திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/மைசூருடன் சண்டை

விக்கிமூலம் இலிருந்து

15-ம் அதிகாரம்.
மைசூருடன் சண்டை.

ஹைடர் அலி மைசூர் சிம்ஹாசனத்தையடைந்து தன் அதிகாரத்தை விர்த்தி செய்தபடியால் இங்கிலீஷார் பயந்து 1688-ல் அவனுக்கு விரோதமாய் நிஜாமுக்கு உதவி செய்வதாய் ஒப்புக்கொண்டார். 1690 சித்திரை மாசத்தில் ஹைடர் மலையாளத்துக்குச் சென்றிருந்தபோது நாமக்கல்லும் இன்னும் சில கிராமங்களும் ஆங்கிலரால் பிடிக்கப்பட்டன. 1691-ல் ஹைடர் கரூருள்பட தன் ஊர்கள் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.

1703-ல் ஹைடர் மறுபடியும் திருச்சியில் ஆங்கிலரை எதிர்த்தான், ஸர் ஐர் கூட் வடக்கேயிருந்து வந்ததால் திரும்பி விட்டான். கூட் ஹைடரைப் பரங்கிப்பேட்டையில் (Porto Novo) தோற்கடித்தான். 1704-ல் ஹைடர் இறந்தான். 1705-ல் கரூர் ஆங்கிலர் கைக்கு வந்தது. 1706-ல் சமாதானம் செய்யப்பட்டு கரூர் டிப்புவுக்கு கொடுக்கப்பட்டது.

1712-ல் ஆங்கிலர் மறுபடியும் கரூரைப் பிடித்துக் கொண்டனர். டிப்பு கரூர் மார்க்கமாய் திருச்சிக்கு வந்து ஸ்ரீரங்கக்தையழித்தான். இதற்குள் மைசூருக்குள் கார்ன் வாலிஸ் நுழைந்துவிட்டதால் டிப்பு திரும்பினான். 1714-ல் நடந்த உடன்படிக்கைப்படி கரூர் டிப்பு வீதத்திற்கும் நாமக்கல் ஆங்கிலர் வீதத்திற்கும் கிடைத்தது.

1721-ல் கரூர் மறுபடியும் ஆங்கிலரால் பிடித்துக் கொள்ளப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணம் பிடிக்கப்பட்டு டிப்புவும் இறந்தபடியால் சண்டை நிறுத்தப்பட்டது. பிறகு ஏற்பட்ட சமாதான உடன்படிக்கைப் பிரகாரம் கரூரை ஆங்கிலரே வைத்துக்கொண்டனர்.