திருக்குறள் புதைபொருள் 1/009-013

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. அப் பற்றைப் பற்றுக!

        பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

இதுவரை இக்குறளுக்குப் பொருள் கூறவந்தவர்கள் அனைவரும், “இவ்வுலகப் பற்றை விடுவதற்கு இறைவனுடைய பற்றைப் பற்றுக” என்றே கூறியிருக்கிறார்கள். இது பொருந்தவில்லை. இவ்வுரை உண்மையாகுமானால், குறள் அடியிற் கண்டவாறு இருப்பதே போதுமானது. அது,

பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு

என்பதே. குறளில் “அப்பற்றைப் பற்றுக” என்று மேலும் இரு பற்றுகள் காணப்படுகின்றன. அவற்றின் பொருள் யாது? என சிந்தனை செய்தாகவேண்டும்:

“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று கூறிவிட்டு, மறுபடியும் அதையே திருப்பி அப் பற்றைப் பற்றுக" என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் எனப் பொருள்காண்பது வள்ளுவருக்குப் பெருமை தராது. ‘அது கூறியது கூறல்’ என்ற குற்றத்தின் பாற்படும். குறளில் அவ்விதம் காண்பதாகக் கூறுவது உண்மையைக் காண விரும்பாதவர்களின் கூற்றாக இருக்குமே தவிர உண்மையாக இராது.

பரிமேலழகரும் அவரைத் தழுவிய பிறரும் எடுத்த எடுப்பிலேயே செய்த தவறெல்லாம், ‘பற்றற்றான்’ என்பதற்கு ‘இறைவன்’ என்று பொருள் கண்டதேயாகும். அதன் பொருள் ‘இறைவன்’ அல்ல; ‘துறவி’ என்பதே.

“இவ்வுலகப் பற்றைத் துறந்த துறவியை முதலிற் பற்று; பிறகு அவன் பற்றியிருக்கிற இறைபற்றைப் பற்று; அப்போது இவ்வுலகப்பற்று எளிதில் விடும்” என்பது இக் குறளிற் புதைந்து கிடக்கும் பொருளாகும். இப்பொருள் தான் சரி என்பதற்கு நமக்குக் கிடைத்த புறச்சான்று ஒன்று உண்டு. அது சைவ சமய நூற்களும், பிற சமய நூல்களும் ஞானாசிரியனைப் பற்றியே இறைவனைப் பற்றவேண்டும் எனக்கூறி இருப்பதேயாம்.

கிடைத்த அகச்சான்றுகளும் இரண்டுண்டு. 1. இக்குறள் கடவுள் வாழ்த்தில் கூறப்பெற்ற ஒன்றல்ல. ஆகவே “பற்றற்றான்” என்பதற்கு ‘இறைவன்’ என்ற பொருள் பொருந்தாது. 2. இக்குறள் ‘துறவு’ என்ற தலைப்பிலேயே கூறப் பெற்றுள்ளது. ஆகவே பற்றற்றான் என்பது துறவியையே குறிக்கும்.

‘துறவு’ என்ற தலைப்பில், இதனுடன் உள்ள மற்ற ஒன்பது குறள்களும் துறவியைப் பற்றியே கூறியிருக்கும் பொழுது, இக் குறளை மட்டும் கடவுளைப்பற்றிக் கூறியிருப்பதாக எண்ணிய எண்ணமே தவறான பொருளைக் காண்பதற்கும், ‘அப்பற்றைப் பற்றுக’ என்பதற்குப் பொருள் கூற முடியாமற் போனதற்கும் காரணமாயிற்று.

ஆகவே, "பற்றற்ற துறவியைப் பற்று, பின் அவன் பற்றியிருக்கும் இறைபற்றைப் பற்று. அப்போது உலகப்பற்று எளிதில் விடும்" என்ற பொருளே இதன் உண்மையான பொருள் எனக் கொள்ளலாம்.

குறளை மறுபடியும் படியுங்கள். இப்போது அதன் உண்மைப் பொருள் நன்கு விளங்கும்.

        பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு