திருவருட்பயன்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குகநூலாசிரியர் குறிப்பு[தொகு]

இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவம் ஆவார். இவர் சிதம்பரத்தில் பிறந்தவர். தீட்சிதர் எனும் தில்லைவாழ் அந்தணர் குலத்தவர். தில்லை நடராசருக்குப் பூசைசெய்யும் உரிமைபெற்றவர். ஆனாலும், தன் ஆசிரியராக மறைஞான சம்பந்தர் என்பவரையே கொண்டார். மறைஞான சம்பந்தர், முழுதுயர் ஞானி. அவர் உயர்குலத்தில் பிறந்தவராயினும், சாதிவேறுபாடு கருதாது சித்தர் போன்று எளிமையாக வாழ்ந்தவர்; தெருத்திண்ணையே அவரின் வீடு. அன்புடையோர் எவராயினும், அவர் எச்சாதியைச் சேர்ந்தவராயினும் சாதிபேதம் கருதாது, அவரிடம் கூழ்வாங்கி உண்டு வாழ்வு நடத்தியவர். அத்தகையவரைத் தம்குருவாகக் கொண்டதனால், தம்குலத்தவராலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டார்.
ஆகவே, சிதம்பரத்தைவிட்டு அதன் அருகே உள்ளே கொற்றவன் குடியினைத் தம் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்.(இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ள இடம்.) எனவே, கொற்றவன்குடி உமாபதி சிவம் எனஅழைக்கப்பட்டார்.
அங்கு மடம் அமைத்து வாழ்ந்துவரும்போது பல அற்புதங்களை நிகழ்த்தினார். உமாபதி சிவம், தம் சீடர்கள் பலருள்ளும், தாழ்த்தப்பட்ட குலத்தி்ல் தோன்றிய பெற்றான் சாம்பான் என்பவருக்கு முத்தியளித்தார். அப்பெரும் சிறப்புமிக்கவர் ஆற்றியபணி நாள்தோறும் திருக்கோயிலுக்கு விறகு வெட்டி்க்கொண்டு வந்து சேர்க்கும்பணியாகும். இதனைத் தில்லைக் கூத்தப்பிரான்மேல் தாம் கொண்ட பேரன்பால் தொடர்ந்து அவர் செய்துவந்தார். "துதிக்கின்ற இதழ்களைவிடத் தொண்டுசெய்யும் கரங்கள் உயர்ந்தவை" அல்லவா? இவரின் திருப்பணிகண்டு மகிழ்ந்த தில்லைக்கூத்தன், பெற்றான் சாம்பான் கனவில்தோன்றி, தில்லைவாழ் அந்தணர்களால் தீண்டத்தகாதவர் போல் ஒதுக்கிவைக்கப்பெற்ற உமாபதிசிவத்திற்கும் விறகு கொண்டுபோய்க் கொடுக்கும்பணியினைச் செய்யும்படி கூறினார். அவரும் அவ்வாறே உமாபதி சிவத்தின் மடத்திற்கும் விறகுகொண்டுவந்து கொடுத்துவந்தார். ஆனால், இதனை அறியார் உமாபதிசிவம்.
இவ்வாறு நிகழ்ந்துவரும் நாளில், ஒருநாள் கடும்மழை காரணமாக விறகு கொண்டுவரத் தடைஏற்பட்டது. அன்று விறகு வந்துசேரவில்லை. எனவே, மடத்தில் உணவுசமைக்கக் காலதாமதம் ஆனது. அதற்குக்காரணம் என்ன என உமாபதி வினவ, மடத்திற்கு நாளும் விறகு கொண்டுவரும் சாம்பான் வரவில்லை என்றனர். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட உமாபதிசிவம், அவர் வந்ததும் தமக்குத் தெரிவிக்கும்படி கூறினார். மறுநாள் சாம்பன் மடத்திற்கு விறகு கொண்டுவந்தார். அவர் மடத்திற்கு வரும்முன் தில்லைக்கூத்தன் ஒரு பெரியவர் வடிவில் அவன்முன்தோன்றி, ஒருசீட்டினைச் சாம்பானிடம் கொடுத்து அதனை உமாபதிசிவத்திடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் அச்சீட்டை, விறகு கட்டுடன் கொண்டுவந்தார். அவர் வந்ததை அறிந்த சீடர்கள் இச்செய்தியை உமாபதிசிவத்திடம் கூறினர். அவரைக் கண்டு மகிழ்ந்த உமாபதிசிவத்திடம் சாம்பான், பெரியவர் கொடுத்த ஓலையைக் கொடுத்தார். அதனைப்பெற்ற உமாபதிசிவம், அவ்வோலையில் இருந்த செய்தியைக் கண்டு திகைப்படைந்து பேரானந்தம் அடைந்தார். இறைவனே எழுதி அனுப்பிய ஓலை அது. அந்தச்சீட்டில் இருந்த செய்தி:
"அடியாற்(கு) எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற்(கு) எழுதிய கைச்சீட்டுப்- படியின்மிசை
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை." என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது.
இதன்பொருள்
அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்கைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம்.
இதன்படி பெற்றான் சாம்பானுக்கு உமாபதிசிவம் ஞானதீக்கை தொடங்கினார். அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், இறைவன்மேல்பேரன்புகொண்டதனாலும், அவ்வன்பு வெறும் அன்பாக இல்லாது, செயல்படும் அன்பாக ஆகித் தில்லைநடராசனுக்கும், அவரின் அடியாரான உமாபதிசிவத்துக்கும் பலன்கருதாது தொண்டுப்பணியாக மலர்ந்ததாலும் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார். எனவே முத்திபெறத்தகுதி குலப்பிறப்போ, பெரும் படிப்பறிவோ இல்லை, மாறாக அன்பு அவ்வன்பும் எவ்விதப்பலனையும் கருதாத தொண்டாக மாறும்நிலையே முக்கியம். இதனைத் தன் ஞானத்தால் உணர்ந்த உமாபதிசிவம் அவருக்கு முறையாக அருள்செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்; அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார்.
இதனைக் கண்ட அவர் சுற்றத்தார், உண்மை உணராது, மன்னவனிடம் சென்று, உமாபதிசிவம் பெற்றான் சாம்பானை எரித்துக் கொன்றுவிட்டதாகப் பழிகூறித் தங்களுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று முறையிட்டனர். மன்னன் அவரை அழைத்து வினவியபோது, அவர் நிகழ்ந்ததைக் கூறினார். சிவதீட்சையின் மேன்மையையும், இறைவன் ஆணையையும் விளக்கினார். அதனை முழுதும் நம்பாத மன்னன், அப்படிஎன்றால் இங்குள்ள வேறு யாராவது ஒருவருக்கு முத்தியளித்துக் காட்டுக என்று கூறினான். அதனைக்கேட்ட உமாபதிசிவம், அங்கிருந்த அனைவரையும் உற்றுநோக்கினார், அவர்களுள் எவர் ஒருவருக்கும் முத்திபெறும் தகுதியில்லை. தகுதியான 'சத்திநிபாதம்' பெற்ற நிலை அடைந்தவர் இல்லை என்பதைக் கண்ட உமாபதிசிவம், வருந்தி மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது, அங்குக் கோமுகையின் பக்கத்தில், நாளும் இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனத்தின் நீரை (அபிசேக நீரை) உண்டு வளர்ந்த முள்ளிச்செடியே தக்க பக்குவநிலையில் இருந்ததனைக்கண்டார் உமாபதிசிவம். தம் அருட்பார்வையினால் அமமுள்ளிச்செடியை நோக்க, அச்செடி ஒளிப்பிழம்பாக மாறி விசும்பில் எழுந்து மறைந்தது. அதனைக்கண்ட மன்னனும், சுற்றத்தாரும் உண்மையுணர்ந்து உமாபதிசிவத்தைப் பணிந்து வணங்கினர்.
இவரின் ஆசிரியர் மறைஞான சம்பந்தர், அருணந்தி சிவத்தின் மாணவராவார்; அருணந்தி சிவம் மெய்கண்டாரின் மாணவர் ஆவார்.
இந்நூல் திருக்குறள் போலக் குறள்வெண்பாக்களால் ஆன நூல். ஆனால், 'தத்துவம்' பற்றியது. திருக்குறள் போல ஒவ்வோர் அதிகாரத்திற்கும், பத்துப்பத்துக் குறள்கள் வீதம் மொத்தம் 100 குறள்களைக் கொண்டது. சைவ சித்தாந்தக் கல்வியறிவு பெறவிரும்புவோர் உண்மை விளக்கத்தை அடுத்துக் கற்பது திருவருட்பயன் ஆகிய இந்தநூலே.
மெய்கண்ட சந்தானத்தில், மெய்கண்டார், அருணந்தி, மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் சந்தானகுரவர் எனப் போற்றி உரைக்கப்பெறுவர். இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சந்தனாச்சாரியார் புராண சங்கிரகம் எனும் நூலில் நாம் காணலாம்.

மேலும் இவர் சிவப்பிரகாசம், நெஞ்சுவிடுதூது, வினாவெண்பா, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், போற்றிப் பஃறொடை எனும் பிற ஆறு தத்துவ நூல்களையும் இயற்றியுள்ளார்.

இவையே அன்றிக் கோவிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக்கோவை முதலிய நூல்களையும் இயற்றினார் என்றும் கூறுவர்.

உமாபதி சிவாசாரியார் அருளிய[தொகு]

திருவருட்பயன்- மூலம்[தொகு]

திருவருட்பயன்/குறள்:1-100 - அனைத்துக் குறட்பாக்களும் ஒரே பக்கத்தில்.
திருவருட்பயன்/குறள்:1-20
1.பதிமுதுநிலை: 01-10
2.உயிரவைநிலை: 11-20
திருவருட்பயன்/குறள்:21-40
3.இருள்மலநிலை: 31-40
4.அருளதுநிலை: 41-50
திருவருட்பயன்/குறள்:41-60
5.அருளுருநிலை: 41-50
6.அறியும்நெறி: 51-60
திருவருட்பயன்/குறள்:61-80
7.உயிர்விளக்கம்: 61-70
8.இன்புறுநிலை: 71-80
திருவருட்பயன்/குறள்:81-100
9.அஞ்செழுத்தருள்நிலை: 81-90
10.அணைந்தோர் தன்மை: 91-100

பார்க்க:[தொகு]

சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
வினாவெண்பா
இருபாஇருபது
உண்மைவிளக்கம்
சித்தாந்தச் சாத்திரங்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்&oldid=1478785" இலிருந்து மீள்விக்கப்பட்டது