உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/சோழர் நாடு

விக்கிமூலம் இலிருந்து

2-ம் அதிகாரம்.
சோழர் நாடு.

திரிசிரபுரத்தில் வெகு காலமாய் இருந்த ஜனங்கள் சோழர். அவர் ஆரியரா அனாரியரா என்றாவது எங்கிருந்து எவ்விதம் இவ்வூருக்கு வந்தார் என்றாவது சொல்லமுடியாது. பாரதவருஷத்தில் புராதனமாய் இருந்த 56 தேசங்களுள் அவர் நாடு ஒன்று என்பதும் அவர் உன்னத நாகரிக நிலையில் இருந்தார் என்பதும் நமக்குத் தெரிகிறது. ராமாயணாதி இதிஹாஸ காலங்களில் அவர் ஊர் தண்டகாரண்யத்தின் ஒரு பாகமாகயிருந்ததாகத் தோன்றுகிறது. திருச்சி ஜில்லாவின் வடக்கேயுள்ள கொல்லிமலைப் பிறதேசம் தான் கிஷ்கிந்தாபுரமென்றும் பெரம்பலூர் தாலூகாவிலுள்ள வாலிக்கொண்டாபுரந் தான் வாலி யிறந்து விழுந்த இடமென்றும் அநேகர் சொல்லுகிறார்கள். ஸாலிவாஹன சகாப்தத்துக்கு 338[1] வருஷங்களுக்கு முன் (B. C. 260) உண்டான அசோக சக்ரவர்த்தியினுடைய சிலாசாஸனங்களிலும் ஸா. 52-ல் (A. D. 130) இருந்த கிரீக் பூதத்வ சாஸ்திரிகளின் கிரந்தங்களிலும் சோழர்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸாலிவாஹன சகாப்தத்துக்கு 325 வரு ஷங்களுக்கு முன் (B. C. 247) சோழமன்னர் லங்கைக்கு வெற்றியுடன் சென்றதாகவும் அந்நாட்டு ராஜ வம்ச சரித்திரங்களிலிருந்து தெரியவருகிறது.

சோழர் நாட்டின் எல்லைகள் :—

கடல் கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு குடதிசையிற் கோட்டைக்கரையாம்-வடதிசை எணாட்டுப்பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக்கெல்லையெனச் சொல்.

இது ஒரு பழமையான செய்யுள். இதில் சோழநாட்டின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. வடக்கே பெண்ணுறும்+[2] கிழக்கே சமுத்திரமும் தெற்கே வெள்ளாறும் மேற்கே கோட்டைக் கரையும் கரைப்போட்டானாறும் சோழ மண்டலத்தின் விஸ்தீர்ணத்தைக் குறிக்கும். மேற்கெல்லைகளின் அடையாளங்கள் இப்பொழுதும் போத்தனூருக்கு சமீபத்திலும் குளித்தலை தாலூகாவிலும் காணப்படுகின்றன.

சோழர் நாகரிகம் :- சோழர்கள் அயல் நாட்டார்களுடன் நேசம் பாராட்டி வந்தார்கள். யுத்தப்பயிற்சியில் ஸ்பார்ட்டர்களுக்கும் மேலானவர்கள். க்ருஷியை வெகு கவனமாய் நடத்திவந்தார்கள். தஞ்சாவூர் பிறதேசத்தின் செழுமைக்குக் காரணமான கல்லணையைக் கட்டுவித்தவர் சோழ மன்னரே. அவர்களால் கட்டப்பட்ட பழய அணைதான் இப்பொழுது இருக்கும் கட்டடத்தின் அஸ்திவாரம். காவேரியிலிருந்து பிரியும் பல கால்வாய்கள் அவர்களால் தான் வெட்டப்பட்டன. உய்யக்கொண்டானின் தலைக் குமிழியைப்பற்றி மூன்றாவது குலோத்துங்கச் சோழனின் சிலா சாஸனம் அகப்பட்டிருக்கிறது. முசிரிக்கு சமீபத்திலுள்ள பெரிய வாய்க்காலின் தலைப்பு மூன்றாவது ராஜராஜனால் கட்டப்பட்டது. கஜாரண்யம் என்கிற திருவானைக் காவலில் ஜம்புநாதருக்கு கோச்செங்கட் சோழ மன்னன் ஆலயம் கட்டிவைத்ததாக சிலாசாஸனம் கோவில் மதில்களில் சமீப காலத்தில் காணப்பட்டது. தர்ம வர்மச்சோழ மன்னன் ஸ்ரீரங்கத்தில் ரெங்கனாதருக்கும் குணசேகரத்தில் ஸ்ரீநிவாஸனுக்கும் உறையூரில் பரமபக்தையான தன்குமாரி நாச்சியாருக்கும் ஆலயங்கள் கட்டி வைத்ததாகவும் சிலாசா ஸனங்கள் கிடைத்திருக்கின்றன.

நிலங்கள் வெகு கவனமாய் சர்வே செய்யப்பட்டன, 52,488,800,000-ல் ஒன்று வேலி நிலங்கூட அளவிடப்பட்டு சர்க்கார் தீர்வைக்கு கொண்டுவரப்பட்டது.

சோழமன்னர் கட்டிய பல அழகிய ஆலயங்களிலிருந்து சோழர்களின் சிற்ப சாஸ்திரத் திறமையை நாம் அறியக் கூடும்.

ராஜ்யபாரம் பூராவும் கிராம பஞ்சாயத்துக்களால் வகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கூடுவதற்கு ஸபாமண்டபங்களுமிருந்தன. வட ஆற்காடு ஜில்லாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சாஸனத்திலிருந்து சோழர்களால் கட்டி வைக்கப்பட்ட ஒரு பஞ்சாயத்து மண்டபத்தில் ஓர் வித்தியாலயமும் மாணவர்களுக்கு போஜன சாலையும் வைத்தியசாலையும் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. வித்தியார்த்திகளுக்கு சனிக்கிழமைகளில் ஸ்நானம் செய்ய எண்ணெய்யும் இராக்காலங்களுக்கு விளக்குகளும் கொடுக்கப்பட்டன. வைத்தியசாலையில் 15 வியாதிக்காரர்களுக்கு இடமும் (beds) அவைகளுக்கு வேண்டிய ஸவுகரியங்களும் இருந்தன. அநேக வேலைக்காரர்களும் இருந்தார்கள். பஞ்சாயத்துகள் அதிகாரம் செலுத்தாத ராஜாங்க விஷயம் ஒன்றுமில்லை. ஒவ்வொரு பஞ்சாயத்துக்குக் கீழும் கிளை சபைகள் பிரத்தியேக வேலைகளை மேல்பார்த்தன. அநேக கிராமங்கள் சேர்ந்து ஒரு அதிகாரியின் கீழுள்ள ஜில்லாவாகவும் அநேக ஜில்லாக்கள் சேர்ந்து ஒரு மாகாணமாகவும் கணக்கிடப்பட்டிருந்தன.

சோழர்கள் வியாபாரம் விஸ்தாரமாய்ச் செய்தார்கள். ஐரோப்பாவிலுள்ள ரோமன் ராஜ்யத்தோடும் ஸமுத்திரத்துக்கப்பாலுள்ள இன்னும் மற்ற ஊர்களோடும் கப்பல் மூலம் போக்கு வாத்து ஏற்பட்டிருந்தது. வடபர்வதங்களிலிருந்து ஸ்வர்ணமும் ரத்னங்களும் மேல்மலைகளிவிருந்து சந்தனம் அகில் முதலிய மரங்களும் தெற்கு சமுத்திரத்திலிருந்து முத்துக்களும் கீழ் கடலிலிருந்து பவழமும் கங்கை ப்ராந்தியத்தில் விளையும் பொருள்களும் காவேரிக் கரை தான்யங்களும் பர்மா கைத்தொழிற் சாமான்களும் லங்கை முதலிய நாடுகளிலிருந்து ஆகாரத்துக்கு வேண்டிய இதர சாமான்களும் சமுத்திரத்துக்கப்பால் வெகு தூரத்திலிருந்து குதிரைகளும் மரக்கலங்களில் கொண்டுவரப்பட்ட மிளகும் காவேரிப் பட்டணத்தில் சோழர் கடைகளில் ஏராளமாய்க் காணப்பட்டன. தேசம் வெகு செழிப்பாகவும் ஜனங்கள் நாகரிகமுள்ளவர்களாகவும் மன்னர்கள் நீதிமான்களாகவும் தெய்வபக்தி குன்றாதவர்களாகவும் இருந்திருக்கவேண்டும்.


குறிப்பு

[தொகு]
  1. இப்புத்தக முழுவதும் வருஷங்கள் ஸாலிவாஹன சகாப்தத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிறீஸ்து சகாப்தம் (A.D.) தெரியவேண்டுமானால் ஸாலிவாஹன வருஷத்துடன் 78-ஐக் கூட்டவேண்டும்.*
  2. சோழ நாட்டின் வடக்கெல்லை வேங்கடாத்திரி அல்லது திருப்பதியென்றும் சிலர் சொல்லுவார்கள்.