திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில். 48. வலியறிதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்
பொருட்பால்
48. வலியறிதல்

வலியறிதல் எனும் அதிகாரம், பொருட்பாலில் அரசியலில் வைக்கப்பட்டுள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இதனைத் ‘தெரிந்து செயல் வகை’ என்னும் அதிகாரத்தின் பின் வைத்துள்ளார். ஒரு செயலை ஆராய்ந்து செய்யும் முறை பற்றிப் பேசிய வள்ளுவப் பெருந்தகை, அதனை அடுத்து, நால்வகை வலியையும் (வலி=வலிமை) அளந்து அறிதல் எனும் வலியறிதல் பற்றிப் பேசுகின்றார். வலி அறிதல் என்றால், ‘ஆற்றலை அறிதல்’ என்று பொருளாம்.

நால்வகை வலிகள்:

வலியின் பாகுபாட்டை நான்கு வகைகளாகப் பகுக்கின்றார் வள்ளுவப் பேராசான். அவை:

1. வினை வலி(மை) [வினை = செயல்]

2. தன் வலி(மை) [தன்னுடைய வலிமை]

3. மாற்றான் வலி(மை) [மாற்றான் = எதிரி]

4. துணை வலி(மை) [துணை = நட்பு, துணையாக இருப்பவர்கள்]

-என்பனவாம்.

இந்த நால்வகை வலியையும் அறிந்து தன் வலிமை மிகுந்து இருந்தால்தான் ஒருவன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்கிறார்.

இதனை,

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

-எனும் குறள் நமக்கு வலியுறுத்துகின்றது. மேலும், தம்மால் இயலும் வினையையும், அது குறித்து அறியவேண்டிய வலிமையையும் அறிந்து எப்பொழுதும் மன மொழி மெய்களை அதனில் வைத்து, வினை மேற்செல்வார்க்கு முடியாதது என்ற ஒன்று இல்லை (472). இதனால் வலியறிந்து செய்வார் பெறும் பயன் அறியலாம்.

தன்வலி அறிதல்:

தம்முடைய ஆற்றலின் அளவை அறியாது, விளக்கம் என்ற ஒன்றினால் மட்டும் முயன்று பின் தொடர்ந்து முடிக்க முடியாமல் இடைக்கண் முரிந்தார் -அதாவது, நடுவிலே கெட்டுப்போனவர்கள்- பலர் என்கின்றார். எனவே, தன்வலி அறிவதன் இன்றியமையாமை -முக்கியத்துவம்- கூறப்பட்டது.

மேலும், அயலாரோடு பொருந்தி ஒழுகாது, தன் ஆற்றல் அளவையும் அறியாது, தன்னைத்தானே பெரிதும் மதித்து, வியந்து கொள்பவன் விரைந்து கெடுவான்.

மாற்றான்வலி, துணைவலி அறிதல்:

இதனை அணிநயம் படக் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. நொய்தான மயில் இறகினை ஏற்றிய வண்டியும், அதனை அளவுக்கு மீறி ஏற்றினால், வண்டியின் உறுதியான அச்சும் முரிந்துபோகும்.

இதனைப்,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

-என்கின்றார்.

எளியர் என்று பலரோடு பகைகொளும் அரசன் தான் வலிமை உடையவனாக இருந்தாலும் வலிமையற்ற பலரும் ஒன்றாகக் கூடியவழி அவன் அழிந்துபடுவான் என்னும் பொருள் தோன்றும்படியாக அமைந்துள்ளதால் அது ‘பிறிதுமொழிதல் அணி’ ஆகும்.

வினைவலி அறிதல்:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பிலே ஏறியிருந்தவர், அதனையும் கடந்து மேற்செல்ல முயன்றால் அதுவே அவரின் உயிர்க்கு இறுதியாகி விடும். எனவே, வினைவலி அறிதல் வேண்டும். இதனை,

நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். (476)

-என்று குறள் சுட்டுகின்றது.

பொருள் அறிதல்:

இறுதியாகப் பொருள்வலி அறிதலைப் பற்றிப் பேசுகின்றார். பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப ஈதல் வேண்டும். அதுவே பொருளைப் போற்றி வழங்கும் நெறியாகும்.

பொருள் வருகின்ற வழியின் அளவு சிறிதாயினும் அதனால் கேடு ஒன்றும் இல்லை, பொருள் போகும்வழி அகன்று பெரிதாக இருக்கக் கூடாது. அதாவது, வருவாய் சிறியதாயினும் பரவாயில்லை, செலவு அதிகம் கூடாது என்பதாம்.

தன் பொருளின் அளவு தெரிந்து வாழாதான் வாழ்க்கையானது, உள்ளது போல் தோன்றிப் பின் இல்லையாய், அந்தத் தோற்றம்கூட இல்லாமல் கெட்டுப்போகும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

-எனும் குறள் இதனைத் தெரிவிக்கின்றது.

இறுதியாக ‘உளவரை தூக்காத ஒப்புரவாண்மை’பற்றிக்கூறுகின்றார் உலகப் பேராசான். அதாவது, அளவினைப் பாராது செய்யும் எதுவும் உருப்படாது என்பதாம். தனக்கு உள்ள பொருளின் அளவினைப் பாராது, அளவிறந்த ஒப்புரவு செய்வதனால் (பிறருக்குக் கொடுத்து உதவுவதால்) ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைந்து கெட்டுப்போகும் என்கின்றார்.

எனவே, ஒப்புரவிற்கு ஒரு வரையறை தேவை என்பதாம்.

இவ்வாறாக, வலியறிதலில் பல்வேறு ஆற்றல்களை அறிந்து, அதற்கேற்ப வினைசெய்து (செயல்செய்து) வெற்றி ஈட்டவேண்டும் என்கிறார். இவையெல்லாம் தான் செய்யும் ஒரு செயல் வெற்றி அடைவதற்கான வழிகளாகும். இவற்றைப் பின்பற்றினால் எடுத்த செயல் இனிதே நிறைவேறும்.

பார்க்க:[தொகு]

பரிமேலழகர் எளிய தமிழில்- 39. இறைமாட்சி


பரிமேலழகர் எளிய தமிழில்- 49. காலமறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை


பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது

பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 99. சான்றாண்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 109. தகையணங்குறுத்தல்