திருக்குறள் புதைபொருள் 1/005-013

விக்கிமூலம் இலிருந்து

5. நிலமென்னும் நல்லாள்

        இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
        நிலமென்னும் நல்லாள் நகும்

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது உழவு என்னும் தலைப்பில் உள்ளது.

பண்புடைமையை, நாணுடைமையை, குடிப்பெருமையைக் கூறிய பின்னும், வறுமையை,இரவை, இரவச்சத்தைக் கூறுவதன் முன்னும், உழவைப்பற்றிக் கூறியிருப்பது தயமுடையதாகக் காணப்படுகிறது.

உழவுத்தொழில் சிறப்புடையது! உலகம் உழவர் பின்னே செல்லக்கூடியது! உழுவார் உலகுக்கு அச்சாணி! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! உழவர் கைமடங்கின் உலகில் வாழ்வில்லை என்றெல்லாம் கூறியபின், இறுதியாகக் கூறிய குறள் இது.

உழவுத் தொழில் சிறந்திருந்தும், அதனைச் செய்யாது சோம்பித் திரியும் மக்களின் இழிநிலையை இக்குறள் அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறது.

எம்மிடம் எப்பொருளுமில்லை என்று கூறிச் சோம்பலும் வறுமையும் கொண்டு வாடியிருக்கும் மக்களைக் கண்டு நிலம் நகைக்கும் என்பது இதன் பொருள்.

எமக்கு எத்தொழிலுமில்லையே என்று ஏங்கித் திரியும் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களைக் கண்டும் நிலம் நகும் என்பதும் இருக்குறளின் கருத்தாகும்.

இப் பரந்த உலகில் நிலங்கள் பலவிருந்தும், அதனைத் திருத்தி உழுது, விளைத்து உண்டு வாழாது, வீணாக வறுமையால் வாடி வருந்தி வாழ்கின்ற மக்களைக் கண்டால் நிலம் நகைக்கும் என்று இக்குறள் கொட்டி முழக்குகிறது.

வள்ளுவர் வாழ்ந்த அக்காலத்தில் எவரும் சோம்பி இருந்ததில்லை என்ற வரலாறு ஒன்றைக் ‘காணின்’ என்ற ஒரு சொல் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

‘இலன்’ என்று ஒருமையிற் கூறாமல், ‘இலம்’ என்று பன்மையிற் கூறியிருப்பதிலிருந்து, எங்கேனும் ஓரிருவர் காணப்பட்டாலும், சோம்பேறிகளைப் பெருந் தொகையினராகக் காணமுடியாது என்ற கருத்தும் இதில் வலியுறுத் தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

‘நகும்’ என்ற சொல்வினைக்கொண்டு அதை மகிழ்ச்சிச் சிரிப்பு எனக் கொள்வதற்கில்லை. அது ஒரு ஏளனச் சிரிப்பு என்பதை இக்குறள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

உழுது உண்டு வாழ நிலங்கள் இருக்கின்றபொழுது, ஒருவன் தனக்குப் பொருளில்லையென்றாவது, வேலையில்லை என்றாவது கூறிக்கொண்டு வறுமை வாழ்வு வாழ்வது இழிவு, அது ஏளனத்திற்குரியது என்பது இக் குறளின் முடிவு.

அத்தகைய இழிந்த வாழ்வு வாழும் மக்களைக் கண்டு, நல்வாழ்வு வாழும் மக்கள் நகைப்பார்கள் என்று கூறினால் நன்மக்கட்குப் பழி வந்துவிடக் கூடும். ஆதலின் அதை விடுத்து இறுதியாக அந்த நிலமே நகைக்கும் எனக் கூறியிருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது.

'நிலம் நகும்’ என்பதிலுங்கூட நிலத்தை ஒரு பெண்ணாக உவமித்து, நிலப்பெண் சிரிப்பாள் என்று கூறி வள்ளுவரும் அந்த நகைப்பில் பங்குபெற்று நகைப்பது நமக்கும்கூட நகைப்பை உண்டாக்கிவிடுகிறது.

ஆண்மகனுக்குத் தன்மான உணர்ச்சியையூட்டும் ஒரு வழி உன் செயலைக்கண்டு பெண்பிள்ளை சிரிப்பாள் என்பது தான் என்பதை வள்ளுவர் அக்காலத்திலேயே அறிந்து இக் குறளில் புகுத்தியிருப்பது நமக்குப் பெருவியப்பை அளிக்கிறது.

பெண் மக்களிலும்கூடக் கெட்ட பெண்கள் அல்லாத நல்ல பெண்களே எள்ளி நகையாடுவர் என்பதை ‘நல்லாள் நகும்’ என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

‘நல்லாள்’ என்ற சொல்லுக்கு நலமுடையவள், அழகுடையவள், ஒழுக்கமுடையவள் என்பதோடு, இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். இக்குறளுக்கு முன்னுள்ள குறளில், ‘இல்லாளின் ஊடிவிடும்’ என்றார். இக்குறளில் ‘இல்லாள் நகைத்துவிடுவாள்’ என்றும் கூறுகிறார்.

தன்னைத் தழுவி மகிழ்வித்து மகிழ்ந்து வாழ விரும்பாத கணவனைக் கண்டு இல்லாள் வெம்பி உளம் புழுங்கிக் குறுநகை கொள்வதுபோல், நிலமும், தன்னைத் தழுவி உழுது விளைவித்து உண்டு வாழ விரும்பாத ஆண்மகனைக் கண்டு நகையாடும் என்பது பொருளமைதியுள்ள ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டு ஆகும்.

‘நகும்’ என்பதோடு வள்ளுவர் விட்டுவிட்டதிலிருந்து, தன்னைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத ஆண் மகனைக் கண்டு நிலம் நகைப்பதோடு விட்டுவிடும் என்பதும். அவ்வாறே தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத கணவனைக் கண்ட நல்லாளும் நகைப்பதோடு விட்டுவிடுவாள் என்பதும் பெறப்படும். இது பெண்மக்களின் தரத்தையே உயர்த்திக் காட்டுவதாக இருக்கிறது.

‘காணின் நகும்’ என்ற சொற்றொடர் கடுங்காட்டு நிலத்தையோ, கணவனற்ற மனைவியையோ சுட்டிக் காட்டாமல் எதிரில் எளிதில் இருப்பவைகளையே சுட்டிக் காட்டி, அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத மக்களைக் கண்டு நகைப்பதைப் புலப்படுத்துவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. நிலமகளையும் குலமகளையும் இன்பப் பொருளாக்கி ஆண்மகனை இன்பம் துய்ப்பவனாக இக் குறளில் உவமித்திருப்பது வள்ளுவரின் பேரறிவை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

நல்லாளும் நன்னிலமும் இருந்தும் நல்வாழ்வு வாழாத நாணிலியைக் கண்டு மனைவி சிரிப்பாள், நிலம் சிரிக்கும் என்பது மட்டுமல்ல; இந்த மாநிலமே சிரிக்கும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கியே இருக்கிறது. இதனை நிலம் நகும் என்பதாலறியலாம்.

பருவ மங்கையர் பலரிருக்கும் ஊரில், விரும்பும் ஒருவரை மணந்து இவ்வாழ்வு வாழவேண்டும் என்ற மணக் கவலையோ மனக்கவலையோ இன்றி வீணில் திரிந்து வெறு வாழ்வு வாழ்கின்ற இளைஞர்கள் சிலரைக் கண்டால் அந்நல்லாள்கள் இவ்வாறே நகைப்பர் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை!

பெண் மக்களின் நல்வாழ்வுக்கு, ஆண்மக்கள் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அந்த அளவிற்கு நிலங்களின் செழிப்பிற்கும், ஆண்மையுள்ள மக்கள் இன்றியமையாதவர்கள் என்பது இக் குறளால் பெறப்படும் உண்மையாகும்.

இருப்பாரை என்ற சொல்லுக்கு மாறாக, 'இரப்பாரை' என்ற சொல் அமைந்திருக்க வேண்டும் எனக் கருதுபவரும் உண்டு. அவ்வாறாயின், உழைத்து உண்டு வாழ நிலமிருந்தும் இரந்து உண்டு வாழ விரும்புவது இழிந்த செயல் என்பது பொருளாகும்.

நிலமென்னும் நல்லாள் முயற்சியுடைய ஆண்மகனுக்குச் செல்வமனைத்தும் வழங்குவாள். நல்லாளாகிய இல்லாள் அன்புடைய கணவனுக்கு அனைத்தையும் வழங்குவாள் என்பது இக்குறளின் திரண்ட கருத்தாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வள்ளுவர் பெருமான் வாக்கிலிருந்து இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், தொழிலாதார அறிவை வளர்க்கவும், பொருளாதார நிலையை உயர்த்தவும் தோன்றிய இக் குறளை இன்னும் ஒருமுறை படிக்கிறீர்களா? படியுங்கள்.

        இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
        நிலமென்னும் நல்லாள் நகும்

நகைத்து விட்டுவிடும் இக் குறளைப்போல நீங்களும் இதனைப் படித்து விட்டுவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் உழவுத் தொழில்!