திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/தற்கால அரசாக்ஷி

விக்கிமூலம் இலிருந்து

17-ம் அதிகாரம். தற்கால அரசாக்ஷி.

இங்கிலாண்டாசன் கிரீடத்தில் விளங்கும் விலையுயர்ந்த ரத்நம் நம் பாரததேசம். அம்மன்னனுக்கு இந்தியா சக்ரவர்த்தியெனப் பெயருமுண்டு. தலைநகரமாகிய லண்டனிலிருந்து பார்லிமெண்டு சபைகளின் உதவியைக் கொண்டு எல்லாக்கண்டங்களிலுமுள்ள தன் நாடுகளில் ஆக்ஷி செலுத்துகின்றானக் கோமான். இந்தியாவை ராஜப் பிரதிநிதியாயிருந்து ஆளுவதற்கு 5 வருஷத்திற்கொரு முறை ஒரு ஆங்கில சீமான் அனுப்பப்படுவது வழக்கம். அவனுக்கு உதவி புரிய ஒரு சபை உண்டு (Executive Council). அச்சபையின் அங்கத்தினருள் ஒருவன் இந்தியன். பாரததேசம் 10 மாகாணங்களாய்ப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் நியமிக்கப்படுகிறான். இக்கவர்னர் பதவி ஆங்கிலச் சீமானுக்குத்தான் கிடைக்கும். சில வருஷங்களுக்கு முன் லார்ட் ஸின்ஹா என்ற ஒரு இந்தியனுக்கு இப்பதவி ஸ்வல்பகாலத்திற்கு கிடைத்தது. கவர்னர் ஜெனரலுக்கு இருக்கும் மாதிரி கவர்னருக்கும் Executive Council உண்டு. அதிலும் ஒரு இந்தியன் இருக்கிறான்.

இந்தியாவை ஆளுவதில் சர்க்காருக்கு சட்ட திட்டங்கள் செய்வதில் உதவி செய்ய 4 (சம்பளம் இல்லாத அங்கத்தினருள்ள) சபைகள் உண்டு. இவைகளுள் Legislative Council என்பது ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதற்கும் பொதுவாயுள்ளது Legislative Assembly-யும் Council of State-ம் ஸ்வதேச சிற்றரசர்களின் சபையொன்றும் உண்டு.

நாமிருக்கும் சென்னை ராஜதானி 25 ரெவினியூ ஜில்லாக்களாய் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒரு கலெக்டர் நியமிக்கப்பட்டிருக்கிறான். கலெக்டர் ரெவினியூ டிபார்ட்மெண்டு அதிகாரியாய் இருந்தபோதிலும் ஜில்லாவின் க்ஷேமத்துக்கு உத்தரவாதி அவன் தான். அவசியம் ஏற்பட்டால் அவன் சம்பந்தமல்லாத இதர டிபார்ட்மெண்டு உத்தியோகஸ்தரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

Revenue Department :— திருச்சினாப்பள்ளி கலெக்டரின் அதிகாரம் 5 டிப்டி கலெக்டர்கள் 6 தாசில்தார்கள் 12 ஸப்மாஜிஸ்ட்ரேட்டுகள் மூலமாய் நடத்தப்படுகிறது. திருச்சி ஜில்லாவில் கஜானா அதிகாரி Treasury Deputy Collector. ஸர்க்காருக்காக கஜானா வேலை செய்ய திருச்சியில் ஒரு Imperial Bank of India-வின் கிளையுமிருக்கிறது. திருச்சி தாலூகாவில் அதிகாரம் செலுத்துபவர் Head Quarter Division Deputy Collector-ம் தாசில்தாரும். குளித்தளை -கரூர், லால்குடி - முசிரி, பெரம்பலூர்-உடையார்பாளையம், இவைகளுக்கு மூன்று டிவிஷன் டிப்டி கலெக்டர்களும் 6 தாசில்தார்களும் உண்டு. தாசில்தார் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டது தாலூகா. ஒவ்வொரு தாலூகாவிலும் பல கிராமங்கள் உண்டு. கிராம அதிகாரிகளை மேல்பார்வை செய்ய தாசில்தாருக்குக்கீழ் பல ரெவினியூ இன்ஸ்பெக்டர்களும் இருக்கிறார்கள்.[1]

கிராமம் தான் unit of administration. கிராமத் தலைவன் முன்சீப். கிராம நிலங்களை அளவு செய்து பயிர்களைச் சோதித்து ஸர்க்கார் வாயிதாக் கணக்கு செய்பவன் கணக்குப்பிள்ளை. இவர்கள் இடும் வேலையைப் பார்க்க வெட்டியான், தலையாரி முதலிய வில்லேஜ் போலீஸும் ஏற்பட்டிருக்கின்றன. சர்க்கார் கிஸ்தியை வசூல் செய்வதுதான் முன்சீப்பின் முதல் வேலை. கிஸ்திபணம் தாலூகா கஜானாவுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஜில்லா கஜானாவுக்கும் பட்டணம் அக்கவுண்டண்டு ஜெனரலுக்கும் அனுப்பப்படும். முன்சீப்புக்கு சிறு குற்றங்களைப்பற்றி நியாய விசாரணை செய்யவும் அதிகாரம் உண்டு. அப்பொழுது அவனுக்கு வில்லேஜ் மாஜிஸ்ட்ரேட் என்று பெயர். இந்த வேலையில் இவனுக்கு மேலதிகாரிகள் ஸப்-மாஜிஸ்ட்ரேட், டிப்டி கலெக்டர்-மாஜிஸ்ட்ரேட், ஜில்லா கலெக்டர்-மாஜிஸ்ட்ரேட் முதலியவர்கள். கிராம முன்சீப்புக்கு ஸிவில் நியாய விசாரணை செய்ய அதிகாரமும் உண்டு. தவிர எந்த டிபார்ட்மெண்டு உத்தியோகஸ்தரும் கிராமத்துக்கு வந்தால் அவருக்கு வேண்டிய உதவி செய்ய கிராம முன்சீப் கட்டுப்பட்டிருக்கிறான். கிராம அதிகாரிகளுக்கு பென்ஷன் கிடையாது.

Judicial Department :—ஸிவில் நியாய விசாரணை செய்ய திருச்சினாப்பள்ளியில் ஒரு ஜில்லா ஜட்ஜியும் ஒரு ஸப்ஜட்ஜியும் 6 டிஸ்ட்ரிக்ட் முன்சீப்புகளும் இருக்கிறார்கள். இவர்களுள் ஜில்லா ஜட்ஜபக்கு பெருங் குற்றங்களை விசாரிக்கவும் கொலை முதலிய தண்டளைகள் செய்யவும் அதிகாரமுண்டு. இந்த டிபார்ட்மெண்டுக்கு மாகாண அதிகாரி சென்னை ஹைகோர்ட்டு.

Public works Department :— ரோட்டுகள் போடுதல், பாலங்கள் கட்டுதல், ஆறுகளிலிருந்து வாய்க்கால்களில் கிராமபாசனத்துக்கு வேண்டிய ஜலம் விடுதல், முதலிய வேலையைச் செய்பவர் P. W. Department-ஐச் சேர்ந்தவர். ஜில்லா அதிகாரி Executive Engineer. இவருக்குக் கீழ் Sub-Engineer, Supervisor, Overseer', SubOverseer, மேஸ்திரி, முதலியவர்கள் உண்டு. நாலைந்து ஜில்லாக்களிலுள்ள Executive Engineer-களுக்கு மேலதிகாரி Superintending Engineer.

Department of Public Instruction:— படிப்பிலாக்காவைக் கவனிக்க ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒரு District Educational Officer-ம் அவனுக்குக் கீழ் பல Deputy Inspector-களும் உண்டு. இவர்களுக்கு மேல்பட்ட மாகாண அதிகாரி Director.

Posts and Telegraphs :— திருச்சி ஜில்லாவில் பல இடங்களில் தபால் ஆபீஸ்களும் தந்தி ஆபீஸ்களும் உள. சிறிய கிராமங்களிலுள்ள தபாலாபீஸ்கள் பிராஞ்சு ஆபீஸ்கள். பெரிய கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ளவை ஸப் ஆபீஸ்கள். திருச்சினாப்பள்ளி கண்டோன்மெண்டிலுள்ளது ஹெட் ஆபீஸ். இவைகள் கடிதப் போக்குவரத்து, மணியார்டர், இன்ஷ்யூரன்ஸ், வேலைகளைத் தவிர, ஸேவிங்ஸ் பாங்க் வேலையும் செய்கின்றன. கிராமத்துக்கு கிராமம் மெயில் தூக்கிக் கொண்டுபோக ரன்னர்கள் உண்டு. கனத்த பைகளைக் கொண்டுபோக வண்டிகள், மோட்டார்களும் உண்டு. ரயில் பாதை உள்ள இடங்களுக்கு மெயில் ரயில்வண்டியிலேயே போகும். தபாலாபீஸாரே தந்தி வேலையையும் பார்க்கின்றனர். தந்தி வேலை செய்யாத தபாலாபீஸ்கள் உள்ள இடங்களில் ரயில் ஸ்டேஷன் இருந்தால் ரயில்வே கம்பெனியார் தந்தி வேலை செய்கிறார்கள். தபாலாபீஸ் வேலையை மேல்விசாரணை செய்பவர் இன்ஸ்பெக்டர், ஸூப்பெரின்டெண்டண்ட், போஸ்ட்மாஸ்டர் - ஜெனரல், டைரெக்டர் - ஜெனரல் முதலியவர்கள். இந்த டிபார்ட்மெண்டு சென்னை கவர்ன்மெண்டாருக்குட்படாமல் Imperial Government-இன் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது.

Public Health Department :— கிராமங்களிலும் பட்டணங்களிலும் திருவிழாக்கள் நடக்கும்போதும் கூட்டங்கள் கூடும்போதும் ஜனங்களுள் வியாதிகள் பரவாமலிருக்கவும், வந்த வியாதிகளைத் தடுக்கவும், பொதுவாய் ஜனஸமூகத்தின் தேக சௌக்கியத்தைக் கவனித்துப் பார்க்கவும் ஏற்பட்டது Public Health Department. அம்மை குத்துகிறவர்கள், ஸப் அஸிஸ்டண்ட் ஸர்ஜன், அஸிஸ்டண்ட் ஸர்ஜன், ஜில்லா மெடிகல் ஆபீஸர், முதலியவர்கள் இவ்வேலையைச் செய்கின்றனர்.

salt and AbkariDepartment :— ஜனங்கள் திருட்டுத்தனமாய் உப்பு உண்டாக்காமலும் கள்ளு, சாராயம் முதவியவை உண்டாக்காமலும், கள்ளுக் கடைகளைப் பரிசோதனை செய்யவும் எற்பட்டவர் இந்த இலாக்காக்காரர். இதன் அதிகாரிகள் ஸப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், Deputy Commissioner, கமிஷனர், முதலியவர்கள்.

Forest Department :— ஆற்றுப்படுகைகளிலும் இன்னும் மற்றுமுள்ள ஸர்க்கார் பாரஸ்டுகளைக் கவனிப்பவர் டிஸ்டிரிக்ட் பாரஸ்டு ஆபீஸரும் ரேஞ்சர்களும்.

Registration Department :—ஜனங்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொடுக்கும் தஸ்தாவேஜுகளைப் பதிவு செய்பவர் இந்த இலாக்காக்காரர். திருச்சியில் இருப்பவர் District Registrar. அங்கங்கே கிராமங்களிலிருப்பவர்கள் Sub-Registrars. இந்த இலாக்காவின் மாகாண அதிகாரி Inspector-General.

Police Department :— இந்த ஜில்லாவில் போலீஸ் வேலை செய்பவர் District Superintendent-ம் அவருக்குக் கீழ் Deputy Superintendents, Inspectors, SubInspectors, Head Constables, Constables-ம் ஆம். இவர் வேலை குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும் ஆகும். பெருங் குற்றவாளிகளை நியாய விசாரணை தீருமட்டும் மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின் மேல் ஜெயிலில் வைக்க (Remand செய்ய) இவர்களுக்கு அதிகாரமுண்டு. இவர்களே ஜெயில், கஜானா, முதலியவைகளைக் காக்கவேண்டும். பட்டணங்களிலும் கிராமங்களிலும் இராக்காலங்களில் திருட்டு நடக்காமல் ரோந்து சுற்றிப் பார்ப்பதும் இவர் வேலை தான். இவர்களால் முடியாவிட்டால் ராணுவ உத்தியோகஸ்தர் இவருக்கு உதவி செய்ய வேண்டும்.

Military Department :— இந்தியா கவர்னர்-ஜனாலுக்கு அடுத்தபடியாய் சம அதிகாரம் பெற்ற Commander-in-Chief- னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் ஸிவில் உத்தியோகஸ்தருக்கு வேண்டும் போது உதவி செய்யவும் பெருங் கலகங்கள் முதலியவற்றை யடக்கவும் கூட்டக் கொள்ளைக்காரரைப் பிடிக்கவும் தேச விரோதிகளுடன் போர் செய்யவும் ஏற்பட்டவர் ராணுவத்தார். தென்னிந்தியாவில் சென்னை, திருச்சி, பாளையங்கோட்டை, கொச்சி, வெல்லிங்டன், திருவனந்தபுரம், பெங்களூர் முதலிய இடங்களில் ஸைன்யங்கள் இருக்கின்றன. இந்தியா கவர்ன்மெண்டு உத்தியோகஸ்தருள் மிகவும் கவுரவம் பொருந்தியவரும் நன் மதிக்கப்படுபவரும் ராணுவத்தாரே.

Local Boards and Municipalities :— திருச்சினாப்பள்ளி ஜில்லாவில் திருச்சி, ஸ்ரீரங்கம், கரூர்களில் முனிஸி பாலிட்டிகளும், ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு தாலூகா போர்டும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகள் ஜனங்களிடம் வீட்டு வரி, தொழில் வரி, தண்ணீர் சாக்கடை வரி, கக்கூஸ் வரி, படிப்பு வரி, ரோட்டு வரி, முதலிய பல வரிகளை வசூல் செய்து அப்பணங்களைக்கொண்டு தாமே Government Department-களின் மேல்பார்வையின் கீழ் ரோட்டுகள் போடவும், தெருக்களை சுத்தம் செய்யவும், வீதிகளில் இராக்காலங்களில் வெளிச்சம் போடவும், தண்ணீர்க் குழாய்கள் வைக்கவும், கிணறுகள், குளங்கள் வெட்டவும், ஹாஸ்பத்திரிகள் மூலமாய் ஜனங்களுக்கு வைத்தியம் செய்யவும், குழந்தைகளுக்கு அம்மை குத்தவும், இரண்டு மூன்று கிளாஸ் வரையில் படிப்பு கற்றுக்கொடுக்கவும், இந்த மாதிரி இன்னும் பல ஜன ஊழிய வேலைகள் செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கின்றன. தாலூகா போர்டுகளுக்கெல்லாம் மேல்பட்டது டிஸ்ட்ரிக்ட் போர்டு, இந்த ஜில்லாவில் டிஸ்ட்ரிக்ட் போர்டு மூன்று ஹைஸ்கூல்களையும் நடத்துகிறது. டிஸ்ட்ரிக்ட் போர்டும், தாலூகா போர்டுகளும், முனிஸிபாவிட்டிகளும் ஜனங்களால் பொறுக்கியெடுக்கப்பட்ட சில (சம்பளமில்லாத) கௌரவ அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. தாலூகா போர்டுக்குக் கீழ் பெரிய கிராமங்களில் முனிஸிபாலிட்டிகள் மாதிரியே யூனியன் போர்டுகளுமுண்டு. இவைகளே ஜனங்களுக்கு ஆளும் திறமையை உண்டுபண்ணக்கூடியவை என்றும் பாரத தேசத்தில் ஜனஸமூக ஸ்வய ஆக்ஷியின் ஆரம்பமெனவும் கருதப்படுகின்றன. இவைகளை மேல்பார்வையிட்டு குற்றங் குறைகளில்லாமல் சீர்திருத்த ஜில்லா கலெக்டருக்கு அதிகாரமுண்டு,

வருஷத்திற் கொருமுறை இந்தியா கவர்ன்மெண்டார் சென்ற வருஷத்தில் நாடு எவ்விகம் ஆளப்பட்டது என்று ஒரு புஸ்தகம் வெளியிட்டு அப்புஸ்தகத்தை இங்கிலாண்டு ஸர்க்காருக்கு அனுப்பவேண்டியது.


Printed at the St. Joseph's Industrial School Press,
Cantonment, Trichinopoly.— 1924.

குறிப்புகள்[தொகு]

  1. ரெவினியூ டிபார்ட்மெண்டின் மாகாண அதிகாரி சென்னையிலுள்ள ரெவினியூ போர்ட்.