிறது. ஆளும் அரசன் ‘இறை’ எனப்பட்டான்.

பரிமேலழகர் ‘இறைமாட்சி’ என்பதற்கு “அஃதாவது, அவன்றன் நற்குண நற்செய்கைகள். உலக பாலர் உருவாய் நின்று உலகங் காத்தலின் ‘இறை’ என்றார்; ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’ என்று பெரியாரும் பணித்தார்” என அழகாக இதனை விளக்கிக் கூறுவார். இந்த அதிகாரத்தில் மன்னனின் குணநலன்களையே பெரிதும் கூறுகின்றார்.

பொய்யாமொழியார் திருவள்ளுவர், இறைமாட்சியின் முதற்குறளில் அரசனுக்குரிய உறுப்புகள் -அங்கங்கள்- பற்றிப் பேசுகின்றார்.

அரசனுக்குரிய அங்கம் ஆறு:

அரசனுக்குரிய உறுப்பு ஆறு ஆகும். அவை:

1. படை
2. குடி
3. கூழ்
4. அமைச்சு
5. நட்பு
6. அரண் - என்பனவாம்.

குடி என்றது, அதனையுடைய நாட்டினைக் குறித்தது. கூழ் என்றது, அதற்கு ஏதுவாய -காரணமாகிய- பொருளைச் சுட்டியது என்பர் பரிமேலழகர். இந்த ஆறு உறுப்புகளையும் முழுமையாகப் பெற்று விளங்கும் அரசன், அரசர்க்கெல்லாம் அரசனாவான்! அதாவது, அரசர்க்குள்ளே சிங்க ஏறு போன்று சிறந்தவனாக விளங்குவான். இதனை,

“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”

- எனக் குறள் கூறும்.

மன்னனின் மாட்சி:

ஒரு சிறந்த மன்னன் எவ்வாறு இருப்பான் -இருக்க வேண்டும்- என்று இலக்கணம் வகுக்கின்றார் வள்ளுவப் பேராசான்.

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் நான்கு குணங்களும் அவனுக்கு இயல்பானவை; அவனிடம் இடைவிடாது நிற்பன! மேலும், தூங்காமை (எப்போதும் விழிப்புடன் இருத்தல்), கல்வி, ஆண்மைஉடைமை ஆகிய மூன்று குணங்களும் அவனைவிட்டு ஒருக்காலும் நீங்கா.

இவற்றை எல்லாம்,

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள்பவற்கு.

எனும் குறள்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

அறம் வழுவா அரசன்:

அறத்தினின்றும் (தருமத்தினின்றும்) வழுவாது (தவறாது), அறம் அல்லாத செயல்கள் தன் நாட்டின்கண் நிகழாமல் கடிந்து (நீக்கி), வீரத்திலும் வழுவாத, தாழ்வில்லாத தன்மையுடையவன் சிறந்த அரசன் ஆவான்.

மன்னனுக்குரிய (ஆள்பவர்க்குரிய) சிறப்புச் செயல்கள்: பொருளை இயற்றல் (ஆக்குதல்), ஈட்டல், காத்தல், காத்தவற்றைச் சரியாகப் பகுத்து அளித்தல் ஆகியவற்றில் வல்லவனே அரசன் ஆவான். இதனை,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

என்றுகூறுவார் வள்ளுவர்.

மன்னனின் மாட்சியும் பயனும்:

காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாக மன்னன் இருப்பானேயானால், மக்கள் அவனைப் பிற மன்னர்களைக் காட்டிலும் புகழ்ந்து பேசுவர்.

இனிமையான சொற்களைக் கூறி, ஈதலைச் செய்து, உயிர்களுக்குத் துன்பம் நேராமல் காத்தளிக்க (காப்பாற்றும்) வல்ல அரசனுக்கு இவ்வுலகமானது அவன் ஏவற்படி நடக்கும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.

நீதி தவறாமல் முறைசெய்து மக்களைப் பாதுகாக்கும் மன்னவனைக் கடவுளாகக் கருதி உலகோர் போற்றுவர்.

மன்னவன் தன் செவி கைக்கும்படியாக இன்னாத சொற்களைப் பிறர் கூறினும், அவற்றைப் பொறுக்கும் பண்புடையவனாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பண்புடைய வேந்தனின் குடைநிழற்கீழ் இவ்வுலகம் தங்கும்.

வேந்தர்களில் விளக்கு:

கொடைத் தன்மை (பிறருக்குக் கொடுக்கும் இயல்பு), அருள்புரிதல், செங்கோலாட்சி, குடிமக்களைப் பாதுகாத்தல் எனும் நான்கு பண்புகளையும் உடைய வேந்தன், வேந்தர்களிடையே தோன்றும் ஒளிவிளக்கு ஆவான். அரசர்களுக்கு இடையே விளங்கும் ‘அருக்கன்’ (சூரியன்) ஆவான்! அருக்கன் என்றால் சூரியன் என்று பொருள். இதனைக்

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி.

என்ற குறளில் கூறுவர் திருவள்ளுவர்.

இவ்வாறாக, ‘இறைமாட்சி’ அதிகாரம் ஆளுகின்ற அரசனின் பண்புகளைப் பேசுகின்றது. இன்று முடியாட்சி நீங்கிக் குடியாட்சியாக இருந்தாலும், ஆளுகின்றவர்க்கு வேண்டிய பண்புகள் இவையாம். இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வள்ளுவப் பேராசான் நமக்கு வழிகாட்டியாய் நின்று கூறுகின்றார்.


பார்க்க:

[தொகு]

[[]]

பரிமேலழகர் எளிய தமிழில்- 48. வலியறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 49. காலமறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை


பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது

பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 99. சான்றாண்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 109. தகையணங்குறுத்தல்