திருக்குறள் புதைபொருள் 1/006-013

விக்கிமூலம் இலிருந்து

6. வேட்டலின்

        அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
        உயிர்செகுத்து உண்ணாமை நன்று

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

இது ‘புலால் உண்ணாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. இத் தலைப்பும்கூட ‘அருளுடைமை’ 'தவம்’ என்ற இரு தலைப்புகளுக்கிடையில் அமைந்து ஒரு தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது.

அறம் என்பது ‘கடமை’ என்றாகும். கடமையில் தலையாயது நல்லதைச் செய்து அல்லதைத் தவிர்ப்பதே! ஆதலின் இக்குறள் ‘நன்று’ என்று கூறி நல்லது ஒன்றைச் செய்யத் தூண்டுகிறது.

நல்லது கெட்டது என்பது எழுத்தில், பேச்சில், எண்ணத்தில், செயலில் மட்டுமல்ல; உண்ணும் பொருளிலும் உண்டு என்று உணர்த்துகிறது இக் குறள்.

‘உண்ணாமை நன்று’ என்பதிலிருந்து, உண்ணக்கூடாத பொருள்களில் புலாலும் ஒன்று என்பது வள்ளுவர் கருத்து என அறியவேண்டியிருக்கிறது.

‘உண்பது தீது’ என்று கூறாமல், உண்ணாமை நல்லது என்று கூறியிருப்பது தமிழ்ப்பண்பும், தமிழர் நெறியும் ஆகும் என்பதனை இக் குறள் நன்கு அறிவிக்கிறது.

புலாலுண்ணாமை மட்டுமல்ல, உயிரைப் போக்காமையும் நல்லது என்பது இக் குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து’ என்ற சொற்கள் அறிவிக்கின்றன.

தன் ஊனைப் பெருக்குவதற்காகப் பிற ஊனைத் தின்பதும் தன் உயிரை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களை அழிப்பதும் மக்கட் பண்புடையவர் செயல் அல்ல என்பதை இக் குறள் கூறாமற் கூறுகிறது.

தொல்லைகளைக் கண்டு ஈ, எறும்புகளைக் கொல்லு வதைவிட, பயங்கொண்டு பாம்பு தேள்களைக் கொல்லு வதை விட, வஞ்சங்கொண்டு பகைவர்களைக் கொல்லுவதைவிட, ‘உண்ணவேண்டும்’ என்ற ஆசை கொண்டு உயிர்களைக் கொல்லுவது கொடுமையினுங் கொடுமையாகும் என்பது இக்குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து உண்ணாமை’ என்ற சொற்றொடர் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கொன்று உண்ணும் மக்களைக் கண்டும் வள்ளுவர் வருந்தாமல் “துன்பம் நேரும், பாவம், நரகம் கிடைக்கும்” என்று அச்சுறுத்தியுங் கூறாமல், “கொன்று உண்ணாதிரு! அது நல்லது” என்று மட்டும் கூறியிருப்பது புண்பட்ட நெஞ்சத்தை உண்டாக்க விரும்பாத அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குக் காட்டுகிறது.

“கொல்லத்தான் கூடாது? கொன்றதை உண்ணலாம்” என்ற கொள்கையினரின் வாதத்தை வள்ளுவர் மறுத்து, “கொல்லுவதும் தீது; அதை உண்பதும் தீது” என்ற தமது கருத்தை இக்குறள் மூலம் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.

கொல்லாமையும், உண்ணாமையும் “நல்லது” என்பதோடு இக்குறள் நின்றுவிடவில்லை. இவ்வாறு செய்வதால் பெரும் பலனும் உண்டு என்பதையும் இக்குறள் அறிவிக்கிறது.

“வேள்விகளைச் செய்வதால் விரும்பியவைகளைப் பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. அத்தகைய பெரும்பேறுகளை ஊன் உண்ணாமையாற் பெறமுடியும் என்பது வள்ளுவர் நம்பிக்கை” என்பதை இக்குறளால் அறிய முடிகிறது.

அது எவ் ‘அளவு’ நல்லது? என்பதை அளந்து காட்ட ஒன்று, பத்து, நூறு என உயர்த்திப் பின் ஆயிரம் வேள்விகளைச் செய்து பெறுகின்ற பெரும் பேறுகளை, ‘புலால் உண்ணாமை’ என்ற ஒன்றினால் மட்டும் பெறமுடியும் என, அளவைக் கணக்கில் இக்குறளில் அளந்து காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.

இவ் ‘அளவு’ கூறியும், வள்ளுவரது உள்ளம் அமைதி பெறவில்லை. “ஒன்றின் உயிரைக் கொன்று, அதன் ஊனை உண்ணாமைக்கு ஆயிரம் வேள்வியும் ஈடு ஆகா” என எண்ணுகிறார். எண்ணியபிறகு, “அதனினும் இது நல்லது” என்று கூறிவிட்டார். இவ் உண்மையை வேட்டலின் என்ற சொல்லே அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆயிரம் வேள்விகளையும் வேள்வி என்று பொதுவாகக் கூறிவிடாமல், ‘நெய்யை ஊற்றிச் செய்யப்படும் வேள்விகள்’ என்று குறிப்பிட்டிருப்பது பெரிதும் நயம் உடையதாகக் காணப்படுகிறது. இதனை “அவி சொரிந்து” என்ற இரு சொற்கள் காட்டுகின்றன.

உயிரை வதை செய்து செய்யப்படும் வேள்விகளை ஊன் உண்ணாமைக்கு ஒப்பிட்டுக் கூற வள்ளுவரது உள்ளம் ஒப்பவில்லை என்பதை இக் குறள் வெளிப்படையாகவே காட்டி விடுகிறது.

“வேள்வி வேட்டலைவிடப் புலால் உண்ணாமை உயர்ந்தது” என்று இக் குறள் கூறுவது எதன்பொருட்டு? என எண்ணிப் பார்க்கும்பொழுது வேள்வியில் தன் நல விருப்பும் புலால் உண்ணாமையில் தன் நல மறுப்பும் கலந்திருப்பதன் பொருட்டு! எனத் தோன்றுகிறது,

வடமொழி எதை நல்லது! சிறந்தது! உயர்ந்தது! என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கிறதோ, அதைத் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்கவில்லை என்பதை இக்குறள் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.

உயிர்களைக் கொன்று, அதன் ஊன் முதலியவைகளை வேள்வித் தீயிற் கொட்டி, விண்ணவரை மகிழ்வித்து வேண்டியவைகளைப் பெறலாம் என்பது வேதங்களின் கருத்து. அவ்விதமாயின் புலாலுண்ணும் தேவர்களைவிட உண்ணாதிருக்கும் மக்கள் நல்லவர்கள் என்பது இக்குறளின் கருத்து.

குறளை மறுபடியும் படியுங்கள்.

        அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
        உயிர் செகுத்து உண்ணாமை நன்று

பிற குறள்களிலும் இவ்வாறே புதைபொருள்கள் பல புதைந்து கிடக்கின்றன. ஆதலின் குறளை மேற்போக்காகப் படிப்பதைவிட ஊன்றிப் படிப்பது நல்லது. படித்து மகிழ்வதைவிட, அதன்படி நடந்து மகிழ்வது மிகவும் நல்லது.

"வாழட்டும் அன்புள்ளம்! வளரட்டும் அறநெறி!"