திருவாசகத்தேன்/தனித்துணை

விக்கிமூலம் இலிருந்து
தனித்துணை

ந்தப் பிறப்பு, துன்ப நீக்கத்திற்காகவே துன்பத்தின் காரணமாய அறியாமை நீக்கத்திற்காகவே! ஆயினும் உடலுறு வாழ்க்கையில் உயிர் உறும் துன்பம் தாங் கொணாதது; உள்ளவாறு உணரின் தாங்கவே இயலாதது. இத்துயர் அனுபவத்தின் விளைவே.தாக்கமே திருவருட் சிந்தனை!

இறைவன்- சிவபெருமான் உயிருக்கு வாய்த்த தனித் துணை! 'தனி' என்ற அடைசொல் சிறப்புப் பற்றியது. உயிருக்கு ஈடும் எடுப்பும் இல்லாத துணையாதலின் 'தனித்துணை' என்றார். உயிர் சந்திக்கும் துணைகள் பலப்பல உண்டு. தாயினும் சிறந்த துணை ஏது? ஆயினும் தாய் காலத்தினால் பிரிக்கப்பட்டு விடுகிறாள். இடம், தொலைவு நட்புத் துணையினைப் பிரித்து விடு கிறது. நண்பரெனக் கொள்பவர்களில் பலர் கொடுத்தல் குறைபடும் பொழுது பிரிவர். ஆனால், இறைவன்- சிவன் பிரிவதில்லை. இறைவனுக்கும் உயிருக்குமுள்ள உறவு குறியெதிர்ப்பு இயலானது. தன்னலமற்றது. உயிரின் ஆக்கத்திற்காக இறைவன் தொடர்பு. கடவுள்- உயிர் இரண்டுமே காலங்கடந்தவை. ஆதலால், க்ாலத்தால் பிரிவு நிகழ வாய்ப்பு இல்லை. இறைவன் உயிர்க்குயிரதாக இருப்பதால் இடத்தால் பிரிவும் இல்லை. அதுமட்டுமல்ல. "நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும்" இறைவன் பிரிவதில்லை. இறைவன் சொர்க்கத்தில் வெளிப்பட்டும் நரகத்தில் மறைந்திருந்தும் அருள் செய்வான். தாய், மருத்துவத்திற்கு ஆளாகின்ற குழந்தைக்கு மறைந்தே இருப்பாள். பிரியாதது மட்டுமே தனித்துணைக்கு உரிய சிறப்பன்று. உற்றுழி உதவுதலில் இறைவன் தனித் துணையேயாம். நோய்க்கு மட்டுமல்ல; நோயின் மூலத் திற்கும் மருத்துவம் செய்து காப்பாற்றுபவன் இறைவன். . பொன்னும் பொருளும் போகமும் தந்தருளி, மேலும், திருவையும் சேர்த்து வைப்பவன். ஆதலால் அவன் உயிர்க்குத் தனித்துணை ஆயினன்.

தனித்துணையாகிய இறைவன் ஆட்கொண்டருள, வான்பழித்து இம்மண்ணிற்கு வந்தருள்கின்றான்! இல்லை, இல்லங்கள் தோறும் தேடி எங்கே என்று வந்தருளி நிற்கின்றான். இறைவன் வந்ததைக் கண்டும் காணாமலும் பணியில் ஈடுபட்டிருப்பதாக பாவனை காட்டினேன்! நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை! ஆன்மா இருக்கிறது! இறைவன் நிற்கிறான். திருவடி நோக நின்றருள் செய்கின்றனன். நாழிகைகள் ஒடுகின்றன. நாட்கள் ஒடிக் கழிகின்றன. ஆயினும், இறைவனை நிமிர்ந்து பார்க்கும் உளப்பாங்கு வரவில்லை. 'வருக' - என்று வணங்கி அழைக்கவும் மனம் ஒருப்படவில்லை. முகமன் கூற, உபசரிப்பு செய்ய எழுச்சி கொள்ளவில்லை. இறைவன் சும்மா இருப்பானா? இறைவன் தான் வந்திருப் பதை அறிவிக்கத் தன் திருவடிகளை நிலத்தில் தோயச் செய்து தாளந்தப்பாது தூக்கி எடுத்து வைக்கின்றான். அடக்கமாகக் காலை மாற்றுகிறான். ஆயினும் ஒவி கேட்கிறது. அந்தச் சூழ்நிலையிலும் நான் கண்டு கொள்ளவில்லை.

இறைவன் செருமல் ஒலி செய்கிறான். அப்போதும் நான், "நான்" தான்! அசைந்து கொடுக்கவில்லை. நான் என்ன சாமான்யனா? தலை நிறைய மூளை இருக்கிறது: அறிவு இருக்கிறது. பெற்றிருப்பது அறிவா? அறியா மையா? அது போகப் போகத் தெரியும் சாயம், வெளுத்துப் போகக் கூடியதுதான். ஆயினும் ஆணவம் ஆட்டிப் படைக்கிறது! தலையால் நடந்தேன்! அம்மையார் நடந்த நடையல்ல! அது தலைக்குச் செய்த நடை! அம்மையார் நடை தவம் செய்த தவம்! ஆனால், நான் நடந்ததோ தருக்கி நடந்த நடை! எனக்குத் துணை எது? வினைதான் துணை வினை பெருக்கி வினையால் அழியும் அவலத் திற்கு ஏது மருந்து முற்றர்கத் தற்கொலைக்குச் சமம்!

வினை செய்தல் உயிரியற்கை மனம், உடல், வாக்கால் இடையறாது வினை செய்தலே உயிரியற்கை. வினை செய்தலும் வேண்டும். வினை செய்தல்ைத் தவிர்த் தலும் இயலாது; கூடாது. உயிரியற்றும் வினை உயிர்க்கு மருந்தாக அமைதல் வேண்டும். தண்ணிரால் உடலைக் கழுவுதலும் அவசியம். ஆயினும் உடன் துடைத்தலும் அவ்சியம். அதுபோல வினை செய்தலே உயிர் வாழ்க்கை; வினை செய்தலே துன்ப நீக்கத்திற்கு மருந்து. எப்போது வின்ை செய்தல் துன்பமாகிறது? எப்போது மருந்தாகிறது? வினை செய்தலைத் தவமாகக் கொண்டால் துன்பம் இல்லை; துயரில்லை. வினை செய்தலை வாணிகமாக்கக் கூடாது. அற விலை வாணிகமும் இதே வின்ன செய்தல் வழி, செருக்குக் கொள்ளுதல் ஆகாது. புகழ் வேட்டலும் கூடாது. "பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்" என்பது மாணிக்கவாசகர் வாக்கு. "வீடும் வேண்டா விறலின் விளங்கினார்'" என்பது சேக்கிழார் வாக்கு. திருவாசகம் முழுதும் பாழ்த்த பிறப்பறுத்தலை நோக்க மாகவுடையது! அதுவும் வீடுபேறு கருதியல்ல! கூத்துடை யானைப் பாடிக் களிப்புறுதலுக்கேயாம். என்றும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு செய்தலுக்கேயாம். உயிர், வினை செய்தலை நோன்பாகக் கருத வேண்டும். தனக்கென முயல்வது நோன்பல்ல. பிறருக்கென முயல் வதே நோன்பு. உயிர்கள் செய்யும் பணிகள் பெருந்தன் மைக்குச் சான்று அன்று. அவை கடமை. இந்தப் பரந்த உலகில் வாழ்தலுக்குரிய குடிக்கூலியே தொண்டு, சேவை. வினை செய்க! வையகம் பயனுறச் செய்க!

இறைவன் புறத்தே கானும் துணையல்ல. அக நிலைத் துணை; உயிர்க்குயிரதாக நிற்கும் துணை மனத்திற்கே துணை. உயிர், மனம் வழியேதான் எண்ணுகிறது; இயங்குகிறது. வாழ்க்கையின் முதலும் முடிவு மாகிய கருத்தை உருவாக்குவதே மனம். மின்த்துள் நின்ற கருத்தானை' என்பது தேவாரம். மனமே உலகை நோக்குகிறது; செய்திகளைச் சேகரிக்கிறது; தேவைகளை நிர்ணயிக்கிறது; நிர்ணயித்த தேவைகளை அடைய முயற்சி செய்கிறது. உயிர்க்கு மனத்தொடு புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலைக் கருவிகளும் உண்டு. ஆயினும் மனமே முதல்வாயில்; மனமே முதற்கருவி. மனம் விரும்பினால் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளையும் பயன்படுத்தலாம். மனம் தனித்து இயங்காது. புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்பவை சிறப்பாக அமையும். மனம் மட்டுமே இயங்கினால் செயற்பாட்டில் உணர்ச்சியும் எழுச்சியுமே மிஞ்சும். மனம் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ள மனிதன் பரபரப்புடையவனாக இருப்பான்; உணர்ச்சி வசப்படுவான்; ஆத்திரப்படுவான்; தீமை செய்து கொள்வான். மனம் வாழ்நிலையின் தொடக்கமாதலால் அந்த மன நிலையிலேயே இறைவன் துணையாக அமைந்து வழிகாட்டுகிறான்; வழி நடத்துகிறான். ஆனால், பலர் அந்த மனத்தின் அறிவுறுத்தலை, மனச் சாட்சியின் குரலை மதிப்பதில்லை, எடுத்துக்கொள்வதில்லை. மனச்சாட்சியின் குரல், ஆன்மாவின் ஆணவ எடுப்பில் எடுபடாமல் போகிறது. பின் காலம் செல்லச் செல்லப் பட்டறிவின் வழியில்தான் மனச்சாட்சி அங்கீகரிக்கப்பெறுகிறது. அவ்வழி நடக்கும் வாழ்க்கையும் தொடங்குகிறது. இதுவே சமய வாழ்க்கையின் தொடக்கம்.

இந்த நிலைக்கு உயிர்கள் வரும் வரையில் இறைவன் உயிர்களைக் கைவிடமாட்டான்! உயிர் செய்யும் துரிசுகளுக்கு உடந்தையாக இருந்து உடன்போய் பிழைகளைப் பொறுத்தாள்வான். பின் பிழைகளைத் தவிர்க்கவும் கற்றுத்தந்து, பிழைகளைத் தவிர்த்து வாழும் வாழ் நிலையை அருள்வான். ஆணவத்துடன் இரண்டறக்கலந்து முனைப்புடன் வாழும் உயிர்களை- பிழை காணாது பால் கறக்கும் சிலர் பிழுக்கையை ஒதுக்கிப் பாலினைக் கொள்வதைப் போல ஆட்கொண்டருள்வான். சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுக்கும் டெரியோன் இறைவன்.

உயிர்க்கு வாழ்க்கைக்குரிய முதல் எது? முதல்தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும். உயிர் வாழ்க்கைக்குரிய ஆக்கங்கள் அனைத்தையும் வழங்கிய முதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆம்! உயிர் என்றுமுளது; உயிர் இயல்பிலேயே ஆணவத்துடன் அத்துவிதமாக முடங்கிக் கிடக்கிறது; அறிவியக்கத்திற் குரிய வாயில்கள் இருந்தும் ஆண்வத்தின் கூட்டால் செயலடங்கி முடங்கி மூலையில் கிடக்கிறது. அப்போது இறைவனின் திருவருள் நோக்கம் உயிரின்பால் வீழ்கிறது. அதுவே வாழ்க்கையின் முதல் தொடக்கம்! உயிர்க்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிவுக் கருவிகள் அடங்கிய நுண்ணுடல் கிடைக்கிறது. நுண்ணுடல் கிடைத்தவுடன் உயிர்க்கு வாழ்க்கை தொடங்குகிறது; தொடர்கிறது. இந்தத் தொடக்கத்திற்குப் பின் உயிர் செய் கருவிகளடங்கிய பரு உடலைப் பெற்றோர்வழி பெற்று மண்ணில் பிறப்பினைப் பெறுகிறது. இந்தப் பிறப்பில் தான் உயிர் பலமுறை சுற்றி வருகிறது. செயற்பாட்டுக் குரிய உடல் மாறும். அறிகருவிகள் அடங்கிய நுண் ணுடம்பு கடைசிவரையில்- முத்தி நிலை வரையில் தொடரும். இங்ஙனம் உயிர்க்கு வாழ்நிலை முதலாகவும், மனத் துணையாகவும் இருந்து வாழ்க்கையை இயக்கியருள்கிறது திருவருள்!

இந்த உயிர் வாழ்க்கை, வினைச்செயல், பயன் துய்த்தல், சாதல், பிற என்று தொடர்ந்து வருகிறது. கறங்கு போல் சுற்றிச் சுற்றி வருகிறது. இதனைத் துய்த்துவரும் பொழுதுதான் வாழ்க்கை துன்பமடைகிறது. வாழ்க்கையை இன்பமாக்கினாலும் இன்பத்தில் நிழலாகத் துன்பமே தொடர்கிறது! உயிர் உற்று அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே வினைக்கு முதல். துன்பத்திற்குக் காரணம்; பிறவிக்கு வித்து. மனம் எளிதில் நிறைவு பெறாது. அவா- ஆசை, கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் இயல்பினது. ஒரோவழி ஆவல் நிறைவெய்தி மனம் நிறைவு கொண்டாலும் . இந்த மன நிறைவு நிலையானது அல்ல. இந்த மன நிறைவும் குறைந்த காலத்திற்கே இருக்கும்; மயக்கம் பொருத்தியதாகவும் இருக்கும். மனவெழுச்சி விரிவடையும் தன்மையுடையது, ஆசை வெட்கமறியாது. மனம் தனது ஆசையை நிறைவேற்றி மட்டும் உரத்த, கூச்சலிடும். மனம், தன் வயப்பட்டுக் கிடக்கும். மனிதர்களை ஆட்டிப்படைக்கும்; அடிமைப்படுத்தும், சுதந் திரத்தைப் பறிக்கும். இதனால், உயிர் ஒயாது வினை இயற்றியும் இன்ப துன்பச் சுழற்சியில் சிக்கியும் அனுபவித்தும் அனுபவியாமலும், இந்த உலகில் ஏற்படும் அநாகரிகத் தன்மையுடையோர்களால் தாக்குண்டும் பாதிப்புக்குள்ளாகும். உயிர் செத்தும் பிறந்தும் சுற்றிச் சுற்றி வந்ததால் உடலுறு உளைச்சல், மன உளைச்சல்களுக்கு இரையாகி எய்த்துப் போகிறது; களைத்துப் போகிறது. எய்ப்பிலும் களைப்பிலும் வைப்புப் பொருள் போல் இறைவன் துணை செய்கிறான்; அஞ்சல்' என்று அருள்செய்கிறான். மந்திரமும் மருந்தும் ஆகி நின்றருள் செய்கிறான். ஆதலால், துன்பத்தின் முடிவில் எய்ப் பினில் வைப்பாக் விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றுதல் வேண்டும். இத்தருணத்தில் பற்றவேண்டியது அவன் திருவடிகளையே! இந்த நிலையிலேயே மாணிக்க வாசகர் பிறந்து வளர்ந்து, கற்று, முதலமைச்சராகி, அரசுப் பணிகள் செய்து எய்த்துக் களைத்த நிலையிலேயே திருப்பெருந்துறை' இறைவனைச் சரண் அடைகின்றார். "எய்ப்பினில் வைப்பு" என்று எண்ணி அடைக்கலம் புகுகின்றார். திருப்பெருந்துறைச் சிவனும் ஆட்கொண்டருள்கின்றான். உயிர்களை இறைவன் ஆட்கொண்டருளிய பிறகு, உயிர்கள் இறைவனின் அடைக்கலப் பொருள்களாகின்றன. பாதுகாப்பது இறைவனின் பொறுப்பு. இங்ங்ணம் அடைக்கலப் பொருள்களாகிய உயிர்களைக் காக்கவே திருவிளையாடல்கள்! மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, மாணிக்கவாசகரின் பணிகள் இறைவனின் பணிகளாயின். மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைச் சேவகனாகிறான்! கொற்றாளாகிறான். இது நியதி.

பிறவி, நோய் நீக்கத்திற்குரிய மருந்தே யாம்! ஆயினும், தெளிவும் தெளிவினுட் சிவமும் தோன்றும் வரை பிறவி ஒரு வலைதான்! துன்பந்தான் இந்தப் பிறவி வலையை அறுத்தெறிய முயலுவதே வாழ்க்கையின் நோக்கம்; பயன்! மான்னிக்கவாசகர் பழுத்த மனத்தராகிறார். புளியம்பழம் போலத்தான் மாணிக்கவாசகர் தம் வாழ்வியல் அமைந்திருந்தது. ஆதலால், வாழ்க்கை. உவர்ப்பாகிறது. இறைவன் திருவடிகளையே பேசுதல் தவமாகிறது; வாழ்வாகிறது.

பிறந்து வினை பல செய்து நுகருமாறு நுகர்ந்து எய்த்துக் களைத்துப்போய் எய்ப்பினில் வைப்பாக என்றும் தனித்துணையாக விளங்கக்கூடிய இறைவன் திருவடிகளைப் பற்றுதலே வாழ்க்கை; வாழ்க்கையின் பயன்!

          தனித்துணை நீ கிற்க யான்தருக்
              கித்தலை யால் கடந்த
          வினைத்துணை யேனை விடுதிகண்
              டாய் வினை யேனுடைய
          மனத்துணை யே!என்தன் வாழ்முத
              லேஎனக் கெய்ப்பில் வைப்பே
          தினைத்துணை யேனும் பொறேன்
              துயராக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)