திருவள்ளுவ நாயனார் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தனிப்பாடல் திரட்டு மூலம்
என்னும் நூலின்
மூன்றாவது பாடல் தொகுப்பில் உள்ளவை
இந்தப் பாடல்கள்
நூல் பக்கம் 44-45
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அவ் அவ் அமையங்களில் கூறிய தனிப்பாடல் திரட்டு.

  • குறிப்பு
    • தனிப்பாடல் திரட்டு மூலம் என்னும் நூலில் 44, 45 ஆம் பக்கங்களில் உள்ள பாடல்கள் இவை.
    • இந்தத் திருவள்ளுவ நாயனார் திருக்குறள் பாடிய திருவள்ளுவர் அல்லர். திருக்குறள் பாடிய திருவள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தவர். பாடலமைதியும், பாடலிலுள்ள சொற்களும் இவரது காலத்தை இந்தக் கால எல்லைக்குத் தள்ளுகின்றன. திருவள்ளுவர் பாடியதாக 'ஞானவெட்டியான்' என்னும் நூல் ஒன்று உண்டு. அது வேறு. இந்தத் திருவள்ளுவ நாயனாரின் பாடல்கள் தத்துவ ஞானக் கருத்துகளைக் கூறுவதைக் காணலாம்.

பாடல்கள்[தொகு]

ஔவையார் முதலிய எழுவர் பாடியதாக 7 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கு 6 புலவர்களின் பாடல்கள் உள்ளன. இவர் ஏழாமவர். எனவே இவரது பாடல் வரிசை எண் 8-ல் தொடங்குகிறது.

பாடல் 1-5[தொகு]

எவ்வுயிரும் காக்கஒரு ஈசன்உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் யான்ஒருவன் அல்லனோ – வவ்வி
அருகுவது கொண்டிங்(கு) அலைவதேன் அன்னே
வருகுவது தானே வரும் (8)
எல்லா உயிரையும் காப்பாற்றுவதற்கென்று ஒரு ஈசன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை. இருந்தால் அவன் காப்பாற்றும் உயிர்களில் நானும் ஒருவன் இல்லையா? அப்படி இருக்கும்போது அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவன் பக்கத்திலேயே இருக்க அலைவது ஏன்? தாயே! எல்லாருக்கும் வரவேண்டியது தானே வரும்.
பூவில் அயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி அளந்தோனும் தாமிருக்க – நாவில்
இழைநக்கி நூல்நெருடும் ஏழைஅறி வேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து . (9)
பூவில் இருக்கும் பிரமன், காப்பாற்றும் இந்திரன், உலகைக் காலால் அளந்த திருமால் ஆகியோர் இருக்கும்போது (நெசவு செய்யும்போது அறுந்த) நூலின் இழைகளை நா எச்சிலில் தடவி கையால் நெருடி ஒட்ட வைக்கும் ஏழை நெசவாளியாகிய நான் அறிவேனோ, கனங்குழையாகிய உமையை விரும்பிப் பிச்சை எடுப்பவன் கூத்தை.
ஐயரென்(று) உரைத்தீர் நாயேற்(கு) அடுக்குமோ அருளிலேனைப்
பொற்பொடு களவுமற்றுப் புலன்களை ஒடுக்கிக் கொண்டு
உய்யவே புலன்கள் ஐந்தும் உயர் பரவெளி உள்ளாக்கி
வெய்யவன் மதியம் போல விரவுவர் ஐயராவர் .(10)
ஐயர் என்று உங்களைக் கூறிக்கொள்கின்றீர்கள். உங்களின் நாயாகிய எனக்கு இது அடுக்குமா? நான் உங்களைப் போன்ற அருள் இல்லாதவன். (ஐயர் என்றால் யார் தெரியுமா?) பொலியும் தன்மையோடு களவு முதலானவற்றைச் செய்யும் புலன்களை ஒடுக்கிக்கொண்டு, உய்தி பெறுவதற்காக அந்தப் புலன்கள் ஐந்தையும் உயர்ந்த பரவெளிக்குள்ளே வைத்துக்கொண்டு வெயிலவன் சூடிக்கொண்ட மதியம் போல மருவி விளங்குபவரே ஐயர் ஆவார்.
ஞானவான் என்று சொன்னீர் நாதவிந்து வும்கடந்து
கானலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமானந்தம்
தானெனும் அவை யிரண்டுந் தவிர்ந்து தன் வசமுங்கெட்டு
மோனமும் கடந்தே அப்பால் முடிந்தவர் ஞானியாவர் .(11)
உங்களை ஞானவான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். (இது சரியா என எண்ணிப் பாருங்கள்) யார் ஞானம் பெற்றவர்? நாதம், விந்து ஆகியவற்றைக் கடந்து எண்ணிப் பார்க்கவேண்டும். தனக்குள் உலாவும் ஆசை என்னும் கானல் நீரையும், அதன் தடுப்பு மலைகளையும் சுட்டுப் பொசுக்கியிருக வேண்டும். மிகப் பெரிய மனவெளியாகிய பரமானந்தம், தான் என்னும் அகந்தை என்னும் இரண்டையும் விட்டிருக்க வேண்டும். நீ உன் விருப்பம் போல உன் விருப்பப்படி வாழக்கூடாது. மௌன நிலையையும் கடந்து அப்பால் நிலைகொண்டு அங்கே தன்னை முடிந்து வைத்துக்கொண்டிருப்பவர்தான் ஞானி.
சாதியிலே தொண்ணூற் றொன்பானாஞ் சாதி சமயத்திற் பதின்மூன்றாம் சமயமாகும்
நீதியிலே சிவனுடைய நீதியாகும் நிலைமையிலே வேதாந்த நிலைமையாகும்
ஆதியிலே யெங்களூர் கருவூராகும் அந்தத்தில் போயடைவோம் பேரூர்தன்னில்
சோதியிலே பரஞ்சோதிக் கூட்டமாகும் சொல்லுதற்கு எங்கள்குலம் சுக்கிலமதாமே .(12)
சாதிகள் 98. நான் 99 ஆவது சாதி. சமயங்கள் 12. நானோ 13 ஆவது சமயத்தைச் சேர்ந்தவன். சிவன் நீதிதான் எனக்கு நீதி. வேதாந்தம் போன்றதுதான் என் நிலைமை. ஆதியில் எங்கள் ஊர் தாய்வயிற்றுக் கரு. முடில் போய் அடையும் ஊர் 'பேரூர்'. பரஞ்சோதிக் கூட்டத்தில் வெளிச்சம் போட்டுக்கொண்டிருக்கிறேன். எங்கள் குலம் தந்தை விட்ட விந்து. (வேறு எதையும் நானோ, நாங்களோ சேர்ந்தவர்கள் இல்லை.)

பாடல் 6-10[தொகு]

எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழென்று அறி .(13)
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது.
நில்லு நில்லென்று சொன்னீர் நேசபாசம் களைந்தும்
புல்லறிவோடு வாங்காப் புலைகொலை களவுமற்றுச்
சொல்லுதற்கரிய ஞானச் சுழிமுனை முடியின்மீதில்
எல்லையுங் கடந்தே யப்பால் ஏகமானவர்கள் நிற்பார் .(14)
நில்லு நில்லு என்று சொல்கிறீர்கள். நான் இங்கெல்லாம் நிறகமாட்டேன். நேசம், பாசம், புலையறிவு ஆகியவற்றை விட்டுவிட்டு, புலால் உண்ணுதலையும், உயிர்க்கொலை செய்தலையும் தவிர்த்துவிட்டு, தலை உச்சியில் ஞானம் சுற்றிக்கொண்டே இருக்கும் சுழிமுனையில் நினைவை நிறுத்தி, அதனையும் கடந்து சென்று அப்பால் உள்ள வெட்டவெளியில் தனிப்பட்டவர் நிற்பர். நானும் அங்குதான் நிற்பேன்.
இருமிருமென்று சொன்னீர் ஏற்குமோ யேழையேற்குத்
தருபொருளுணர்ந்து சைவசமயமும் அனைத்துநீங்கி
மருடருவினையும் நீங்கி மாசிலா வுண்மைஞானம்
பொருந்தின ரிருப்பர் பின்பு பொறாதவர் இறப்பர்தாமே .(15)
இருங்கள் இருங்கள் என்று சொல்கிறீர்கள். நான் இங்கெல்லாம் இருக்கமாட்டேன். நான் ஏழை. எனக்குப் பொருள் வேண்டும். அந்தப் பொருள் ஞானம். இதனைச் சைவ சமயம் தரவில்லை. எனவே அதனை விட்டு நீங்கி இருப்பேன். மயக்கம் தரும் வினைகளையும் விட்டு நீங்கியிருப்பேன். மாசில்லாத உண்மையான ஞானநிலையில் அமர்ந்திருப்பேன்.
‘போம்’என உரைத்தீர் என்னைப் பொறியொடு புலன்கள் ஐந்தும்
‘ஆம்’எனும் இச்சையோடும் அங்கனே மதித்துக் கொண்டே
ஏமமும் சாமமற்றே இரவொடு பகலும் அற்றுச்
சோமனார் பதியை விட்டுத் துறந்தவர் போவரன்றே. (16)
போங்கள் போங்கள் என்று சொல்கிறீர்கள். போகத்தான் போகிறேன். என் புலன்கள் ஐந்தும் உன்னால் எல்லாம் 'ஆம்' என்று ஆசையால் கூறுகின்றன. அவை என்னை மதிப்பிடுகின்றன. சாமம் ஏமம், இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சோமம் என்னும் மது அருந்தும் சோமனாரை விட்டுவிட்டுத் துறந்து போய்விடுகிறேன்.
அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ
என்தூங்கும் என்கண் இரா. (17)
திருவள்ளுவ நாயனார் தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.
இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?