உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் புதைபொருள் 1/008-013

விக்கிமூலம் இலிருந்து


8. அகர முதல எழுத்தெல்லாம்

        அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
        பகவன் முதற்றே யுலகு

என்பது திருக்குறளில் முதற் குறள்.

தமிழ் எழுத்துக்கள் யாவும் அ' என்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதுபோல, இவ்வுலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்பது இதன் பொருள்.

எழுத்துக்களை அறிபவர்கள் முதலில் அகரத்தை அறிவதுபோல, இவ்வுலகத்தை அறிபவர்கள் முதலில் இறைவனை அறியவேண்டும் என்பது இதன் கருத்து.

உயிரெழுத்து 12. மெய்யெழுத்து 18. உயிர்மெய்யெழுத்து 216. ஆய்த எழுத்து 1. ஆக எழுத்துக்கள் 247-க்கும், ‘அ’ எழுத்து தலைமை தாங்குவதுபோல, மண், நீர், காற்று, தீ, வெளி ஆகிய ஐம்பெரும் பொருள்களைக் கொண்ட இவ்வுலகுக்கு இறைவன் தலைமை தாங்குகிறான் என்பது இதன் மறைபொருள்!

“அகர முதல எழுத்தெல்லாம்” என்பது தமிழ் எழுத்துக்களை மட்டும் குறிப்பதல்ல. மலையாள எழுத்திலும் முதல் எழுத்து ‘அ’. கன்னடத்திலும் முதல் எழுத்து ‘அ’, தெலுங்கிலும் முதல் எழுத்து ‘அ’ , இலத்தீன், கிரீக், ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மேல் நாட்டு மொழிகளிலும் முதல் எழுத்து ‘அ’ உருதுவிலும் முதல் எழுத்து ‘அ’. சம்ஸ்கிருதத்திலும் முதல் எழுத்து ‘அ’ நேற்று முளைத்து நடமாட வந்திருக்கும் இந்தியிலும் முதல் எழுத்து ‘அ’. ஆகவே, “அகர முதல எழுத்தெல்லாம்” என்பதற்கு, ‘தமிழ் எழுத்தெல்லாம்’ என்று பொருள் கொள்ளாமல், எழுத்து என்று எழுதப் பெறுகிற எழுத்தெல்லாம் என்று பொருள் காண்பதே சிறப்பாகும்.

பல மொழிகளைக் கொண்ட எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அதுபோல் பல்வேறு உயிர்களைக்கொண்ட இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது என்பது இதன் விளக்கமாகும்.

தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கிற, இனித் தோன்றவிருக்கிற எழுத்துக்கள் எல்லாம் 'அ' எழுத்தையே முதலாக உடையன என்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருமான் ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பிற்குரியதாகும்.

எழுத்துக்கள் மட்டுமின்றி சொற்களும்கூட அகரத்தையே முதலாக உடையனவாம். மக்கள் முதன்முதலில் வாயைத் திறந்தபோதே 'அ' ஒலித்துவிட்டது. பின் திறந்த வாயை மெல்ல மூடித் திறந்தால் "அம்மா" என்றும், அழுத்தமாக மூடித்திறந்தால் "அப்பா" என்றும் ஒலிக்கிறது. மக்கள் இவ்வுலகில் முதன்முதலிற் கண்ட தாய் தந்தையர்க்கு முதன் முதலில் ஒலிக்கிற சொற்களையே பெயராக வைத்திருப்பதும், அதிலும் மெல்லோசையை மென்மையையுடைய தாய்க்கும், வல்லோசையை வன்மையையுடைய தந்தைக்கும் வைத்து அழைப்பதும், ஆடு மாடுகளுங்கூட அலறும்பொழுது 'அம்மா' என்ற சொல்லே வெளி வருவதும், அச் சொல்லே எல்லாச் சொற்களுக்கும் முதன்மையாக அமைந்திருப்பதும் கருதத்தக்கன! தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகின் பலவிடங்களிலுமுள்ள பல மொழி பேசும் மக்களும் தங்களின் தாய் தந்தையரை 'அம்மா!' 'அப்பா!' என்றே அழைத்து வருவதையும், அதிலும் 'அ' எழுத்தே முதலில் அமைந்திருப்பதையும் காணும் பொழுது அகர முதல சொல்லெல்லாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

வடிவிலும்கூட அகரம் முன்நிற்கிறது. 'சர்வம் பிரணவ மயம் ஜகத்' என்று வேதாந்தங்களின் கருத்து. பிரணவம் என்பது ஓங்காரம் என வடநூலார் கூறுவர். தமிழிலோ வடமொழியிலோ, ஓங்காரம் முதல் எழுத்தாக இல்லை . உற்று நோக்கினால் 'அ' என்ற முதல் எழுத்தே ஓங்கார வடிவமாகத் தோன்றும்,

‘அ’ எழுத்தை முக்காற் பங்கு எழுதுங்கள். இன்னும் எழுதவேண்டிய காற்பங்கு போன்று மீதியாக இருக்கும் அதை அப்படியே செங்குத்தாக மேல் நோக்கிப் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். ஓங்கார வடிவைத் தலை கீழாகக் காண்பீர்கள். அதைக் காணும்பொழுது அகரமுதல வடிவெல்லாம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

வடிவு மட்டுமல்ல; ஒலியுங்கூட அவ்விதமே. பிரணவத்தின் ஒலி ‘ஓம்’ என்பது. இதை ஒலிப்பதனால் ‘அ’ என்று வாயைத் திறந்து, ‘உ’ என்று குவித்து, ‘ம்’ என்று மூடியாக வேண்டும். இதிலிருந்து ‘ஓம்’ என்பதை ஒலிக்க, அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களும் அவற்றின் ஒலிகளும் தேவை என்பது தெளிவாகும். அதை அறிந்தே சிவவாக்கியர் என்ற சித்தர் ஒருவர்-

        அகார காரணத்துளே அடங்கி நின்ற வையகம்
        உகார காரணத்துளே ஒடுங்கி நின்ற வையகம்
        மகார காரணத்துளே மயங்கி நின்ற வையகம்

என்று கூறினர் போலும். ‘ஓம்’ என்பதை ஒலிக்கும் இந்த அ, உ, ம் என்ற எழுத்துக்கள் மூன்றையும், ‘அ’ தன்னுள் அடக்கி நிற்பதைக் காணலாம், காணுங்கள்!

‘அ’ எழுத்தைச் சரிபாதியாக வெட்டுங்கள். மேற்பாதி வ ஆகவும், கீழ்ப்பாதி அதாவது ம தலைகீழாகவும் காணப்படும். மேல்பாதி வ-வை வலது கோடியில் வெட்டினால் உ என்றும் 1 என்றும் காணப்படும். இம்மூன்றும் அ, உ, ம என்றாகி ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிப்பதைக் கண்டு மகிழுங்கள். இதைக் காணும்பொழுது அகர முதல ஒலி எல்லாம் என்று கருத வேண்டியிருக்கிறது.

குறளில் உள்ள ‘எல்லாம்’ என்ற ஒரு சொல் ‘எழுத்தெல்லாம்’ என்பதில் எழுத்துடன் சேர்ந்தும், பிறகு தனித்தும் நின்று, சொல்லெல்லாம், வடிவெல்லாம், ஒலியெல்லாம் என்பவைகளையும் தன்னுள் அடக்கி, எல்லாம் என்று நிற்பதைக் காணும்பொழுது நமது உள்ளமெல்லாம் மகிழ்கிறது.

ஆதி பகவனையும் அகரம் விட்டுவிடவில்லை, அவனைப் பருப்பொருளாகவும், நுண்பொருளாகவும் காட்டுகிற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அகரத்தின் 1, உ, ம என்ற மூன்று துண்டுகளும் கடவுள், உயிர், மாயை என்றாகின்றன. ம, மாயையின் முதல் எழுத்து. உ, உயிரின் முதல் எழுத்து. 1 தனிக்கோடு இறைவனது அரு உரு. இது அகரம் காட்டுகின்ற ஆதிபகவனின் பருப்பொருளாம். அடுத்து நுண் பொருள்!

எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ‘அ’ நுண்ணியதாகக் கலந்தே உள்ளது, க் + அ, = க,ப்+அ =ப,ம்+அ+இ,= மி, த்+அ+உ.=து. ‘அ’ கலவாத எழுத்தே இல்லை. ஒலியும் அப்படியே. எதை ஒலிக்க வாயைத் திறந்தாலும் ‘அ’ எவ்வளவு நுண்பொருளாக மறைந்திருக்கிறதோ, அவ்வளவு நுண்பொருளாக ஆதிபகவனும் இவ்வுலகில் மறைந்து காணப்படுகிறான் என்பது வள்ளுவரது முடிவு!

அ, உ, ம என்ற மூன்றையும் கடவுள், உயிர், மாயை எனக் கண்டோம். சித்தாந்திகள் இதனைப் பதி, பசு, பாசம் என்பர். இவற்றின் நிலைமையை அகரம் அப்படியே காட்டுகிறது. உற்று நோக்கினால் குறளில் உள்ள உலகையே அகரத்துள் காணலாம். காணுங்கள்! முதலில் மூன்று துண்டுகளையும் ஒன்று சேர்த்து அகரமாக்கி உற்று நோக்குங்கள்.

“தனிக் கோடாகிய இறைவன், உயிர் தன்னை வந்து அடையட்டும்” எனக் கருணை காட்டி உயிர் முன் வந்து நிற்கிறான்.

‘உ’ என்ற உயிர் இறைவனை அடையத் துடியாய்த் துடித்து அவன் பக்கம் நீண்டு செல்லுகிறது,

‘ம’ என்ற மாயையானது உயிரை முழுதும் பற்றிக் கொண்டு, இறைவனையடையவிடாமல் தடுத்து, தலை கீழாகத் தொங்கி ‘எ’ இவ்வுலகுக்கு இழுக்கிறது. 

'உயிரானது மாயையையும் விட முடியாமல், இறைவனையும் அடையமுடியாமல் இடையில் துன்புற்று வருந்திக்கொண்டிருக்கிறது! என்பது, அகரத்துள்ளே அடங்கி நிற்கின்ற இவ்வுலக நிகழ்ச்சி!

உலகம் இறைவனை முதலாக உடையது என்று கூறியதிலிருந்தே, உயிரை இரண்டாவதாகவும், மாயையை மூன்றாவதாகவும் உடையது என்பது தானாகவே தோன்றும். இம் மூன்றும் முப்பொருள் உண்மை எனப்படும். இதனை அகரம் தன்னுட் கொண்டு ஒளி வீசுகிறது.

‘அ’ முன்னும் ‘உலகு’ பின்னும் உள்ள இக் குறளை இன்னும் ஒருமுறை படியுங்கள். அதன் புதைபொருள் களனைத்தும் நன்கு விளங்கும்.

        அகர முதல எழுத்து எல்லா (வற்றிற்கும்) ஆதி
        பகவன் முதற்றே உலகு!