திருக்குறள் புதைபொருள் 2/003-010
3. அடக்கமுடைமை
"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினுஉங் கில்லை உயிர்க்கு."
என்பது திருக்குறளில் அடக்கமுடைமை என்ற தலைப்பில் இரண்டாவதாக வந்துள்ள குறள்.
நாமெல்லாம் பொன்னையும் பொருளையும் உடைமைகள் எனக் கருதி வருகிறோம். வள்ளுவரோ இவையல்லாத உடைமைகளைப் பற்றிக் கூறுகிறார். அவைகளையும் அதிகாரத்தின் தலைப்புகளாக அமைத்திருக்கிறார். அவை பத்து. அவற்றை வரிசையாக வைத்து முறைப்படுத்தினால் முதலில் வந்து நிற்பது “அடக்க முடைமையே” அதைத் தொடர்ந்து வருகிற மற்ற உடைமைகள் அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை நாணமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பன.
ஆற்றலுள்ளவர் அடங்குவதற்கே “அடக்கம்” என்று பெயர். ஆற்றலற்றவரின் அடக்கம் ‘அடக்கம்’ என்ற பெயரைப் பெறாது. “கற்றுணர்ந்து அடங்கல்” “ஆன்றவிந்து அடங்கல்” என்ற சொற்களே இதனை மெய்ப்பிக்கும்.
இத்தகைய அடக்கமும் பலவகையாம். அவற்றுள் தலைமை வகிப்பன மூன்று. அவை மனஅடக்கம், நாவடக்கம், உடலடக்கம் என்பன. இவை மூன்றும் தீய எண்ணங்களை எண்ணாமை, தீய சொற்களைச் சொல்லாமை, தீய செயல்களைச் செய்யாமை என்றாகும்.
அடக்கம் இன்பத்தையும், அடங்காமை துன்பத்தையும் தருமாதலின் வாழ்வைச் செம்மைப்படுத்தி உயர்த்த இன்றியமையாத ஒன்று “அடக்கம்” என்பதையே, இக் குறள் வற்புறுத்துகிறது.
எதையும், எதிலும் அடக்க வேண்டுமானாலும், அது ஒரு பொருளாக இருந்தாகவேண்டும். இன்றேல், அது அடங்கவும் செய்யாது; அடக்கவும் முடியாது. அடங்குதல் என்றுமாகாது. ஆகவே, அடக்கம் தானாகவே ஒரு பொருளாகிவிடுகிறது. அதை எண்ணியே அடக்கத்தை ஒரு பொருளாக மதிக்கும்படி வள்ளுவர் இக்குளிற் கூறுகிறார். இது எண்ணி எண்ணி மகிழக்கூடிய ஒன்று.
பயிரும், பொருளும் பாதுகாக்கத் தக்கவை. இன்றேல் இவை இரண்டும் அழிந்துபடும். அடக்கம் ஒரு பொருளாக ஆகும்பொழுது, அதைப் பாதுகாத்தாக வேண்டும் என்பதும் பெறப்படும். அதனாலேயே, “காக்க பொருளா அடக்கத்தை” என்று இக்குறள் நமக்குக் கடுங் கட்டளை யிடுகிறது.
காக்காவிடல் தீமை விளையும் என்பது மட்டுமல்ல, காப்பதால் நன்மை விளையும் என்பதும் வள்ளுவரது கருத்து. இதை இக்குறளிலுள்ள “ஆக்கம்” என்ற சொல் விளக்கிக்கொண்டிருக்கிறது.
அடக்கமான வாழ்வினாற் பெறுகின்ற ஆக்கம் மிக உயர்ந்த ஆக்கமெனவும், அதைவிடச் சிறந்த ஆக்கம் வேறில்லையெனவும், வள்ளுவர் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை, "ஆக்கம் அதனினூஉங் கில்லை” என்பதால் நன்கறியலாம்.
“உயிர்” என்பது பொதுவாக அனைத்துயிரையும் குறிக்கும். எனினும், அறிந்து அடங்கிப் பயன்பெறுவது மக்களே ஆதலின், இது மக்கள் உயிரை மட்டுமே குறிக்க வந்ததாகும்.
ஆகவே, மக்களாய்ப் பிறந்தோரனைவரும் தங்களுக்குப் பெரும் பயனைத் தருகின்ற அடக்கத்தை ஒரு உயர்ந்த பொருளாகக் கருதி, நன்கு பாதுகாத்தாக வேண்டும் என்பது இக்குறள் கூறும் முடிவு.
நல்ல சொற்கள் பலவற்றோடு ஒரு தீச்சொல் கலந்து வருமாயின், அனைத்துமே தீய சொற்களாகிவிடும். தீயினாற் சுட்ட புண்கள் விரைவில் ஆறிவிடுவதைப் போல, நாவினாற் சுட்ட புண்கள் ஆறிவிடுவதில்லை. ஆகவே எதை அடக்கமுடியாவிடினும் நாவை அடக்கியே ஆகவேண்டும். இன்றேல் வாழ்வில் இழுக்குப்படும். மனஅடக்கமும், நாவடக்கமும் கொண்டு வாழ்கின்ற வாழ்வு மிகச் சிறிய வாழ்வாக இருப்பினும், அது மலையினும் உயர்ந்து காணப்படும் பெரு வாழ்வாக அமையும். ஆகவே, தம்பி! அடக்கம் என்னும் அருஞ்செல்வத்தை அடைந்து, அதை ஒரு பொருளாகக் கருதிப் போற்றி பாதுகாத்து வா; அது உன் வாழ்வின் தரத்தையே உயர்த்திவிடும்.
வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!