உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/இரண்டாவது

விக்கிமூலம் இலிருந்து

13-ம் அதிகாரம்.
ஆங்கிலோ பிரஞ்சு கர்னடக இரண்டாவது யுத்தம்.

ட்யூப்ளேயின் சூழ்ச்சியினால் மைசூராரும் முரஹரிராவும் மஹமடாலி கக்ஷியைவிட்டு நீங்கினர். டால்டன் மைசூராரை ஸ்ரீரங்கத்தில் தாக்கினான். அவன் தோற்கடிக்கப்பட்டு திருச்சிக்கு ஓடிவர (1675), அவரால் வளைந்து கொள்ளப்பட்டான். திருவையாற்றில் பிரஞ்சு, மஹாராஷ்ட்ரருடன் சண்டை செய்து கொண்டிருந்த லாரென்ஸ் திருச்சிக்கு வந்தான். அதே சமயத்தில் மைசூராருக்கு உதவிசெய்ய பிரஞ்சு மஹாராஷ்ட்ர ஸைன்யங்களும் வந்தன.

ஸ்ரீரங்கத்திலிருந்த பிரஞ்சு மைசூராரை லாரென்ஸ் முத்தரசநல்லூரிலிருந்து தாக்கினான். ஒன்றும் பலிக்கவில்லை. பிரஞ்சாரிடம் யுத்தப்பயிற்சி பெற்ற தகுந்த தலைவர் பலர் இருந்தனரென்பதும் ஸ்ரீரங்கத்தைவிட்டு அவர்களைத் துரத்த முடியாதென்பதும் லாரென்ஸுக்குப் புலப்பட்டது. பிறகு அவன் பக்கிரித் தோப்பில் தங்கினான். புதுக்கோட்டை, தஞ்சாவூருடன் அவன் போக்குவரவு செய்வதைத் தடுக்க பிரஞ்சார் அவனுக்குத் தென்புரம் தங்கினார் . லாரென்ஸ் பக்கிரிப்பாறைக்குச் சென்றான். அங்கிருந்து அவன் துரத்தப்படவே, நின்று யுத்தம் செய்தான். பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டு அந்த ப்ரதேசத்தைவிட்டு நகந்தனர்.

டால்டனைத் திருச்சியில் வைத்து விட்டு லாரென்ஸ் சஞ்சாவூருக்குச் சென்றுத் திரும்புகையில் பிரஞ்சார் அவனைத்தடுக்கும் பொருட்டு பிரஞ்சுப் பாறையிலிருந்து பக்கிரிப்பாறைவரையிலும் நின்றார். லாரென்ஸ் அவரைத் தோற்கடித்துத் திருச்சிக்குள் வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் தங்கியிருந்த பிரஞ்சாரைத் தாக்கச்சென்றான் லாரென்ஸ். அவர் முத்தரசநல்லூருக்கு ஓடினார். லாரென்ஸ் மலையைப் பிடித்துக்கொள்ளாததால் அவர் திரும்ப வந்து விட்டனர்.

காவேரிக்குத் தெற்கிலேயே இருந்து கொண்டுத் தங்களுக்குச் சாமான்கள் வந்து சேருவதை பிரஞ்சார் தடுத்துக்கொண்டே யிருந்ததால் லாரென்ஸ் பெருமுயற்சி யெடுத்து அவரைத்தாக்க பிரஞ்சுபாறையில் தங்கினான். பிரஞ்சாரும் கற்கண்டுப் பாறையில் தங்கினர். நடந்த யுத்தத்தில் பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டு காவேரிக்கு வடக்கே துரத்தப்பட்டனர்.

உய்யக்கொண்டான் திருமலையிலிருந்த பிரஞ்சாரும் லாரென்ஸால் துரத்தியடிக்கப்பட்டனர்.

பிறகு லாரென்ஸ் தஞ்சாவூருக்குச் சென்றான். பிரஞ்சார் கடைசியாக திருச்சிக்கு வர ஒரு இராமுயற்சியெடுத்து கோட்டைக்கு வடமேற்கிலிருந்த டால்டன் பாட்டெரியைத் தாக்கினர். இந்த பாட்டெரியைச்சுற்றி ஒரு அகிழும் அகிழில் ஒரு பாறையுமிருந்தன. கோட்டையின் வெளிச்சுவற்றிற்கு வெளியேயிருந்த இந்த பாட்டெரியிலிருந்து தெப்பக்குளத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள மெய்ன் கார்ட்கேட் வரையில் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது. வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் மத்தியில் வளைந்து வளைந்து சென்ற ஒரு பாதைவழியேதான் கோட்டை மேலவாசலுக்கு வரக்கூடும்.

அகிழில் பாறையிருந்ததால் இரவில் சுலபமாய் ஏணிகளைக்கொண்டு பிரஞ்சார் பாட்டெரிமேல் ஏறிவிட்டனர். தூங்கிக்கொண்டிருந்த காவலாளிகளைக் கொன்று விட்டு சத்தம் செய்யாமல் பீரங்கிகளைக் கைப்பற்றினர். சிலர் இருட்டில் வாசலுக்குவர யத்தனித்ததில் அகஸ்மாத்தாய் ஒரு குழியில் விழுந்து உதவிக்குக் கத்தினர். பாட்டெரிமேவிருந்த பீரங்கிகளும் கோட்டையின் பேரிலேயே திருப்பப்பட்டன.

லெப்டினன்ட் ஹாரிஸன் கேட்டின் மேல்சுவரில் ஏறி நின்றான். பிரஞ்சாரில் சிலர் வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் மத்தியிலுள்ள பாதைவழியே கதவை உடைக்க இருப்புலக்கைகளுடன் வந்தனர். ஆங்கில ஸேனையிலிருந்து ஓடிவிட்ட ஒருவன் அவருக்கு வழிகாட்டினான். வேறு சிலர் ஏணிகளைக்கொண்டு சுவரேற யத்தனித்தனர். கேட்டின் மேலிருந்த இங்கிலீஷார் இருட்டில் ஒன்றும் தெரியாமல் சுட்டுக்கொண்டே யிருந்தனர். தெய்வ ஸங்கல்பமாய் வழிகாட்டியும் இருப்புலக்கைக்காரரும் கொல்லப்பட்டனர்; ஏணிகளும் ஒடிந்து விட்டன ; பிரஞ்சாரும் பயந்து திரும்பியோடினதில் அகிழிலும் பாறையின் மேலும் குதித்து தங்களையே காயப்படுத்தி அல்லது கொன்று கொண்டார்கள். பாட்டெரியிலிருந்தவர் கோட்டையின் பேரில் சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். ஆங்கிலரும் சுட்டுக்கொண்டேயிருந்தார், இரு கக்ஷியாரும் சூரியோதயத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். பொழுதும் விடிந்தது. பிரஞ்சாரும் சரணமடைந்தார். தெய்வாதீனமாய் குழியில்லாமலிருந்தாலும் இருப்புலக்கைக்காரர் கொல்லப்படாமலிருந்தாலும் வழிகாட்டி இறக்காமலிருந்தாலும் பிரஞ்சார் ஜயமடைந்திருப்பர்.

1676-ல் தை மாசத்தில் தஞ்சாவூரிலிருந்து சாமான் கொண்டுவந்த ஆங்கில சைன்யம் அனுபோகமில்லாத சேனாபதியின் முட்டாள் தனத்தால் தோற்கடிக்கப்பட்டது. கூத்தப்பாரில் ஆங்கிலரை மஹாராஷ்ட்ரரும் மைசூராரும் பிரஞ்சு உதவியைக்கொண்டு எதிர்த்தனர். ஆங்கிவருள் அனேகர் கொல்லப்பட்டு 150 பேர் வரையில் கைதிசெய்யப்பட்டனர். திருவெறும்பூரிலிருந்து உதவிக்கு வந்தவராவது ஏக காலத்தில் ஒரே கூட்டமாய் வந்திருக்கலாம். அப்படியுமில்லை.

அதே வருஷம் சித்திரை மாசம் 31-ம் தேதி பொன் மலைக்கருகில் நடந்த மற்றொரு சண்டையில் பிரஞ்சார் துரத்தியடிக்கப்பட்டனர்.

பிறகு பிரஞ்சார் புதுக்கோட்டைக்குள் சென்று சில கிராமங்களைக் கொளுத்தினர். ஆங்கிலருக்கு உதவி செய்த தப்பிதத்திற்காக தொண்டமானை தண்டிக்க முடியாமல் போனதால் கிளியூரையும் கோவிலடியையும் பிடித்துக்கொண்டு காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவேயுள்ள கரையை இடித்தனர். எதிர்த்து வந்த தஞ்சாவூராரும் கோற்கடிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் முரஹரி ராவ் கர்னாடகத்தைவிட்டு வடக்கே சென்றான்.

லாரென்ஸ் மறுபடியும் தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் பொன்மலைக்குச் சமீபத்தில் எதிர்க்கப்பட்டான். பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டனர். சண்டையினால் அலுப்படைந்த பிரஞ்சு கவர்ன்மெண்டார் ட்யூப்ளேயை ஊருக்கழைத்தார்கள். சமாதானம் செய்து கொள்ளப்பட்டு சண்டையும் நிறுத்தப்பட்டது.