திருக்குறள் புதைபொருள் 2/010-010

விக்கிமூலம் இலிருந்து

10. நோய் செய்தார் மேல!

       "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது இன்னா செய்யாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று.

வெகுளாமையைப் பற்றிக் கூறிய பின்னும், கொல்லாமையை பற்றிக் கூறுவதன் முன்னும், "இன்னாசெய்யாமை” என்பதுபற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.

“நோய் எல்லாம் நோய் செய்தவர் மேல் ஆகும்; ஆதலின் நோயின்மை வேண்டுபவர் பிறர்க்கு நோய் செய்யார்” என்பது இதன் பொருள்.

திறக்குறள்களுக்கு உள்ள தனிச்சிறப்புகள் பல அவற்றுள் ஒன்று “மேற்போக்காகப் படிப்போர் அறிய முடியாத பல உயர்ந்த கருத்துக்களைச் சிந்திப்போருக்கு அது வழங்கிக்கொண்டிருக்கிறது” என்பதே!

இக் குறளில் ஆழ்ந்துள்ள பொருள்களைக் காணுமுன்னே, “நோய்” என்ற சொல்லுக்குப் பொருள் கண்டாக வேண்டும்.

திருக்குறளில் “நோய்” என்ற சொல் 34 இடங்களில் காணப்படுகிறது. ஆறு வகையான பொருள்களில் வள்ளுவர் இதனைக் கையாண்டிருக்கிறார்.

“துன்பம்” என்ற பொருளில் வந்த குறள்கள் 14; அவை 261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1229, 1241, 1243, 1266, 1303.

‘உடற்பிணி’ என்ற பொருளில் வந்த குறள்கள் 5; அவை 853, 941, 946, 947, 948.

“காமப்பிணி” என்ற பொருளில் வந்த குறள்கள் 11; அவை 1091, 1147, 1159, 1171, 1175, 1176, 1183, 1246 1255, 1280, 1301.

“குற்றம்” என்ற பொருளில் வந்த குறள் 1; அது 821. “வினைப்பயன்” என்ற பொருளில் வந்த குறள் 1: அது 360. “இன்னா” என்ற பொருளில் வந்த குறள் 1; அது இது.

“இன்னா” என்பது “இனிய” என்பதன் எதிர்மறை. “இன்னாதன” என்பது “இனியதல்லாதவை” என்று பொருள்பெறும். இது நல்லறிஞர்களாலே எண்ணத்தகாததும், சொல்லத்தகாததும், செய்யத் தகாததுமாம்.

பெருஞ்சிறப்பைத் தருகிற அருஞ்செல்வங் கிடைப்பதாயினும் பெரியோர் பிறர்க்கு இன்னா செய்யார். பெருஞ் சீற்றத்துடன் ஒருவன் தனக்கு இன்னா செய்த விடத்தும் அறிஞர் அவர்க்கு இன்னா செய்ததில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யாமை இயல் புடையவரது செயல். இன்னா செய்தார்க்கு விதிக்கப் படும் கொடுந் தண்டனை அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுவது, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது என அறிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது பெருந்தவறாகும். எப்போதும் யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே தலையாய அறம். பிறர் தனக்குச் செய்த இன்னாதனவற்றின் துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதையே பிறனுக்குச் செய்ய விரும்புவது ஏன்? இன்னாதவற்றை ஒருவன் பிறனுக்கு முன்செய்தால் அது அவனுக்கு பின்னே வந்து சேரும் என்ற கருத்துக்களை ஒன்பது குறள்களாற் கூறிய வள்ளுவர், இறுதிக்குறளாகிய இக்குறளில் “ஒருவன் செய்த நோய் அவனையே வருத்து மாதவின், நோயில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்கு நோய் செய்யமாட்டார்கள்” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

“நிலத்தில் அறைந்தவன் கை வலியெடுக்கத் தப்பாதது போலப் பிறருக்குத் துன்பஞ்செய்தவன் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது” என முன்னொரு குறளிற் கூறியிருந்தார். அக்குறளிலிருந்து அறையப்பெற்ற நிலத்திற்கு சிறிது அதிர்ச்சியும், அறைந்தவனது கைக்குப் பெருவலியும் உண்டாகும் என அறிந்தோம் என்றாலும் அதனதன் பங்கு எவ்வளவு இருக்கும்?" என்று ஐயுறுவாரை நோக்கியே, இக்குறள் கூறப்பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒருவன் பிறருக்கு இன்னா செய்தால், செய்தவனுக்கு 99 பங்கு துன்பமும், செய்யப் பெற்றவனுக்கு ஒரு பங்கு துன்பமும் கூட இல்லை. 100 பங்கு துன்பமும் செய்தவனுக்கேயாம் என்று இக்குறள் கூறுகிறது. இவ்வுண்மையை இக்குறளிலுள்ள “நோய் எல்லாம்” என்ற இரு சொற்களிற் கண்டு மகிழுங்கள்.

“ஒருவனுக்குத் தான் செய்த கொடுமை உடனே தனக்கு வராவிடினும், பின்பொருகால் உறுதியாக வந்து சேரும்” என்ற கருத்தையும், இக்குறளிலுள்ள “ஆம்” என்ற சொல் காட்டிக்கொண்டிருக்கிறது.

“துன்பமானது ஒருவனுக்கு வெளியிலிருந்து பிறர் செய்து வருவதுமட்டுமல்ல; ஒருவன், தானே தன் செயலாலேயே அதைத் தேடிக்கொள்ளவும் வரும்” என்பதை இக்குறள் கூறாமற் கூறுகிறது.

“வைகிறவன் வையப்படுவான்; அறைகிறவன் அறையப்படுவான்” என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை. வாழ்த்துகிறவன் வாழ்த்துப் பெறுவான், அன்பு செலுத்துகிறவன் அன்பைப் பெறுவான்“ என்பதும். இவ்வுண்மையை இக்குறளில் வள்ளுவர் ”நோயின்மை வேண்டுபவர் நோய் செய்யார்" என்ற சொற்றொடரால் விளக்குவது எண்ணி எண்ணி மகிழக்கூடியதாகும்.

அண்மையில் நான் சிறையில் இருந்தபொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற ஒரு கொலையாளியைச் சந்திக்க நேர்ந்தது. அவன் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதைக் க ண் டு வியப்படைந்து காரணம் வினவினேன்.

"என் தந்தைக்குத் தானே தேடிய சொத்து சிறிது இருந்தது. அவர் அதை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் கொடுக்காமல் பிறருக்கு உயில் எழுதிவைக்க முயன்றார். நான் எவ்வளவோ கூறியும் கேளாததால் கொன்றுவிட்டேன். உயிலும் எழுதவில்லை. என் தந்தையும் இறந்துவிட்டார். நானும் இறக்கப்போகிறேன். சொத்து என் பிள்ளைகளைச் சேர்ந்துவிடும். என் எண்ணம் நிறைவேறி விட்டது. நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும். சாவை மகிழ்வோடு வரவேற்கின்றேன். இன்னும் சில நாட்கள் சென்று தூக்கிலிடுவதைவிட இன்றே தூக்கிவிட்டால் இன்னும் மகிழ்வோடு சாவேன்' என நெஞ்சு நிமிர்ந்து கூறினான்.

நான் பெரிதும் வியப்படைந்ததோடு, “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல்” என்ற குறளும் பொய்த்து விட்டதே? என்ற ஐயமும் கொண்டு, “சாவை விரும்புவதிலும் விரைவாக விரும்புவது ஏன்!” என்று வினவினேன்.

“என் தந்தையைச் சுவரில் சாய்த்துவைத்துக் கழுத்தில் கையை வைத்து நெறித்தேன். அப்போது அவரது விழிகள் பிதுங்கின. ”அட பாவிப் பயலே, இதற்காகவா உன்னை வளர்த்தேன்?“ என்பது அவர் வாயிலிருந்து வந்த கடைசிச் சொற்கள், விழி பிதுங்கிய அவரது முகத்தோற்றம், ஒவ்வொரு வினாடியும் என் கண்முன்னே தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அவரது கடைசிச் சொற்கள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. உண்ண, உறங்க, படிக்க, படுக்க, இருக்க என்னால் முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் கொலைத் துன்பத்திலும் கொடிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் இறப்பதன்மூலம் இத் துன்பம் ஒழிந்துவிடும். ஆதலின் சாவை இன்றே, இப்போதே மகிழ்வோடு வரவேற்கிறேன்” என்றான்.

எப்படி “நோய் எல்லாம் நோய் செய்தார் மேல வாம்” என்ற குறளின் பொருள்? இதனால் “நாம் பிறர்க்குச் செய்யும் துன்பம் அனைத்தும் பின் நம்மையே வந்து வருத்தும்” என்பது நன்கு விளங்குகிறது. இவ் உண்மையை நாம் இப்பொழுதுதான் காண்கிறோம். இதனை வள்ளுவர் கண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாயின. என்னே அவரது அறிவின் பெருமை! படியுங்கள் குறளை மறுபடியும்.

       "நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
        நோயின்மை வேண்டு பவர்."

எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! காணுங்கள் உண்மையை! அந்த அளவோடு நின்று விடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்!

வாழட்டும் திருக்குறள்!
வளரட்டும் குறள்நெறி!