உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் புதைபொருள் 1/002-013

விக்கிமூலம் இலிருந்து


2. கொல்லும் சொல்!

        கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
        சொல்லா நலத்தது சால்பு.

இக்குறள் சான்றாண்மை என்ற தலைப்பின்கீழ் வந்தது. சான்றாண்மை என்பது தமிழகத்தின் சொந்தச் சொத்து. அது எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத ஒன்று. சான்றாண்மை என்பது பல நல்ல குணங்கள் அமையப்பெற்ற ஒருவன், அக்குணங்களில் எதுவும் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் காப்பாற்றி ஆளும் ஆண்மை எனப்படும். ஆகவே, சான்றாண்மை என்பது உயர்ந்த மக்களின் சிறந்த பண்பு என்றாகிறது.

மக்களின் உயர்ந்த பண்புக்குப் பல நற்குணங்கள் இருந்து தீரவேண்டும். எது இல்லாவிடினும் இரு பெருங்குணங்களேனும் வேண்டும். அவற்றில் ஒன்று, பிற உயிர்களைக் கொல்லாமை; மற்றொன்று, பிறர் தீமைகளைச் சொல்லாமை என்று இக்குறள் கூறுகிறது.

சான்றாண்மைக்குத் திருவள்ளுவர் சொல்லில் ஒன்றும், செயலில் ஒன்றும் விரும்புகிறார் என்பதையும் இக்குறளால் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.

உயிரைக் கொல்லாமையும், தீமையைச் சொல்லாமையும் ஆகிய இவ்விரண்டும் "நலம் தரும்" என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுகிறார். இதனை 'நலத்தது' என்ற சொல்லால் அறியமுடிகிறது.

கொலையுண்ட உயிர்களும் சொல்லுண்ட உயிர்களும் பெரிதும் துன்பப்படும். ஆதலின், அப்படிச் செய்யாதிருப்பதே எவ்வுயிர்கட்கும் நல்லது என்பது இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லின் கருத்து.

கொல்லுகின்றவனைத் தீயசெயலாளன் என்றும், சொல்லுகிறவனைத் தீய சொல்லாளன் என்றும் உலகத்தார் சொல்லிப் பழித்து வெறுத்து ஒதுக்குவர். ஆதலின் கொல்லாமையும் சொல்லாமையும் பிறருக்கன்றித் தனக்கும் நல்லது என்ற கருத்தும் இக்குறளில் அடங்கியே இருக்கிறது.

உயிரைக் கொல்லாமை, தீமையைச் சொல்லாமை ஆகிய இரண்டையும் 'நலத்தது' என்று ஒரு சொல்லால் ஒற்றுமைப் படுத்திய வள்ளுவர், அவற்றின் பண்பை வேற்றுமைப் படுத்திக் கூறி இருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடிய ஒன்று.

கொல்லா நலத்தினை 'நோன்மை' என்றும், தீமை சொல்லா நலத்தினை 'சால்பு' என்றும் வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார். இக்குறளில் அமைந்துள்ள இச்சொற்கள் பொன்னிற் பதித்த மணிகள் என மின்னிக் கொண்டிருக்கின்றன.

நோன்பு என்பதை 'விரதம்' என வடமொழியாளர் கூறுவர். அது 'குறிப்பிட்ட சில நாட்களில் இதை நான் செய்வதில்லை' என்பதும், 'நான் விரும்புவதைப் பெறும் வரையில் இவ்வாறு இருப்பேன்' என்பதும் ஆகும். புரட்டாசிச் சனிக்கிழமைகளில் மட்டும் புலால் உண்பதில்லை என்பதும், திருப்பதிக்குப் போகும்வரை முடி எடுப்பதில்லை என்பதும் நோன்பு என்பதின்பாற்படும்.

ஆனால் 'சால்பு' என்பது குறித்த நாளில் குறிப்பிட்ட ஒன்றைச் செய்யாதிருக்கும் நோன்பினைச் சுட்டாது. அது என்றும் நின்று நிலவி, இயல்பாகவே அமைந்திருக்கின்ற ஓர் உயர்ந்த பண்பையே சுட்டிக்காட்டுவதாகும்.

நோன்பின் தன்மையையும் , சால்பின் தன்மையையும் அறிந்துகொண்ட நமக்கு, இக்குறள் நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று வற்புறுத்துவதாகத் தெரிகிறது.

நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று இக்குறள் கூறுவதிலிருந்து, உயிர்களைக் கொல்லாதிருப்பதை விடத் தீமைகளைச் சொல்லாதிருப்பதுதான் உயர்வு என்பது வள்ளுவர் கருத்து என விளங்குகிறது.

சான்றாண்மைக்கு இலக்கணம் கூறவந்த வள்ளுவர் அதற்கு இருக்க வேண்டிய பல நல்ல குணங்களுடன் கொல்லாமையும் சொல்லாமையும் வேண்டும் என்று மட்டும் இக்குறளில் கூறியிருக்கவில்லை. பின்னதற்கு முன்னதை ஒப்பு நோக்கும் உவமையாகக்கூடக் கூறி இருக்கிறார் என்பதை அறியும்போது, நமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.

கொல்லுதற்குரிய கருவி கிடைக்கப் பெறாத ஒருவன், கொல்லாது இருந்துவிடவும் முடியும்; அது எளிது. ஆனால் சொல்லுதற்குரிய கருவி "நா" இருந்தும், அதனை அடக்கி ஆண்டு கட்டுப்படுத்திச் சொல்லாதிருப்பதுதான் அரிது. ஆதலின் கொல்லாச் செயலைவிடத் தீமை சொல்லாச் செயலை இக்குறள் உயர்வுபடுத்திக் கூறுகிறது.

கொல்லுங் குணத்தைவிட, தீமை சொல்லுங்குணத்தைக் கொடுமையாகக் கூறி இருப்பது, கொலையுண்டவன் அப்போது மட்டும் துடிதுடித்துச் சாகிறான்; ஆனால் சொல்லுண்டவன் வாழ்நாள் முழுவதும் துடிதுடித்துச் சாகிறான் என்பதன் பொருட்டு எனத் தெரிகிறது.

கொலை வாளினும் கொடியது நாக்கு எனலாம். வாள் மனிதனை விட்டுச் சிலபொழுதேனும் பிரிந்திருக்கும். நா எப்பொழுதும் மனிதனுடனே இருந்து வரும். வாளால் சிலரையே வதைக்க முடியும். நாவாற் பலரை வதைக்க முடியும். "வாள்" கண்டவரையே கொல்லும். "நா" காணாதவரையும் கொன்றுவிடும். ஆகவே, வாளினும் வலிமை உடையது "நா" என்பது வள்ளுவர் கருத்து.

நாவினாற் சுட்டு வடுவை உண்டாக்குவதைவிட, தீயினாற் சுட்டுப் புண்ணை உண்டாக்குவது நல்லது என்று முன்பு ஒரு முறை கூறினார். தீமையைச் சொல்லிப் பல நாள் துன்புறுத்தும் கொடுமையைவிட, கொலையைச் செய்து ஒருநாள் துன்புறுத்தும் கொடுமை சிறியது என்று இக்குறளில் கூறுகிறார். இக்கருத்து நம் உள்ளத்தைச் சுடுகின்றது. 

"பெற்றவர்கள் பிள்ளைகளின் குறைகளையும், உற்றவர்கள் நண்பர்களின் குறைகளையும் எடுத்துக் கூறாமல் இருக்கலாமா? இருந்தால் அவர்கள் திருந்துவது எப்படி?" என்று நாம் வள்ளுவரைக் கேட்டால், அவர் "நன்றாக எடுத்துக் கூறுங்கள்; மக்களின் குறைகளை எடுத்துக் கூறித் திருத்தித் தம்மின் தம் மக்களை அறிவுடையவர்களாகச் செய்யுங்கள். அதுதான் தந்தையின் கடன். நண்பர்களின் தவறை அழ அழச் சொல்லி மட்டுமல்ல; இடித்து இடித்துக் கூறுங்கள், அதுதான் நட்பு. நான் கூறவந்தது அவர்களையல்ல; உற்றாரும் நண்பரும் அல்லாத பிறரை" என்று வெகு நயமாகக் கூறுகிறார். இவ்வுண்மையை இக்குறளில் உள்ள "பிறர்" என்ற சொல் வெகு அழகாக நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தீமை என்ற சொல் இக் குறளில் ஆட்சி புரிகிறது. அதற்குத் தவறு என்பதோ, குறை என்பதோ பொருளாகாது. இது, பழி பாவங்களுக்கு அஞ்சாத கொடுஞ்செயல் என்றே பொருள் பெறும். வள்ளுவர் இதனைக் கருத்திற் கொண்டே, 'பிறர் குறையை' 'பிறர் தவறை' என்று கூறாமல், 'பிறர் தீமையை' என்று அழுத்திக் கூறியிருக்கிறார் எனத் தெரிகிறது.

ஒருவருடைய தீமைகளை அவரது நலம் கருதுவோர் அவரிடமே நேரிற் சென்று எடுத்துக் கூறியும்கூடத் திருத்தலாம் என்பது வள்ளுவருடைய கருத்து. இதனைக் 'கண்ணின்று கண்ணறச் சொல்லினும்' என்ற குறட் சொல்லே மெய்ப்பிக்கும். இக்குறளில் கூறியிருப்பது அது வல்ல என்றும், பிறருடைய தீமைகளைப் பிறரிடத்தே போய்க் கூறும் கொடுமையினையே என்றும் தெளிவாக அறியலாம்.

ஒருவருடைய தீமைகளைப் பிறரிடம் கூறாமல் அவரிடமே சென்று கூறுவது குளிர்ச்சி உள்ளங் கொண்டவர்கள் செயலாகுமே ஒழிய, எரிச்சல் உள்ளங் கொண்ட மக்களின் செயலாகாது என்பதை எண்ணியே, வள்ளுவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

'நலத்தது' என்ற சொல்லை இங்கு எத்தனை முறை படித்தோம். அதன் பொருள் விளங்கிற்றா நமக்கு? நல்லது, நல்லது என்ற பொருளில்தானே அதை அறிந்தோம். அது தவறு. அதன் பொருள் அதுவல்ல; அதன் உண்மையான பொருள் 'நல்லதைச் சார்ந்தது' என்பதேயாகும்.

உயிர் கொல்லாச் செயலையும் தீமை சொல்லாக் குணத்தையும் வள்ளுவர் 'நல்லதைச் சார்ந்தது' என்று கூறினாரேயொழிய, 'நல்லது' என்று கூற அவருடைய உள்ளம் ஒப்பவேயில்லை. இக் கருத்தை இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லிற் காணும்பொழுது நம் உள்ள மெல்லாம் இனிக்கிறது.

கொல்லாமையும் சொல்லாமையும் நல்லதைச் சார்ந்தது என்று இக் குறள் கூறும்பொழுது, வேறு எதையோ நல்லது என்று இக் குறள் கூறுவதுபோலத் தெரிகிறது. அது எது? என ஆராயும்பொழுது பிற உயிர்களை வளர்த்து வாழ்தலும், பிறர் நன்மைகளைச் சொல்லி வாழ்தலுமே எனப் புலப்படுகிறது.

இவ்வரிய பொருளை விளக்கவே இக்குறள் தோன்றியிருக்கிறது என்பதை மலைமீது நின்றும் கூறியாக வேண்டும்.

இத்தனை பொருள்களும் இக் குறளின் ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீர்களில், எட்டே சொற்களில் இருக்கின்றன என்று அறியும்பொழுது, நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குறளை மறுபடியும் படியுங்கள் :

        கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
        சொல்லா நலத்தது சால்பு

எப்படி இக் குறள்? இந்த ஒரு குறளே நமக்கு, நோன்பு, சால்பு, பண்பு, நேர்மை, அறிவு, ஆண்மை, உயர்வு, வாழ்வு ஆகிய செல்வங்கள் அனைத்தையும் தருமானால், இன்னும் திருக்குறளில் உள்ள 1329 குறள்களும் என்னென்ன செல்வங்களைத் தரும்? என்பதை எண்ணிப் பாருங்கள். எண்ணிப் பார்த்ததும், குறளினை எடுத்து ஊடுருவிப் படித்து, அவற்றிலுள்ள புதை பொருள்களையெல்லாம் அறிந்து, பிறருக்கும் வாரி வழங்கிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

வளரட்டும் சால்பு!