திருக்குறள் புதைபொருள் 1/001-013

விக்கிமூலம் இலிருந்து


திருக்குறள் புதைபொருள்

1. உயிரினும்...!


               ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
               உயிரினும் ஓம்பப் படும்.


என்பது திருக்குறளில் ஒரு குறள்.

'விழுப்பம்’ என்பது சிறப்பு என்று பொருள்படும். அது முறையே குணம், நலம், புகழ், பெருமை, உயர்வு என்றாகும். இத்தகைய நலன்கள் அனைத்தையும் கொண்ட சிறப்பை 'ஒழுக்கம் தரும்' என்பது வள்ளுவர் கருத்து.

நல்லொழுக்கம், தீயொழுக்கம் என ஒழுக்கம் இரு வகைப்படும். எனினும் "ஒழுக்கம்" என்றால், அது தீயொழுக்கத்தைக் குறிக்காமல் நல்லொழுக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கும் என்பதை இக்குறள் நமக்கு அறிவிக்கிறது.

ஆடை அணிகள், மாட மாளிகைகள், ஆடு மாடுகள், அலங்கார வகைகள், பொன் பொருள்கள், நீர் நிலங்கள், வண்டி வாகனங்கள் முதலியவற்றுள் எதுவும் விழுப்பம் தராது என்பதை இக் குறள் வெளிப்படையாகக் கூறுகிறது.

மேடைமீது ஏறி ஆவேசமாய்ப் பேசுகிற பேச்சு. அருமையாக எழுதுகின்ற எழுத்து, அள்ளிக்கொடுக்கின்ற கொடை, அதிகாரம் வகிக்கின்ற பதவி ஆகியவைகளால் பெறமுடியாத சிறப்பை, ஒருவன் ஒழுக்கம் ஒன்றினால் பெறலாம் என்பதை "ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

மக்களாய்ப் பிறந்து, மக்களாய் வாழ்ந்து, மக்களாகவே மடிய விரும்பும் எவரும், ஒழுக்கத்தைப்போற்றி வளர்த்துக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை "ஓம்பப்படும்" என்ற சொற்களால் வள்ளுவர் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்.

கடமை! ஒழுக்கத்தைக் காப்பாற்ற வேண்டியது கடமைதான் என்றாலும், நிழல் தரும் என்றே மரம் வளர்க்கப்படுவதையும், பலன் தரும் என்றே பயிர் வளர்க்கப்படுவதையும், பால் தரும் என்றே பசு வளர்க்கப் படுவதையும் கண்ட வள்ளுவர், 'அப்படிப்பட்ட மக்களிடத்தில் எதுவும் தராத கடமையைச் சொல்லி என்ன பயன்?' என்ற புண்பட்ட மனத்துடன் ஆராய்ந்து, பிறகே "விழுப்பம் தரும் ஓம்பு" என்று பலனையும் சுட்டிக் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.

இக் குறளில் இவ்வளவு கூறியும் அவர் மனம் அமைதியடையவில்லை. இதற்குள் ஓர் உவமையும் கூறவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். பொன்னை, பொருளை, மனைவியை, ம க் க ளை க் காப்பாற்றுவதைப்போல ஒழுக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் எனக் கூற எண்ணியும், இவற்றுள் எதை இழந்தாலும் திரும்பப் பெறமுடியுமே, ஒழுக்கத்தை இழந்து விட்டால் திரும்பப் பெற முடியாதே என நினைத்து, இவற்றுள் எதையும் உவமையாகக் கூறவில்லை என்று தெரிகிறது.

இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றொன்று உயிர். ஆதலால், போனால் திரும்பி வராத ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்பி வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.

இந்த உவமையிலுங்கூட, ‘உயிரைப் பாதுகாப்பது போல ஒழுக்கத்தைப் பாதுகாக்கவேண்டும்’ என்றா கூறி இருக்கிறார்? அதுதான் இல்லை. ‘உயிரைக் காப்பாற்றுவதை விட அதிகமாக ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ எனக் கூறிவிட்டார். இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல் நமக்கு நன்கு விளக்கிக்கொண்டிருக்கிறது.

‘இருபது நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எந்த விஞ்ஞானியாவது ஒருவன் தோன்றி, இழந்த உயிரைத் திரும்பக் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். ஆனால் எத்தனை நூற்றாண்டுகளானாலும், இழந்து போன மானத்தைத் திரும்பக்கொண்டு வர எந்த விஞ்ஞானியினாலும் இயலாது என்ற விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையைக்கூட, வள்ளுவர் பெருமான் இந்த ’உயிரினும்' என்ற சொல்லால் அறிவித் திருக்கிறார் என்பதைக் கண்டு மகிழுங்கள்.

“உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை” என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கிறார். “ஒன்று இருக்கிறது; அது ஒழுக்கம்தான்” என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். இப்போராட்டத்தை, இக்குறளில் உள்ள “உயிரினும்” என்ற ஒரு சொல் நமக்குப் போராடிக் காட்டுகிறது.

உயிரையுடைய எவரும் உயர்ந்தவராகக் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின் உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதை ‘உயிரினும்’ என்ற சொல் அறிவிக்கிறது.

மானத்தை இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலையிலும் ‘மானத்தை இழ வாதே! உயிரை இழந்துவிடு!’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் நமக்கு ‘உயிரினும்’ என்ற ஒரு சொல்லால் உணர்த்திக் காட்டுகிறார்.

உயிரை இழந்து ஒழுக்கத்தைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே இறந்தவனாயினும் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உயிர் வாழ்வான். ஒழுக்கத்தை இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே உயிரோடு இருப்பினும் கல்ல பிணமாய் நடந்து திரிவான். ஆதலின் காப்பாற்ற வேண்டிய முதல் நிலையில் நிற்பது உயிரல்ல; ஒழுக்கம் என்ற உண்மையை 'உயிரினும்' என்பது உய்த்துண்ரச் செய்கிறது.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை பிறருக்கே ஏற்படும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்டால், அதற்காக அழுது வருந்தும் துன்பநிலை பிறருக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை அவனுக்கே ஏற்படும்! என்ற இச் சிறந்த கருத்தை வள்ளுவர் 'உயிரினும்' என்ற சொல்லிற்குள் அழுது, வருந்திப் புகுத்தியிருக்கிறார் என்பதைக் காணும்பொழுது, நமது நெஞ்சமும் நெகிழ்ந்து, வருந்தி, உருகுகிறது.

உயிர் தன்னையுடைய எவர்க்கும் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டே இருக்கிறது. ஒழுக்கம் அவ்வாறில்லாமல் தன்னையுடைய எவர்க்கும் ஒரே சிறப்பைச் சமமாகத் தந்து வருகிறது. ஆதலின், ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகும் என்ற உண்மை 'உயிரினும்' என்ற சொல்லிற் புதைந்து காணப்படுகிறது.

உயிர் தன்னையுடையவனைத் தீவினையினும் செலுத்தித் துன்புறுத்தலாம். ஒழுக்கம் அவ்வாறு செய்யாமல் நல்வழியில் மட்டுமே செலுத்தி அவனுக்குப் பெயரும், புகழும், பெருஞ் சிறப்பும் தருகிறது. ஆதலின் ஒழுக்கம் உயிரினும் பெரிது என்ற இவ்வுண்மையை 'உயிரினும்' என்ற சொல் காட்டிக் கொண்டிருக்கிறது.

நமக்கு நற்றுணை நல்லவர் என்றும், பக்தர்க்கு நற்றுணை பரமன் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மாதிரி உயிர்க்கும் ஒரு துணை இருக்கிறது. உயிர்க்கு ஒரு துணையும், உறுதுணையும் ஆவது உலகில் வேறு எதுவு மில்லாமல் ஒழுக்கம் ஒன்றே ஆகும். ஆதலின் உயிர்க்குத் துணையாகின்ற ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகிறது என்ற இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லால் அறிந்து மகிழலாம்.

உயிரை இழந்துவிட்ட ஒருவன் உண்மையான பழியைக்கூட இழந்து விடுகிறான்! இது இவ்வுலகில் இன்றும் நாம் காணும் உண்மையாகும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்ட ஒருவன் தான் செய்யாத பழி பாவங்களைக்கூடச் செய்யவில்லை என்று சொன்னாலும் உலகம் ஒப்பாது. ஆதலின், அவன் இல்லாத பழியையும் ஏற்க நேரிடும். ஆதலின் உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாகிறது. இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லிற் கண்டு மகிழுங்கள்.

படி இல்லாமல் மாடியும் ஏறலாம், கால் இல்லாமல் நடந்தும் செல்லலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் உயர் வடையவே முடியாது. ஆதலின் துன்பம், துயரம், வறுமை ஆகிய இடுக்கண்கள் எத்தனை வந்தாலும் சிறிதும் தளராமல் ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும். உயிரே போவதாயினும் அஞ்சாது, வீரத்தோடு நின்று போராடி, ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து.

இதுகாறும் கூறிய இவைகளைக் கொண்டு,

         ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
         உயிரினும் ஓம்பப்படும்

என்ற குறளின் பெருமையும், உயிரினும் என்ற சொல்லின் சிறப்பும், உயிரின் தன்மையும், ஒழுக்கத்தின் உயர்வும் ஒருவாறு விளங்கியிருக்கலாம். இது போன்றே பிற குறள்களிலும் புதைபொருள்களைக் காணலாம். ஆகவே, நீங்கள் திருக்குறளைப் படியுங்கள். புலவனாக விளங்க அல்ல; பேச்சாளியாக இருக்க அல்ல; ஒழுக்கமுள்ளவனாக நடக்கப் படியுங்கள். படித்து அதன்படி ஒழுகுங்கள்.

வாழட்டும் தமிழ்ப் பண்பு!