திருக்குறள் மணக்குடவருரை/அவாவறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து

௩௭-வது.-அவா வறுத்தல்.

அவாவறுத்தலாவது, பொய்ப் பொருள்கள் மேல் செல்லும் ஆசையைத் தவிர்த்தல். முத்திக்குக் காரணம் மெய்யுணர்தலே அமையுமாயினும், பின்னும் உடம்போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள் மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம். ஆதலான், இதனைத் தவிரவேண்டு மென்று எல்லாவற்றினும் பின் கூறினார்.

ஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

இ-ள்:- ஒருவனை வஞ்சிப்பது அவா-ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை; (ஆதலான்), அஞ்சுவது அறன்-(அதனை) அஞ்சுவதே அறம்.

வஞ்சனை செய்தலாவது முன்னே நன்றி செய்வாரைப் போல் நின்று பின்பு தீக்கதியுள் உய்த்தல். [ஓரும் என்பன இரண்டும் அசை.]

இஃது, ஆசையின்மை வேண்டு மென்றது. ௩௬௧.

வாவில்லார்க் கில்லாகும் துன்பம்; அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

இ-ள்:- அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும்-ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் (துன்பம்) தவாது மேல் மேல் வரும்-அது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

இஃது, அவாவால் துன்பம் உண்டாகு மென்றது. ௩௬௨.

வாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

இ-ள்:- எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்-எல்லா உயிர்களுக்கும் எல்லா நாளும், தவா பிறப்பு ஈனும் வித்து-கெடாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது, அவா என்ப-ஆசை யென்று சொல்லுவர் (நல்லோர்).

இது, அவாவானது துன்பம் தருதலே யன்றிப் பிறப்பைத் தரு மென்றது. ௩௬௩.

ற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்
அற்றாக அற்ற திலர்.

இ-ள்:- அற்றவர் என்பார் அவா அற்றார்-(பற்று) அற்றவர் என்பார் ஆசையற்றவரே; மற்றையார் அற்றாக அற்றது இலர்-(ஆசையறாது) பற்றினை அறுத்தார் ஆசையற்றார் பற்றற்றது போலப் பற்றற்றது இலர்.

[அற்றாக-அத்தன்மைத்தாக-ஆசையற்றார் பற்றற்றது போல.]

இஃது, ஆசையுள்ள நாளெல்லாம் பற்றற்றவ ராகா ரென்றது. ௩௬௪.

தூஉய்மை என்ப தவாவின்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

இ-ள்:- தூய்மை என்பது அவாவின்மை-(ஒருவர்க்கு) அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அது வாய்மை வேண்ட வரும்-அவ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். [மற்று என்பது அசை.]

இது, (பொருள் மேல் ஆசையில்லாதார் பொய் கூறாராதலின்,) மெய் சொல்ல அவாவின்மை வருமென்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. ௩௬௫.

வாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

இ-ள்:- அவாவினை ஆற்ற அறுப்பின்-ஆசையை மிகவும் போக்குவானாயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும்-கெடாத வினை தான் விரும்பும் நெறியாலே வரும்.

[ஆற்ற-மிகவும்-முற்றிலும்.கெடாத வினையாவது அறம்.]

இஃது அவாவின்மையால் அறம் கைகூடு மென்றது. ௩௬௬.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
யாண்டும் அதுவொப்ப தில்.

இ-ள்:- வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை-அவாவின்மை போன்ற மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை; ஆண்டும் அது ஒப்பது இல்-அவ்விடத்திலும் அதனை ஒப்பது பிறிதில்லை.

[மிக்க செல்வம்-உயர்ந்த செல்வம். இவ்விடம்-இல்வுலகம். அவ்விடம்- சுவர்க்க லோகம்.]

இஃது, அவாவின்மையின் மிக்கதோர் பொருள் இல்லை யென்றது. ௩௬௭.

ன்பம் இடையறா தீண்டும்; அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

இ-ள்:- அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின், இன்பம் இடையறாது ஈண்டும்-இன்பமானது இடையறாமல் (வந்து) மிகும்.

இஃது, அவாவின்மையால் இன்பமும் வரு மென்றது. ௩௬௮.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

இ-ள்:- வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்-(ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும் -பிறவாமை (பொருளை) விரும்பாமையை விரும்பத் தானே வரும்.

இஃது, அவாவின்மையால் பிறவாமையும் வருமென்றது. ௩௬௯.

ரா இயற்கை அவாநீப்பின்; அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

இ-ள்:- ஆரா இயற்கை அவா நீப்பின்-நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவனாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும்-(அது) விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும்.

இயல்பாவது, என்றும் ஒருபடிப்பட்டது.

இது, அவாவின்மையால் உயிர் தனது மெய்யுருவைப் பெறு மென்றது. ௩௭0.