திருக்குறள் புதைபொருள் 1/003-013

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3. கோலொடு நின்றான்!

        வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
        கோலொடு நின்றான் இரவு

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

கல்வியைப் பற்றிக் கூறிப் பின் கல்லாமையைப் பற்றியும் கூறியதுபோல, வள்ளுவர் செங்கோன்மையைப் பற்றிக் கூறிப் பின் கொடுங்கோன்மையைப் பற்றியும் கூறும் பொழுது, இக் குறளை இரண்டாவதாகக் கூறியுள்ளார்.

இதில், 'கோன்மை' என்பது கோலின் தன்மை என்றாகி, அரசனது முறை செய்யுந் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

கோடாத கோலைச் 'செங்கோல்' என்றும், கோடுங்கோலைக் 'கொடுங்கோல்' என்றுங் குறிப்பிட்டு, மன்னனது நன்முறையையும் வன்முறையையும் விளக்குவது ஒரு தமிழ் மரபாகும்.

மன்னன் கைப்பிடிக்கும் செங்கோலானது வணிகன் கைப் பிடிக்கும் துலாக்கோல் போல் ஒரு பக்கமும் சாயாது நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்பது தமிழர் நெறி.

தனக்குச் சேரவேண்டிய வரி அல்லாத பிற பொருள்களை மன்னன் மக்களிடத்தில் விரும்பிப் பெறுவது கொடுங்கோன்மை ஆகும் என்பது இக் குறளின் பொருள்.

மன்னன் மக்களிடத்தில் பிற வழிகளில் கேட்டுப் பெறுகின்ற பொருள்களை, 'இரவு' என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டுக் காட்டுவது, அரசர்களது நெஞ்சத்தில் அம்பு கொண்டு எய்வது போன்று இருக்கிறது.

மன்னன் மக்களிடம் கொடுங்கோன்மையாற் பெற்ற செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது இரந்து பெற்ற இழிந்த செல்வமேயாகும் என்பது வள்ளுவரது முடிவு.

இரந்து பெறுகிற இழிகுணம் படைத்த ஒருவனைக் 'கொடுங்கோலன்' எனக் கூறினாலும், அவனை மன்னனாக ஒப்புக்கொண்டதாக ஆகுமாம். ஆகவே, அவனைக் கொடுங்கோலன் எனக் கூற ஒப்பாமல் 'வெறுங்கோலன்' எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

உறுப்புக்கள் குறைந்துள்ள குருடும் நொண்டியும் ஊன்றுகோல் கொண்டு நின்று புரியும் இரத்தல் தொழிலை, வெறுங்கோல் கொண்டு நிற்கும் மன்னன் விரும்பிச் செய்வது வெறுப்பிற்கு உரியது என இக் குறள் கூறாமற் கூறுகிறது.

கோலோடு நின்ற மன்னவன் மக்களிடம் பெறும் பொருளை 'இரவு' என்று வள்ளுவர் சொல்லாற் குறிப் பிட்டு, கருத்தால் அதனைக் 'களவு' என்று காட்டுவது எண்ணி மகிழ வேண்டிய ஒன்று.

கோல் கொண்டு நின்ற இத்தகைய மன்னர்களது கொடுஞ்செயலுக்குக் காடுகளில் வேல்கொண்டு நின்று, 'இடு' வென்று கூறி வழிப்பறி செய்யும் கள்வரது கொடுஞ்செயலை இக் குறளில் உவமையாகக் கூறியிருப்பது, நம் உள்ளத்தையெல்லாம் சுடுகிறது.

'வேலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து, கள்வன் அன்பு, அறம் முதலிய எதனொடும் நில்லாமையையும், மன்னன் 'கோலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து அவன் அறிஞர், அமைச்சர் முதலிய வேறு எவரோடும் நில்லாமையையும் புலப்படுத்துவது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

கொடாவிடில் துன்புறுத்துவோம் என்பதில் மட்டுமல்ல; கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைக்காது என்பதிலும் வேலொடு நின்ற கள்வனும், கோலொடு நின்ற மன்னனும் செயலொடு ஒத்து நிற்பது உய்த்துணரத்தக்கது.

வேலொடு நின்றவன் முன்பும் கோலொடு நின்றவன் முன்பும் செல்வமொடு நிற்பதைக் காட்டிலும் வறுமையொடு நிற்பது நல்லது என்பது இக்குறளின் திரண்ட கருத்து.

வேலொடு நிற்பவன் வாழும் காடும், கோலொடு நிற்பவன் வாழும் நாடும், பொருளொடு நிற்பவன் வாழத் தகுதியற்றவை என்பது இக் குறளின் முடிவு.

வேலொடு நிற்பவன் கொடுமை ஒருபொழுது மட்டுமே துன்பம் தரும்; கோலொடு நிற்பவன் கொடுமையோ எப்பொழுதும் துன்பம் தரும். ஆதலின் கோலின் கொடுமைக்கு வேலின் வெம்மை ஏற்ற உவமையாக இல்லை என வள்ளுவர் உள்ளம் வருந்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த உவமை பொருந்தாமையாலும், இதனினும் சிறந்த உவமை கிடைக்காமையாலுமே வள்ளுவர் இக் குறளில் 'என்றது போலும்' என ஐயப்பாட்டுடன் கூறியுள்ளார். இன்றேல் அவர், 'என்றது போல' எனக் கூறியிருக்கக்கூடும்.

உயிர்க்கு உடலாகவும், உடலுக்கு உயிராகவும் புவி மன்னர்களைக் கூறுவது கவி மன்னரது வழக்கு. ஆதலின், உடலை வருத்தும் வேலும் உயிரை வருத்தும் கோலும் இக் குறளில் குடி கொண்டிருக்கின்றன போலும்.

கோலைப் பிடிக்கவேண்டிய மன்னன் தன் பண்பை அடியோடு இழந்துவிட்டு, வேலைப் பிடிக்கின்ற வேடனின் பண்பைப் பெற்றிருக்கிறான். அவ்வாறிருந்தாலும், அவன் மன்னனும் அல்ல, மறவனுமல்ல, மனிதனும் அல்ல என்பதை இக் குறளாலும் நன்கு அறியலாம்.

முறைசெய்யும் மன்னவன், கொலை செய்யும் வேடனின் குணத்தைப் பெற்றுவிடுவானானால், கொடியோரைத் தேடித் தண்டித்து நல்லோரைக் காக்கும் நற்றொழிலைச் செய்ய அவன் விரும்பமாட்டான் என்ற கருத்தும் இக் குறளில் மறைந்து காணப்படுகிறது.

ஈகைத் தொழிலுக்குரிய மன்னன் இரத்தல் தொழிலிற் புகுந்து மக்களிடம் விரும்பிக் கேட்டுப் பெறுகின்ற பொருளே வழிப்பறிக் கொள்ளை என்றாகுமானால், கொடாவிடில் துன்புறுத்துவேன் என அச்சுறுத்திப் பெறும் பொருளை எதனொடு ஒப்பிடுவது? என்பதை எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது இக் குறள்!

கோலொடு நிற்கும் அரசர்கள் இன்று இல்லை எனினும் கொடுமையோடு நிற்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இன்று உள்ளனர். அவர்கள் கோலொடும் வேலொடும் கொடுமையொடும் நில்லாமல் குறளொடு நிற்கவேண்டும் என்பது நமது விருப்பம்.

இவ் ஒரு குறள் இவ்வளவு பொருள்களைத் தருமானால் பிற குறள்கள் என்னென்ன தரும்? என்று எண்ணிப்பாருங்கள். எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள்! செய்கையிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

வாழட்டும் தமிழகம்!