உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புமுனை/13

விக்கிமூலம் இலிருந்து
13

பள்ளி ஆண்டுவிழாவில் தன் சாயம் வெளுத்ததால் தகர்ந்து போனான் கண்ணாயிரம். ஆசிரியர்களும் தன் நண்பர்களும் தன்னை மிகக் கேவலமாகக் கருத நேர்ந்ததை எண்ணி எண்ணி குமைந்தான். யார் முகத்திலும் விழிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்திக் கண்ணிர் விட்டான்.

தன் வீட்டாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என எண்ணி மருகிக் கொண்டிருக்கும்போது இனியன் கண்ணாயிரத்தைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். தான் கொஞ்சமும் எதிர்பாரா நிலையில் அங்கு வந்து சேர்ந்த இனியனைக் கண்டபோது கண்ணாயிரத்துக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே வெட்கப்பட்டான். எப்படியோ ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு இனியனிடம் மனம்விட்டுப் பேசினான்:

“இனியன்! உன் மீது நான் கொண்ட பொறாமைக்கும், உனக்குப் பரிசு கிடைக்கக் கூடாது, எனக்கே கிடைக்கணும்’கிற பேராசை யினாலே உன் கட்டுரையைத் திருடியதற்கும் சரியான தண்டனையும் அவமானமும் கிடைச்

சிருச்சு நீ என்னை மன்னிக்கணும். கொஞ்சமும் உழைக்காம பரிசுபெறப் பேராசைப்பட்ட எனக்கு இதுவும் வேணும்” இன்னமும் வேணும்.

கண்ணாயிரத்தின் வார்த்தைகள் இனிய னின் மனதைத் தொட்டன.

“வருந்தாதே கண்ணாயிரம். உன் விருப்பத்தை என்னிடம் சொல்லியிருந்தால் நானே உனக்கு நல்ல கட்டுரையா போட்டிக்கு எழுதிக் கொடுக்திருப்பேன்.”

இனியனின் பரந்த மனப்பான்மையும் உதவத் துடிக்கு உபகார உணர்வும் கண்ணாயிரத்தின் கண்களைக் குளமாக்கின. அவன் தழதழத்த குரலோடு பேசத் தொடங்கினான்.

“உன் உயர்ந்த குணத்தைச் சரியா புரிஞ்சுக்காம நான் பெரிய தவறு செஞ்சுட்டேன். இனி நான் குறுக்கு வழியிலே தவறான போக்குகளை கனவிலும் நினைக்க மாட்டேன். உன்னைப் போல் நானும் கடுமையாக உழைப்பேன். மனம் போன படி சிந்தனையைச் செலுத்தாம படிப்பிலேயே கவனத்தைச் செலுத்துவேன். உன்னைப் போல நிறைய அறிவு நூல்களைப் படிச்சு திறமையை வளர்த்துக் கொள்வேன். அதன் மூலம் அடுத்த ஆண்டுப் போட்டியிலே உன்னைப் போல் முதற்பரிசும் பாராட்டும் பெறுவேன். இது உறுதி.”

கண்ணாயிரத்தின் சொற்கள் இனியனுக்குத் தேனாக இனித்தன. அவன் மன உறுதி அளவிலா மகிழ்வூட்டின.

“கண்ணாயிரம்! உழைப்பில் வாரா உறுதிகளில் உளவோ?ன்னு அறிஞர் ஒருத்தர் சொன்னார். ‘உழைப்பும் உயர்வும்’ங்கிற கட்டுரைத் தலைப்பு உனக்குப் பரிசு வாங்கிக் கொடுக்காட்டாலும் சரியான பாதைக்கு உன்னைத் திருப்பிய திருப்புமுனையா அமைஞ்சிருச்சு. உன் அறிவும் சிந்தனையும் சரியான பாதையிலே துரித நடை போட ஆரம்பிச்சிருச்சு. இதுவே உன் வாழ்க்கையிலே நீ பெற்ற பெரும் பரிசு’ன்னு சொல்லலாம்.

இவ்வாறு இனியன் ஆலுதலும் தேறுதலுமாகக் கூறிய ஊக்க மொழிகள் கண்ணாயிரத்தை புதிய ராஜ பாட்டையில் நடக்கத் தூண்டின. இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/13&oldid=489841" இலிருந்து மீள்விக்கப்பட்டது