உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளுவமாலை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

'திருவள்ளுவமாலை'

[தொகு]

பார்க்க:

திருக்குறள்
திருக்குறள் அகரமுதலி

மூலம், பதப்பிரிப்பு, கருத்துரையுடன்

[தொகு]

திருவள்ளுவமாலைப் பாடல்கள் சங்கப்புலவர்களால் பாடப்பட்டவையாகும். இல்லையென்று கூறுவோரும் உண்டு. எப்படியானாலும், ஒரு நூலுக்கு இப்படிப்பட்ட வாழ்த்துமுறை முதன்முதலாக ஏற்பட்டது 'முப்பால்' எனும் திருக்குறளுக்கே ஆகும்!

அசரீரி

[தொகு]
மூலம்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க- விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல் (01)
பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.
பதப்பிரிப்பு
திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க
உருத்திரசன்மர் என உரைத்து வானில்
ஒருக்க ஓ என்றது ஓர் சொல்
கருத்துரை
'அருள்திரு' என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து 'ஓ' என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.

நாமகள்

[தொகு]

நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள்.

மூலம்
நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு (02)
பதப்பிரிப்பு
நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
வள்ளுவன் வாயது என் வாக்கு
கருத்துரை
மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்.

இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.

இறையனார்

[தொகு]

மூலம்

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)
பதப்பிரிப்பு
என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்
கருத்துரை
இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.

இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.
கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள்.

மிகஅழகான ஒப்புமை.

உக்கிரப் பெருவழுதியார்

[தொகு]
மூலம்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி (04)
பதப்பிரிப்பு
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி
கருத்துரை
இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.
நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.

கபிலர்

[தொகு]
மூலம்
தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (05)
பதப்பிரிப்பு
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (௫)

(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)

கருத்துரை
வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.

பரணர்

[தொகு]
மூலம்
மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)
பதப்பிரிப்பு
மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து
கருத்துரை
இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.

இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.

நக்கீரர்

[தொகு]
தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று (07)
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று
(தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.)

கருத்துரை:
தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!

மாமூலனார்

[தொகு]
அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார். (08)
பதப்பிரிப்பு
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

கருத்துரை:
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதி, வள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த 'கண்ணன்' போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை 'மனிதன்' என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)

கல்லாடர்

[தொகு]

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி (௯)


ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின்
நன்று என்ப ஆறு சமயத்தார் - நன்று என
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் பொழிந்த மொழி. (09)

'கருத்துரை:
உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.

சீத்தலைச் சாத்தனார்

[தொகு]

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (௰)


மும் மலையும் முந் நாடும் முந் ்நதியும் முப் பதியும்
மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் - மும் மாவும்
தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ
பா முறை தேர் வள்ளுவர் முப் பால். (10)

கருத்துரை:
சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு). அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி). அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா? அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.

மருத்துவன் தாமோதரனார்

[தொகு]
சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (11)

கருத்துரை:
தன்பகை எனக்கோபித்து வெகு்ண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று.

நாகன் தேவனார்

[தொகு]
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
முப்பால் மொழிமூழ்கு வார் (12)

கருத்துரை:
நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.

அரிசில்கிழார்

[தொகு]
பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால் (13)

கருத்துரை:

பொன்முடியார்

[தொகு]
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள் (14)

கருத்துரை:

கோதமனார்

[தொகு]
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று (15)

கருத்துரை:

நத்தத்தனார்

[தொகு]
ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் (16)

கருத்துரை:

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

[தொகு]
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல் (17)

கருத்துரை:

ஆசிரியர் நல்லந்துவனார்

[தொகு]
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல் (18)

கருத்துரை:

கீரந்தையார்

[தொகு]
தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர் (19)

கருத்துரை:

சிறுமேதாவியார்

[தொகு]
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை (20)

கருத்துரை:

நல்கூர் வேள்வியார்

[தொகு]
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு 921)

கருத்துரை:

தொடித்தலை விழுத்தண்டினார்

[தொகு]
அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள் 922)

கருத்துரை:

வெள்ளி வீதியார்

[தொகு]
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல் (23)

கருத்துரை:

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு (24)

கருத்துரை:

எறிச்சலூர் மலாடனார்

[தொகு]
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து (25)

போத்தியார்

[தொகு]
அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை

மோசிகீரனார்

[தொகு]
ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

[தொகு]
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்

மதுரைத் தமிழ்நாகனார்

[தொகு]
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

[தொகு]
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்

உருத்திர சன்மகண்ணர்

[தொகு]
மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு

பெருஞ்சித்திரனார்

[தொகு]
ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன

நரிவெரூஉத் தலையார்

[தொகு]
இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்

[தொகு]
புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

[தொகு]
இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து

கவிசாகரப் பெருந்தேவனார்

[தொகு]
பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

மதுரைப்பெருமருதனார்

[தொகு]
அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு

கோவூர்க் கிழார்

[தொகு]
அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி

உறையூர் முதுகூற்றனார்

[தொகு]
தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு

இழிகண் பெருங்கண்ணனார்

[தொகு]
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்

[தொகு]
ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

[தொகு]
வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு

வண்ணக்கஞ் சாத்தனார்

[தொகு]
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓதுகுறட் பாஉடைத் து

களத்தூர்க் கிழார்

[தொகு]
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்

நச்சுமனார்

[தொகு]
எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா

அக்காரக்கனி நச்சுமனார்

[தொகு]
கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்

நப்பாலத்தனார்

[தொகு]
அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு

குலபதி நயனார்

[தொகு]
உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

தேனிக்குடிக் கீரனார்

[தொகு]
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து

கொடிஞாழல் மாணிபூதனார்

[தொகு]
அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு

கவுணியனார்

[தொகு]
சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா

மதுரைப் பாலாசிரியனார்

[தொகு]
வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி

ஆலங்குடி வங்கனார்

[தொகு]
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து

இடைக்காடர்

[தொகு]
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

அவ்வையார்

[தொகு]
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

(திருவள்ளுவமாலை நிறைவு)

குறிப்புதவி

[தொகு]
திருக்குறள் - பரிமேலழகர் உரை பின்னிணைப்பு.
பார்க்க:
[தொகு]
திருக்குறள்அகரமுதலி
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
திருக்குறள் பரிமேலழகர் உரை
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவள்ளுவமாலை&oldid=1526480" இலிருந்து மீள்விக்கப்பட்டது