உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புமுனை/12

விக்கிமூலம் இலிருந்து

12

பள்ளி ஆண்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது. மேடை வண்ண வண்ணத் தோரணங்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் அமர்ந்திருந்தனர். மேடையில் விழாத் தலைவரும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் அமர்ந்திருந்தனர். கடவுள் வாழ்த்துப் பாடி முடிந்தவுடன் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. கட்டுரைப் போட்டிப் பொறுப்பாளராக இருந்த ஆசிரியர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார். ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்:

“தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! நமது பள்ளி ஆண்டு விழாவிலே குழுமி யிருக்கும் நீங்களெல்லாம் கட்டுரைப் போட்டி முடிவை அறிந்துகொள்ள பேராவலோடு இருக்கிறீர்கள். இந்த ஆண்டுக் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுமையைக் காண்கிறேன்...”

ஆசிரியர் இவ்வாறு கூறத் தொடங்கிய போது கண்ணாயிரம் மிடுக்கோடு தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான். ஒரு விதப் பெருமிதப் பார்வை பார்த்தடி தன் நண்பன் தங்கதுரையைப் பார்த்துப் பேசினான்.

“டேய் தங்கதுரை! நல்லாக் காதைத் தீட்டிக் கொண்டு கேள்’டா, முதற்பரிசு யாருக்கு’ன்னு!!

ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.

“...போட்டிக்குக் கட்டுரை எழுதிய மாணவர்கள் எல்லோருமே நன்கு எழுத முயன்றிருக்கிறார்கள். சிலர் `அறிவுச் சுடர்' என்ற எனது புத்ககத்திலுள்ள உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை வரிக்கு வரி விடாமல் காப்பியடித்து எழுதி இருக்கிறார்கள்...”

ஆசிரியர் பேசிய தோரணையைக் கேட்ட மணிக்கு வியர்த்தே விட்டது. அவன் மெதுவாகத் தங்கதுரையின் காதில் கிசுகிசுத்தான்.

“என்ன’டா தங்கதுரை! நம்மையெல்லாம் ‘காப்பிக் கலைஞர்கள்’னு பட்டங் கொடுத்து வரிசையாகக் கூப்பிட்டு நிறுத்திடுவார் போலிருக்கு.”

மணி தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான். ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.

“...சிலர் மற்றவர் எழுதிய கட்டுரையைத் திருடி, எழுதியவர் பெயரை மட்டும் மாற்றி, அதில் தம் பெயரை எழுதியிருக்கிறார்கள். பாவம்! பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர கட்டுரையிலுள்ள கையெழுத்தை மாற்ற முடியவில்லை.

“ஏன்’டா தங்கதுரை! போட்டி இறுதி நாளன்று இனியன் தான் எழுதி வச்சிருந்த கட்டுரை காணாமப் போச்சு’ன்னு சொன்னானே, ஒருவேளை அதுவாக இருக்குமோ?” மணி தங்கதுரையின் காதைக் கடித்தான்.

“பொறுத்திருந்துபார்த்தா எல்லாமே புரிஞ்சு போயிடுது” தங்க துரை பதில் சொன்னான். ஆசிரியர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“...முதற் பரிசுக்குரிய கட்டுரையை எழுதிய மானவன் உழைப்பை மன உழைப்பு-உடல் உழைப்பு என இரு வகையாகப் பிரித்துக் கொண்டு மிக அழகாக எழுதியுள்ளான்.

“மன உழைப்பு எத்தகையது என்பதையும், அதனால் இறவாப் புகழ்பெற்ற அறிஞர்களை

யும், உடல் உழைப்பின் தன்மைகளையும் மேன்மைகளையும் அதனால் நாம் பெறக் கூடிய பயன்களையும் பல்வேறு சான்றுகளுடன் அருமையாக விளக்கியுள்ளான். பல்வேறு மலர் களிலுள்ள தேனை ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் தேனி போன்று பல்வேறு நூல்களைப் படித்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து, தெளிவாக எழுதியுள்ளான். அவனுக்கு என் பாராட்டுக்கள்.

“‘இளமையில் கல்’ என்றபடி படிப்பில் பேரார்வம் கொண்டு, தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்ற பழமொழிக்கேற்ப, படிக்கும் காலத்தில் தம் சிந்தனையைக் கண்டபடி சிதறவிடாமல் நூல்களைக் கற்பதிலும் சிந்திப்பதிலுமே செலவிட்டால் அவர்கள் அறிவு வளர்ச்சியில் பெரு முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்கு இன்று முதற் பரிசு பெறும் மாணவனே தக்க சான்றாக உள்ளான் என்பேன். அறிவுத் திறம் என்பது பரம்பரையாக வருவது என்றாலும் இளமையில் நாம் பெறும் நல்ல ஊட்டச் சத்துதான் நம் மூளையைப் பலம் அடையச் செய்கிறது. நல்ல சூழல் நம் அறிவை வளமடையச் செய்கிறது. கடுமையான மன உழைப்பு நம் அறிவைக் கூர்மைப்படுத்துகிறது. அதோடு நம் எதிர்கால வாழ்வுக்கு அதுவே இணையற்ற ஏணியாக அமைகிறது. புகழையும் பொருளையும் வேண்டிய அளவுக்குத தேடித்

தருகிறது. இந்த உண்மைகளை மனதிற் கொண்டு பார்க்கும்போது போட்டியில் முதற் பரிசு பெறும் மாணவன் எல்லா வகையிலும் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக அமைந்துள்ளான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அறிவாலும் குணத்தாலும் சிறந்து விளங்கும் அந்த மாணவன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அவன்தான் இனியன்!

“இனியன் எழுதிய கட்டுரையைத் திருடி, பெயரை மட்டும் மாற்றி தன் பெயரைப் போட்டு கட்டுரைப் போட்டிக்கு அனுப்பிய கண்ணாயிரத்துக்கு, அவன் செய்த திருட்டுக் குற்றத்துக்காக ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.”

ஆசிரியர் கூறியதைக் கேட்டபோது கண்ணாயிரத்தின் நண்பர்கள் எல்லோரும் அவன் வெறுப்புக் கொண்டனர். “கண்ணாயிரத்தோடு சேர்ந்ததுக்கு நாமெல்லாம் வெட்கப்படனும்’டா” வேதனையோடு கூறினான் மணி.

“இனி, அவன் திருட்டு முகத்திலேயே விழிக்கக் கூடாதுடா” உறுதிபடக் கூறினான் தங்கதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/12&oldid=489840" இலிருந்து மீள்விக்கப்பட்டது