திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்/உரைப் பாயிரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
உரைப் பாயிரம்

ஆற்றுப்படை:

ஒருவர் ஓரிடத்தில் தாம் பெற்ற பெருவளத்தைப் பெறாத பிறர்க்கும் அறிமுகப்படுத்தி அவ்விடம் சென்று அத்தகைய வளத்தைப் பெற்றுவருமாறு வழிப்படுத்தி யனுப்புதல் ஆற்றுப் படையாகும். (ஆற்றுப்படை = ஆற்றுப்படுத்துதல் = வழிப் படுத்துதல்) இப்பண்பு மக்கட் பண்புகளுள் உயரிய எல்லைக் கொடுமுடியாகும் முருகனின் அன்பர் ஒருவர் மற்றோர் அன்பரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்ததே திருமுருகாற்றுப்படை என்னும் நூல். இது 817 அடிகள் கொண்ட ஒரு முழுநீளப் பாட்டாகும்.

ஆசிரியர்:

சங்க காலப் பத்துப் பாட்டுள் முதல் பாட்டாக உள்ள திரு முருகாற்றுப்படையை இயற்றியவர் நக்கீரனார் என்னும் சங்கப் புலவராவார்.

பிற ஆற்றுப் படைகள்:

பத்துப் பாட்டைச் சேர்ந்த சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை ஆகிய நூற்பெயர்கள், யார்யாரை ஆற்றுப் படுத்துகிறார்களோ—அவரவர் பெயர்களால் அமைந்துள்ளன. அஃதாவது,—பாணரையும் பொருநரையும் அரசரிடம் ஆற்றுப்படுத்தும் நூல்கள் அவர்கள் பெயர்களால் பாணாற்றுப்படை எனவும் பொருநர் ஆற்றுப்படை எனவும் வழங்கப் பெறுகின்றன. ஆனால் திருமுருகாற்றுப்படையின் பெயரமைப்பு அவற்றினும் வேறானது. யாரிடம் ஆற்றுப்படுத்துகிறார்களோ-அவர் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. அஃதாவது,—முருகனிடம் அன்பனை ஆற்றுப்படுத்துவதால் ‘முருகாற்றுப்படை’ எனப்பட்டது. எனவே, ஆற்றுப்படை நூல்களுள் தனியொரு சிறப்பிடம் பெற்றிருப்பது திருமுருகாற்றுப்படை என்பது புலனாகும். தொல்காப்பியத்தில்:

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்—”

என்று தொல்காப்பியத்தில் ஆற்றுப்படைக்கு ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் கடவுளின் அன்பர் கூறப்படவில்லையே எனச் சிலர் கழறுகின்றனர். ‘தொல்காப்பியம் ஓரளவிற்குத்தான் இலக்கணம் கூற முடியும்; உலகியல் அனைத்தையும் இலக்கண நூலில் அடக்கிக் கூறிவிட முடியாது.’ –என்பது நினைவிருக்கவேண்டும். அதே நேரத்தில், பழைய இலக்கண நூலில் கூறியுள்ளபடியேதான் இலக்கியம் எழுத வேண்டும்–புதுமாதிரி கூடாது என்று எவரும் கூறக்கூடாது. பழைய இலக்கணம் புதிய இலக்கியத்தின் வளர்ச்சியை முற்றிலும் கட்டுப்படுத்தலாகாது. ஈண்டு, “The golden rule is that there is no golden rule” — என்னும் அறிவுமொழி ஒப்பு நோக்கற்பாலாது.

நூற் சிறப்பு

திருமுருகாற்றுப்படை முருகனது தலைமைப் பெருமையைக் கூறும் மிகச் சிறந்த நூலாகும். ஆசிரியர் நக்கீரனார் தம் காலத்துப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நூலைச் சிறப்புற யாத்துளார். எனவே, காலக் கண் கொண்டு இந்நூற் கருத்துக்களை ஆராய வேண்டும். நக்கீரனாரின் தலைமைப் புலமைக்கு இந்நூல் மிகச்சிறந்த சான்றாகும்.

இந்நூற்குப் பழைய உரைகள் உள்ளன. அடியேனது உரை தெளிவான பொழிப்புரையாகும். இதனையும் ஏற்றருள வேண்டுகிறேன்.

சுந்தர சண்முகன்