திருக்குறள் புதைபொருள் 1/007-013
7. குடம்பை
குடம்பை தனித்தொழியப் புட்புறங் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
இது கொல்லாமைக்குப் பின்னும் துறவுக்கு முன்னும் கூறியுள்ள "நிலையாமை" என்ற தலைப்பில் உள்ள ஒன்று.
நிலையாமையைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர், "நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்பவை என்று எண்ணி வாழும் வாழ்வு ஒரு இழிந்த வாழ்வு" என்று எடுத்த எடுப்பில் கூறியிருக்கிறார்.
அடுத்து, 'நெருநெல்', 'நாச்செற்று', 'நாளென', 'ஒரு பொழுதும்', 'கூத்தாட்டு' என்று தொடங்கும் குறள்களின் மூலம், "உலகம் நிலையாது, வாழ்வு நிலையாது, உயிர் நிலையாது, பொழுது நிலையாது, செல்வம் நிலையாது" என்று கூறிப் பின் இக் குறள் மூலமும் "நட்பு நிலையாது" என்றும் கூறுகிறார். இது வியப்பிற்குரியது.
உற்றார் உறவினர், மனைவி மக்கள் போன்ற எவரையும் நாம் ஒன்றாகவே கருதி ஒருமையிலேயே அழைக்கிறோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் உடலொன்றும் உயிரொன்றும் ஆக இரண்டு எனக் கருதும்படி செய்கிறது இக்குறள்.
இரு கூறுபட்ட உடலும் உயிரும் மாறுபட்டும், வேறுபட்டும் தோன்றாமல், ஒன்றுபட்டுத் தோன்றுகின்ற இந்நிலையை வள்ளுவர் “நட்பு” என்று இக் குறளில் குறிப்பிடுவது மிகுந்த பொருளமைதியுடையதாகும்.
உயிர் வருந்தினால் உடல் இளைத்துவிடுகிறது. உடலில் ஊசி குத்தினால் உயிர் துடிக்கிறது! ‘என்ன உடம் போடு உயிரிடை நட்பு?’ என்று எண்ணிப் பார்க்கச் செய்கிறது இக்குறள்.
உடல் தோன்றும்போதே உயிரும் தோன்றி, உயிர் பிரிந்தபோதே உடலும் அழியத் தொடங்குவதைக் காணும் பொழுது, “நட்பு” என்பது இம்முறையில்தான் இருக்க வேண்டும் என்று இக் குறள் கூறாமற் கூறுவதாகத் தோன்றுகிறது.
‘நட்பு’ என்ற தலைப்பிலும் கூறப்பட்டிராத இந்த உயர்ந்த கருத்தை ‘நிலையாமை’ என்ற தலைப்பில் வைத்துக் கூறியிருப்பதைக் காணும்பொழுது, இது நட்பை விளக்க வந்ததா? நிலையாமையை விளக்க வந்ததா? என்ற ஐயம் தோன்றுகிறது. எனினும், இவ்விரண்டையுமே விளக்க வந்தது என்று கொள்வது தவறாகாது.
“உடலைத் தனித்துவிட்டு உயிர் ஓடிப் போய்விடும்” என்று மட்டும் கூறினாற் போதாது என எண்ணி, வள்ளுவர் அதற்கொரு உவமையும் தேடிப்பிடித்து இக் குறளிற் புகுத்தியுள்ளார். அது “குடம்பை தனித்து ஒழிய, பறவை பறந்து போவதுபோல” என்பதே.
“குடம்பை” என்ற சொல்லுக்குக் கூண்டு என்றும் முட்டை என்றும் பொருள் கூறலாம். இவற்றில் வள்ளுவர் எடுத்துக் காட்டியது கூண்டையா? முட்டையையா? என்று இக்குறள் நமக்கு ஒரு ஐயப்பாட்டை உண்டாக்குகிறது.
‘ஒழிய’ என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து அழிவைக் குறிப்பிடுவதால், பறவை வெளிப்பட்டதும் கூண்டு அழியாமையாலும், முட்டை அழிந்துபடுவதாலும் ‘குடம்பை’ என்பது முட்டையையே குறிக்கும் எனக் கருத இடம் ஏற்படுகிறது.
‘புட்பறந்தற்றே’ என்ற சொற்றொடரை நோக்கும் போது, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும் உடனே பறப்பதில்லை; ஆதலின், கூண்டு என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.
கூண்டை விட்டுப் பறந்த பறவை மீண்டும் கூண்டுக்குள் வந்து புகுவதாலும், கூண்டு பறவையோடு உடன் பிறந்த தல்ல ஆதலாலும், உடலை விட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் அவ் உடலில் வந்து புகாமைபோல, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும், மீண்டும் முட்டைக்குள் சென்று புகுவதில்லை ஆதலாலும், முட்டை என்று பொருள் கொள்வதே நலம் எனத் தோற்றுகிறது.
முட்டையைவிட்டு வெளிவரும் எதுவும் ‘குஞ்சு’ என்றே பெயர் பெறுவதாலும், கூண்டைவிட்டுப் பறந்து செல்வதே புள் எனப்படும் ஆதலாலும், இக்குறளில் உள்ள ‘குடம்பை’ என்ற சொல் கூண்டையே குறிக்கும் எனக் கூறவேண்டியிருக்கிறது.
கூண்டா? முட்டையா? என்ற ஐயப்பாட்டில் மேலும் இறங்காமல், குடம்பை என்ற சொல்லுக்கு “கூடு” என்று பொருள் கூறுவதே நலமாக விருக்கும். எவ்விதமெனில், அது பறவையின் கூட்டிற்கும், முட்டையின் கூடுக்கும், மக்களின் உடலுக்கும் ஏற்ற ஒரு சொல் என்பதனாலேயாம்.
என்றோ ஒரு நாளில், எப்போதோ ஒரு பொழுதில் கூடு விட்டுப் புள் வெளிப்பட்டு விடுதல்போல, உடலைவிட்டு உயிர் ஓடிப் போய்விடும் என்று எச்சரிக்கை செய்கிறது இக் குறள்.
ஒன்றாகத் தோன்றி, ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக வருந்தி, ஒன்றாக அழிகின்ற உடலுயிரின் இத்தகைய உயர்ந்த நட்பே நிலைத்து நில்லாது என்றால், வேறு எவருடைய நட்பு நிலைத்திருக்கப் போகிறது? என்று இக் குறள் நம்மை எண்ணிப் பார்க்கும்படி தூண்டிக் கொண்டிருக்கிறது.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் விளக்கும் முறையும் அவர் கையாண்ட உவமையும் மிகமிக உயர்வானதாகும். இதுபோன்றதொரு கருத்தை உலகின் எப்பகுதியிலும், எம்மொழியிலும், எப்புலவனும் இன்றைக்கும் கூறவில்லை என்பதை எண்ணும்பொழுது தமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.
தம்பி! நீ ஒன்று அல்ல; மூன்று உடல் ஒன்று, உயிரி இரண்டு; நீ மூன்று. பறவை ஒன்று, கூடு இரண்டு; பார்க்கின்ற நீ மூன்று. உடலும் உயிரும் உள்ளவரையில்தான் நீயும் இருப்பாய்; அவை இரண்டும் உனக்குக் கட்டுப்பட்டது மல்ல; அதன் நட்பும் நீடித்ததல்ல. ஆதலின் உனது நிலையும் நீடித்ததல்ல. ஆகவே, அதற்குள் நீ நல்லதை எண்ணு! நல்லதைச் சொல்! நல்லதைச் செய்! இவைகளைச் செய்ய உன்னால் இயலாது என்று தோன்றினால், தீமையையேனும் எண்ணாதே! சொல்லாதே! செய்யாதே! இது உன்னால் முடியும்! முடியக்கூடிய எதையும் உடனே செய்! காலந்தாழ்த்தாதே! ஏனெனில்,
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
குறளை எடு! படி! எண்ணு! உணர்! செய்! அது உன் நல்வாழ்வுக்கு ஏற்ற வழியைக் காட்டும் ஒரு கைகாட்டி!
வளரட்டும் தமிழர் நெறி!