உள்ளடக்கத்துக்குச் செல்

திருவருட்பயன்/குறள்:1-100

விக்கிமூலம் இலிருந்து

1. பதிமுது நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து. (01)


தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான். (02)


பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பு இன்மையான். (03)


ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கும் அவன் போகாப் புகல்.(04)


அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவம் உடையான் உளன். (05)


பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை. (06)


ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான் நாடர் காணாத மன். (07)


எங்கும் எவையும் எரி உறுநீர் போல் ஏகம்
தங்கும் அவன் தானே தனி. check check (08)


நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலம் இலன் பேர் சங்கரன். (09)


உன்னும் உளதையம் இலது உணர்வாய் ஓவாது
மன்னு பவம் தீர்க்கு மருந்து. check check(10)

அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து. (01)


தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலா னெங்கள் பிரான். (02)


பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி
னருமைக்கு மொப்பின்மை யான். (03)


ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல். (04)


அருவு முருவு மறிஞர்க் கறிவா
முருவ முடையா னுளன். (05)


பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ
னில்லாதா னெங்க ளிறை. (06)


ஆனா வறிவா யகலா னடியவர்க்கு
வானாடர் காணாத மன். (07)


எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந்
தங்குமவன் றானே தனி. (08)


நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு னல்லன்
சலமிலன் பேர்சங் கரன். (09)


உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது
மன்னுபவந் தீர்க்கு மருந்து. (10)


2. உயிரவை நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும்
துறந்தோர் இறப்போர் தொகை. (11)


திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தார் ஆயும் உளர். (12)


மூன்று திறத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்கள்
தோன்றலர் தொத்து உள்ளார் துணை. (13)


கண்டவற்றை நாளும் கனவில் கலங்கி இடும்
திண் திறலுக்கு என்னோ செயல். check check(14)


பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவு என்ற பேர் நன்று அற. (15)


ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல் எனில் என் செய.(16)


சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்.(17)


இருளில் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி. (18)


ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம்
மன்கண் காணாத அவை. (19)


அன்று ஆளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது
என்று அளவு ஒன்று இல்லா இடர். check check(20)

பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந்
துறந்தோ ரிறப்போர் தொகை. (11)


திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி
யொருமலத்தா ராயு முளர். (12)


மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணை. (13)


கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந்
திண்டிறலுக் கென்னோ செயல். (14)


பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக்
கறிவென்ற பேர்நன் றற. (15)


ஒளியு மிருளு முலகு மலர்கட்
டெளிவி லெனிலென் செய. (16)


சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை
யுய்த்தல்சத சத்தா முயிர். (17)


இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம்
பொருள்க ளிலதோ புவி. (18)


ஊமன்கண் போல வொளியு மிகவிருளே
யாம்மன்கண் காணாத வை. (19)


அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ
தென்றளவொன் றில்லா விடர். (20)


3. இருள்மல நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும்
இன்று என்பது எவ்வாறும் இல். (21)


இருள் ஆனது அன்றி இலது எவையும் ஏகப்
பொருள் ஆகி நிற்கும் பொருள். (22)


ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது. (23)


அன்று அளவி உள் ஒளியோடு ஆவி இடை அடங்கி
இன்று அளவும் நின்றது இருள். (24)


பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு. (25)


பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.(26)


இருள் இன்றேல் துன்பு என் உயிர் இயல் பேற் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். (27)


ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை
பேசாது அகவும் பிணி. (28)


ஒன்றும் மிகினும் ஒளி கவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள். (29)


விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை
வடிவு ஆதி கன்மத்து வந்து. (30)

துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு
மின்றென்ப தெவ்வாறு மில். (21)


இருளான தன்றி யிலதெவையு மேகப்
பொருளாகி நிற்கும் பொருள். (22)


ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு
மிருபொருளுங் காட்டா திது. (23)


அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி
யின்றளவும் நின்ற திருள். (24)


பலரைப் புணர்ந்து மிருட் பாவைக்குண் டென்றுங்
கணவற்குந் தோன்றாத கற்பு. (25)


பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத
தன்மை யிருளார்தந் தது. (26)


இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும்
பொருளுண்டே லொன்றாகப் போம். (27)


ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை
பேசா தகவும் பிணி. (28)


ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள
மென்று மகலா திருள். (29)


விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து. (30)


4. அருளது நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளிள் தலை இலது போல். (31)


பெருக்க நுகர்வினை பேர் ஒளியாய் எங்கும்
அருக்கன் என நிற்கும் அருள். (32)


ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை
தான் அறியாது ஆர் அறிவார் தான். (33)


பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்
மால் ஆழி ஆளும் மறித்து. (34)


அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும்
உணர்வை உணராது உயிர். (35)


தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை உணரார் புவி. (36)


மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம்
தலை கெடுத்தோர் தன் கேடர் தாம். (37)


வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன். (38)


பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை
கரப்பு அருந்த நாடும் கடன். (39)


இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா
வெற்று உயிர்க்கு வீடு மிகை. (40)

அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும்
பொருளிற் றலையிலது போல். (31)


பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு
மருக்கனென நிற்கு மருள். (32)


ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை
தானறியா தாரறிவார் தான். (33)


பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள்
மாலாழி யாளு மறித்து. (34)


அணுகு துணையறியா வாற்றோனி லைந்து
முணர்வை யுணரா துயிர். (35)


தரையை யறியாது தாமே திரிவோர்
புரையை யுணரார் புவி. (36)


மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். (37)


வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங்
கள்ளத் தலைவர் கடன். (38)


பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை
கரப்பருந்த நாடுங் கடன். (39)


இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை. (40)


5. அருளுறு நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
அறியாமை உள் நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ. (41)


அகத்து உறு நோயக்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவருங் காண்பரோ தான். (42)


அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருள் அர் அறிவார் புவி. (43)


பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம்
மெய் இரண்டுங் காணார் மிக. (44)


பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக் காணார் புவி. (45)


எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ்
தமக்கு அவனை வேண்டத் தவிர். (46)


விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளுங்
கடனில் இருள் போவது இவன் கண். (47)


அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்குஞ்
சகலர்க்கு வந்து அருளும் காண். (48)


ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்
பேர் அறிவான் வாராத பின். (49)


ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல்
பானு ஒழியப் படின். (50)

அறியாமை யுள்நின் றளித்ததே காணுங்
குறியாக நீங்காத கோ. (41)


அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச்
சகத்தவருங் காண்பரோ தான். (42)


அருளா வகையா லருள்புரிய வந்த
பொருளா ரறிவார் புவி. (43)


பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டுங் காணார் மிக. (44)


பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி. (45)


எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர். (46)


விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங்
கடனிலிருள் போவதிவன் கண். (47)


அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ்
சகலர்க்கு வந்தருளுங் காண். (48)


ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின். (49)


ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற்
பானு வொழியப் படின். (50)


6. அறியும் நெறி (or அறியும் நிலை ??)

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல்
கூடும் இறை சத்தி கொளல். (51)


ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு அதியில். (52)


செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும்
உய்வானும் உளன் என்று உணர். (53)


ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம். (54)


தன் நிறமும் பல் நிறமும் தானாம் கல் தன்மை தரும்
பொன் நிறம் போல் மன்னிறம் இப் பூ. (55)


கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை
உண்டு இல்லை அல்லது ஒளி. (56)


புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை
மன் செயலதாக மதி. (57)


ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப்
பாராதே பார்த்ததனைப் பார். (58)


களியே மிகு புலமாய்க் கருதி ஞான
ஒளியே ஒளியாய் ஒளி. (59)


கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
கொண்டபடியே கொண்டு இரு. (60)

நீடு மிருவினைகள் நேராக நேராதல்
கூடுமிறை சத்தி கொளல். (51)


ஏக னநேக னிருள்கரும மாயையிரண்
டாகவிவை யாறாதி யில். (52)


செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு
முய்வானு முளனென் றுணர். (53)


ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர்
தானுணர்வோ டொன்றாந் தரம். (54)


தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும்
பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ. (55)


கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை
யுண்டில்லை யல்ல தொளி. (56)


புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயல தாக மதி. (57)


ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப்
பாராதே பார்த்ததனைப் பார். (58)


களியே மிகுபுல மாய்க்கருதி ஞான
வொளியே வொளியா வொளி. (59)


கண்டபடி யேகண்டு காணாமை காணாமற்
கொண்டபடி யேகொண் டிரு. (60)


7. உயிர் விளக்கம்

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல்
தான் அதுவாய் நிற்கும் தரம். (61)


தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப்
பித்தத்தில் தான் தவிர்ந்த பின். (62)


காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட
வீ்ண் பாவம் எந்நாள் விடும். (63)


ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல். (64)


கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று. (65)


வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்
துஞ்சினனோ போயினனோ சொல். (66)


தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம்
எனக் கவர நில்லாது இருள். (67)


உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின்
நிற்க அருளார் நிலை. (68)


ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு. (69)


தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல்
ஆமே இவன் அர் அதற்கு. (70)

தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தானதுவாய் நிற்குந் தரம். (61)


தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப்
பித்தத்தி டான்டவிர்ந்த பின். (62)


காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட
வீ்ண்பாவ மெந்நாள் விடும். (63)


ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல். (64)


கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா
லெடுத்துச் சுமப்பானை யின்று. (65)


வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல். (66)


தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப
மெனக்கவர நில்லா திருள். (67)


உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின்
னிற்க வருளார் நிலை. (68)


ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய
வைம்புலனார் தாமா ரதற்கு. (69)


தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத
லாமே யிவனா ரதற்கு. (70)


8. இன்புறு நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின் புகுவார் முன் புகுவார் பின். (71)


இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின். (72)


இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல். (73)


தாள் தலை போல் கூடி அவை தான் நிகழா வேறு இன்பக்
கூடலை நீ ஏகம் எனக் கொள். (74)


ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஒசை எழாது
என்றால் ஒன்று அன்று இரண்டும் இல். (75)


உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப்
பற்றாரும் அற்றார் பவம். (76)


பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீ ஒன்றும் செய்யாது நில். (77)


ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது
கண் படுப்போர் கைப் பொருள் போல் காண். (78)


மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித்
தோன்றாத இன்பம் அது என் சொல். (79)


இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
அன்பு நிலையே அது. (80)

இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின். (71)


இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா
மொருவ னொருத்தி யுறின். (72)


இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ
மின்பகன மாதலினா லில். (73)


தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்
கூடலைநீ யேகமெனக் கொள். (74)


ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா
தென்றாலொன் றன்றிரண்டு மில். (75)


உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப்
பற்றாரு மற்றார் பவம். (76)


பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி
நீயொன்றுஞ் செய்யாது நில். (77)


ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது
கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். (78)


மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத வின்பமதென் சொல். (79)


இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா
மன்பு நிலையே வது. (80)


9. அஞ்செழுத்தருள் நிலை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின். (81)


இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி
உற நிற்கும் ஓங்காரத்து உள். (82)


ஊன நடனம் ஒருபால் ஒரு பாலாம்
ஞான நடனம் தான் நடுவே நாடு.(83)


விரியமந மேவி யவ்வை மீள விடா சித்தம்
பெரிய வினை தீரில் பெறும். (84)


மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ
மேல் ஆகி மீளா விடின்.(85)


ஆராதி ஆதாரம் அந்தோ அது மீண்டு
பாராது மேல் ஓதும் பற்று. (86)


சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம் இது நீ ஒதும் படி.(87)


வாசி அருளியவை வாழ்விக்கும் மற்றறு அவே
ஆசு இல் உருவமும் ஆம் அங்கு. (88)


ஆசில் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடை நிற்கை வழக்கு.(89)


எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து. (90)

அருணூலு மாரணமு மல்லாது மைந்தின்
பொருணூ டெரியப் புகின். (81)


இறைசத்தி பாச மெழில் மாயை யாவி
யுறநிற்கு மோங்காரத் துள். (82)


ஊன நடன மொருபா லொருபாலாம்
ஞானநடனந் தானடுவே நாடு.(83)


விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரிற் பெறும். (84)


மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ
மேலாகி மீளா விடின்.(85)


ஆராதி யாதார மந்தோ வதுமீண்டு
பாராது மேலோதும் பற்று. (86)


சிவமுதலே யாமாறு சேருமே றீரும்
பவமிதுநீ யோதும் படி.(87)


வாசி யருளியவை வாழ்விக்கு மற்றதுவே
யாசி லுருவமுமா மங்கு. (88)


ஆசினவா நாப்பண் ணடையா தருளினால்
வாசியிடை நிற்கை வழக்கு.(89)


எல்லா வகையு மியம்புமிவ னகன்று
நில்லா வகையை நினைந்து. (90)


10. அணைந்தோர் தன்மை

[தொகு]
பதம் பிரித்து உள்ளபடியே
ஓங்கு உணர்வில் உள்ளடங்கி உள்ளத்தில் இன்பு ஒடுங்கத்
தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்.(91)


ஐந்தொழிலும காரணர்களாம் தொழிலும் போகம் நுகர்
வெம் தொழிலும் மேவார் மிக. (92)


எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று
அல்லாது அறியார் அற.(93)


புலன் அடக்கித் தம் முதல் கன் புக்கு உறுவார் போதார்
தலன் அடக்கும் ஆமை தக. (94)


அவனை அகன்று எங்கு இன்றாம் ஆங்கு அவனாம் எங்கும்
இவனை ஒழிந்து உண்டாதல் இல்.(95)


உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல். (96)


உறும் தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.(97)


ஏன்ற வினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை
தோன்றில் அருளே சுடும். (98)


மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
அம்மையும் இம்மையே யாம்.(99)


கள்ளத் தலைவர் துயர் கருதித் தம் கருணை
வெள்ளத்து அலைவர் மிக. (100)

ஓங்குணர்வி லுள்ளடங்கி யுள்ளத்தி லின்பொடுங்கத்
தூங்குவர்மற் றேதுண்டு சொல்.(91)


ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. (92)


எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்
றல்லா தறியா ரற.(93)


புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார்
தலனடக்கு மாமை தக. (94)


அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு
மிவனையொழிந் துண்டாத லில்.(95)


உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்
கெள்ளுந் திறமேது மில். (96)


உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.(97)


ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினை
தோன்றி லருளே சுடும். (98)


மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்
கம்மையு மிம்மையே யாம்.(99)


கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை
வெள்ளத் தலைவர் மிக. (100)


உமாபதி சிவாச்சாரியார் இயற்றியருளிய திருவருட்பயன் முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்/குறள்:1-100&oldid=1479350" இலிருந்து மீள்விக்கப்பட்டது