திருவாசகத்தேன்/பிரிவிலாத இன்னருள்!
அறிவி லாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
அறிவதை அருளிமேல்
நெறியெ லாம் புல மாக்கிய எந்தையைப்
பந்தனை அறுப்பானைப்
பிறவி லாத இன் னருள்கள் பெற் றிருந்துமா
றாடுதி பின நெஞ்சே!
கிறியெ லாம் மிகக் கீழ்ப்படுத் தாய் கெடுத்
தாய் என்னைக் கெடுமாறே!
(திருச்சதகம்— 36)
“மாணிக்கவாசகர் அறிவால் சிவமேயானவர்” என்று கூறுவது மரபு. ஆயினும் மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகப் பாடல்களில் தம்மை “அறியாதவன்” என்றும் “அன்பில்லாதவன்” என்றும் திரும்பத் திரும்பக் கூறுகின்றார். நல்ல நன்செய்யில் மருதாம்புப் பயிரே பயிர்போல் இருக்கும். மாணிக்கவாசகரின் பழுத்த மனத்தில் பிறந்து வெளிவந்த திருவாசகப் பாடல்களின் சொற்கள் அன்பில் நனைந்தவை; கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மையவை. மாணிக்கவாசகரின்— உடலில் இதயத்தில் பெருமான் எழுந்தருளினார். “என்றன் உடலிடன் கொண்டாய் நான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்று அருளியிருப்பது உணர்க. பிறவ துன்பமா? இன்பமா? பிறவி துன்பமாவதும் இன்பமாவதும் பிறவியைப் பயன்படுத்துவான்ரப் பொருத்தது. பொதுவாக மனிதன், வாழ்வாங்கு வாழ்ந் தால் பிறவியை இன்பமாக்கலாம்; இன்பமாக அனுபவிக் கலாம். அதனாலன்றோ "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றார் அப்பரடிகள். 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்றருளினார் திருமூலர். ஆனால், இன்பம் விழைவதும் இடும்பையை ஏற்க ஒருப்படாமையும் வாழ்வியல் அல்ல. நன்றும் தீதும் ஒப்பக் கருதும் பாங்கு தான்்் வாழ்வின் சிறப்பு. இத்தகு வாழ்வில் இன்பம் அமையும்; பிறவி இன்பமாகக் கழியும். ஆனால், அந்த இன்பத்தில் மூழ்கிப் போகாமல் வாழ்ந்தால் பிறவி துன்ப மாகாது; பிறவி சுமையாகவும் இருக்காது. ஆனால் எத்தனை பேர் இங்ஙனம் வாழ்பவர்கள்? கோடியில் ஒருவர்கூட இல்லை. 'நான்', 'எனது' என்ற செருக்கற்ற நிலை வாய்த்து வாழ்வோன்ரக் காண இயலவில்லை.
இன்று செருக்குடையோரே மிகுதி. தஞ்சாவூர்ப் பொம்மையைப் போல ஆட்டம் பேர்டுகின்றனர்; பாழ் படுத்துகின்றனர். "பாழ்த்த பிறவி" என்றார் மாணிக்க வாசகர். காரணங்கள் சீராக அமையின் காரியங்களும் சீராக அமையும். இன்று பலர் காரணங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காரணமின்றியே வெறுக்கின்றன்ர்; பகை வளர்க்கின்றனர். உழாத நிலத்தில் களை மண்டுதல் போல...அன்பால் உழாத நெஞ்சுடையராதலால் தீமையே நினைக்கின்றனர், தீமையே செய்கின்றனர். தம்முடைய செயல்கள் துன்பமாக விளையும்; பிறவியைத் துன்ப மாக்கும் என்பதை அறிவதில்லை. மூர்க்கராதலால் சான்றோர் சொல்லும் வார்த்தையைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை.
பிறவிக்குரிய - காரணங்கள். கெட்டால் பிறவியும், கெடும். சித்த விகாரங்கள் சுட்டெரிக்கப்பட்டால் பிறவிக்காடும் அழியும். சின்னத்தனமான காரியங்கள் செய்தல், வெறுப்ப்னவே செய்தல் கூடாது. சிறுமையும் வெறுமையும் பிறவிக்குக் காரணங்கள். வெறுப்பனவே செய்யும். பிறவி சீமைக் கருவை'யைப் போல வெட்ட வெட்ட தளிர்க்கும். இழி செயல் செய்வோரின் பிறவி தொடரும், அந்த ஆன்மாக்களின் இச்சையின்றியே தொடரும். பிறவி தொடர முயற்சிகள் வேண்டாம். இறைவனிடத்தில்கூட விண்ணப்பிக்க வேண்டாம். தாமே தொடரும்.
பிறவி நன்றாக அமையவும் இன்பமாக வந்து பொருந்தவும் ஆன்மா, இறைவனிடம் கேட்டுத்தான் அவனுடைய அருளிப்பாட்டுடன்தான் பிறக்க இயலும். ஆதலால், கெட்ட பிறவியை வேரும் வேரடி மண்ணுமாகக் களையவேண்டும், சீமைக் கருவையைத் தோண்டுவது போல! "பிறவியை வேரறுப்பவன் இறைவன்" என்று திருவாசகம் கூறும்.
பிறவிக்குக் காரணம் பாசம்; அவா. "அவா தவாஅப் பிறப்பினும் வித்து" என்றது. வள்ளுவம். இளையான்குடி மாறனார் கீரை பிடுங்கிய காட்சியைப் பாசப் பழிமுதல் பறிப்பார் போல என்று சேக்கிழார் கூறினார். பிறவி ஒட வேண்டுமாயின் அல்லது பிறவி இன்பமுடையதாக அமையவேண்டுமாயின் ஆசைகளை அகற்றுதல் வேண்டும். பாசத்தை விடுதல் வேண்டும். வாழ்க்கையை ஆட்டிப் படைத்து அவலப்படுத்துவன. ஆசாபாசங்கள். இந்த ஆசைக்கும் பாசத்துக்கும் காரணம் அறியாமை. அறியாமை என்பது பலர் கூறுவதுபோல ஒன்றும் தெரியாமை அல்ல. நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை. நல்லதாகவும் முறைபிறழ அறிந்து கொள்ளுதலே அறியாமை.
இருள், பொருளைக் காட்டாது. ஒரோவழி காட்டினாலும் உள்ளவாறு காட்டாது. அதுபோல அறியாமை ஆன்மாவைப் பற்றிய இருள். இது ஆன்மாவுக்கு நல்லன காண, நல்லன கேட்க வாய்ப்பளிக்காது; வாய்ப்பளிக்காதது மட்டுமல்ல- தடுக்கும். இந்த அளவில் அந்த இருள்- அறியாமை நின்றால் பரவாயில்லை. தீச்செயல்களைச் செய்யத் தூண்டும்; துணை போகும். அத்திச் செயல்கள் பிறவிக்கு வித்தாக அமைந்துவிடும். பிறவியின் நோக்கம் செயல். ஆனால் அச்செயல்- வினை இருள்சேர் இருவினையாக அமையாமல் ஒளி சேர் வினையாக, வாசனையாக அமையாத செயலாக- வினையாக அமைதல் வேண்டும்.
பிறவியின் நோக்கம் இருளை அகற்றுதல். இருள்சேர் இருவினையிலிருந்து விடுதலை பெறுதல் குறைவிலிருந்து நீங்கி நிறைவைப் பெறுதல்; குற்றங்களின்றும் விடுதலை பெறுதல்; குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்ளல்; சிந்தையிலும் செயலுறுப்புக்களிலும் பூட்டப் பெற்றுள்ள விலங்குகளை உடைத்து விடுதலை பெறுதல்; பரிபூரணனுக்கு அடிமையாதல் முதலியனவாகும். இப்படிப் பிறவியின் நோக்கம் நிற்ைவேற, முதலில் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும். அறியாமை அகலுதலைத் 'தெளிதல்' என்று தேவாரம் கூறும்.
"சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினும் சிவமுமாகி" என்று அப்பரடிகளும், "தெயவத் தெளிவின் தெளித்தோரப் பேணுமின்!" என்று இளங்கோவடிகளும் அருளியுள்ளமை உணரத்தக்கன. துன்பங்களிலிருந்தும் துன்பத் தொடக்குகளிலிருந்தும் அறவே விலக வேண்டுமானால் இறைவனின் திருவருள் தேவை.
அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, இறைவனைத் தேடாது. தேடினாலும் அவன் அகப்படுவதில்லை. ஆதலால் கருணையுடைய இறைவன் உயிர்க்குயிரதாகப் புகுந்து நின்றருளி ஆட்கொள்கின்றவன். இறைவன் ஆன்மாவினுள் உயிர்க்குயிரதாக எழுத்தருள்வது. இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறு. போன்றது. அறியாமையின்பாற்பட்டு சாக்கை நனைத்துத் தூக்குமாப் போலே வினைகள், செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டும் அவ்வினைகள், செயல்களின் ஈட்டல்கள்- இழப்புகள், இன்பம்- துன்பம் ஆகிய உணர்வுகளில் சிக்கிக் கொண்டும் மத்துறு தயிர் போலச் சுழன்று வினையாகவே ஆகிக் கிடக்கும் பொழுது- ஆன்மபோதத்தில் திளைக்கும்போது இறைவன் ஆன்மாவின் விருப்பம் அறியாமல் அவனே புகுந்து ஆட்கொள்ளுதல் இயல்பு- கருணை.
அறியாதார் மாட்டு அறிவுடையோர் வெறுப்புக் கொள்ளலாகாது. அன்போடு பழகி, அறிவு தருதல் வேண்டும். மாணிக்கவாசகர் தம்மை அறிவிலாதவர் என்று கூறிக் கொள்ளும் இடங்கள் பலப்பல. அறிய வேண்டுவன் வற்றை அறிதலே அறிவுடைமை. பலருக்கு உலகம் தெரியும். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இத்தகையோருக்குத் தெரிந்ததெல்லாம் சுயநலம்தான். அதுவும் நிர்வாணமான சுயநலம். வெறுப்பனவே செய்யும் வாழ்க்கைப் போக்கு. இத்தகைய வாழ்க்கைப் போக்கு மாறவேண்டுமாயின் அறிய வேண்டியதை அறிதல் வேண்டும். ஆன்மாக்கள் அறிய வேண்டியதை அறியுமாறு செய்து அருள்பாலிக்கவே இறைவன் சிவன் எம்பிரான் ஆலமர் செல்வனாக எழுந்தருளி அறிவித்து உணர்த்துகின்றான்.
விடுதலை பெறுதல் வீடு. வீட்டினை 'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்று திருக்குறள் கூறும். வானுலகம் பதவிகள் உலகம். பதவிகளும் மனிதனை மயக்குவனவேயாம். பதவிகள் மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடும். வீடு பற்றிய அறிவினை உணர்த்தினான் திருப்பெருந்துறை. சிவன். மாணிக்கவாசகருக்கு இறைவன் "மேல் நெறியெலாம் புலமாக்கிய" பண்பினை வியந்து பாடுகின்றார்; பரவுகின்றார். வெட்ப தட்பம், பயம் முதலியனவற்றிலிருந்து விடுதலை தந்து, பாதுகாப்புத் தருவது மண்ணகத்து வீடு. அதுபோல ஆன்மா, ஆணவ. வெப்பத்திலிருந்து விடுதலை பெற்று மாசில் வீணையாக, மாலை மதியமாக, iசு தென்றலாக, இளவேனிலாக விளங்கும் இறைவன் திருவடிகளில் தங்கிப் பாதுகாப்புப் பெறுதல் வீடு. இந்த வீடு பற்றிய அறிவினை, உணர்வினை, அனுபவத்தினை மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவன் அருளிச் செய்தனன். இறைவனைத் தாயிற் சிறந்த தயாவுடையான் என்று போற்றும் மாணிக்கவாசகர், அறிவு தந்து ஆட்கொண்டு அருளிய இறைவனை- சிவனை 'எந்தை' என்று போற்றுகின்றார். அறிவு தரும் பொறுப்பும் கடமையும் தந்தைக்கே உண்டு என்பதால் இங்ங்னம் கூறினார்.
அறியாமை அகன்று விட்டது. இருள்சேர் இரு. வினையும் இல்லை. என்றும் பிரிவிலா அருளும் கிடைத்து விட்டது. ஆயினும் வேம்பு தின்ற புழுப்போல, எலும்பு கடித்த நாய்போல மீண்டும் ஆன்மாவின் நெஞ்சு கீழ்மை நோக்கியே அழைத்துச் செல்ல விரும்புகிறது. நெஞ்சு போராடுகிறது. ஆன்மாவின் நலத்துடன் ஆன்மாவின் விருப்பத்திற்கு மாறாக நெஞ்சு மாறுபடுகின்றது. தன்னுடன் மாறுபட்டு நின்று போராடும் நெஞ்சை, திருஞானசம்பந்தர் சரிக்கட்டித் தன் வழிக்கு அழைக்க, முயற்சி செய்து வெற்றி பெற்றார்.
"நீ நாளும் நினைவாய் கன் கெஞ்சே
சா நாளும் வாழ் நாளும் யாரறி வார்."
என்றருளியுள்ளமையைக் கற்றறிக.
நெஞ்சைத் தன் வசம் வைத்துக்கொள்வது அவசியம். நெஞ்சு எங்கும் செல்லும்; எதையும் சொல்லும்; எதையும். செய்யும். பதைந்துருகும் பாழ் நெஞ்சம். "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!" என்று ஏசுவார் மாணிக்கவாசகர். இன்று மிகமிக மோசமான் மனிதர்கன்கூட, உமி குற்றிக்கை ஓய்வாதல்போல் வாழ்கிறவர்கள்கூட, பயனற்ற வாழ்க்கையைச் சுமந்து திரிபவர்கள்கூடத் தாம் தாம் வாழ்வதாகத்தான் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் வாழ்வது உண்மையல்ல. அவர்கள் நடத்துவது வாழாத வாழ்க்கையேயாம். பயனற்றனவெல்லாம் இருந்தும் பயனில்லை, இறந்தாலும் பயனில்லை என்பது திரண்ட கருத்து.
மாணிக்கவாசகர் தமது நெஞ்சத்துக்கு ஆசைகளைக் காட்டித் தம்பால் அணைத்துக்கொள்ள முயன்று வெற்றி பெற்றுவிட்டார் என்பதைத் திருவாசகம் உணர்த்துகிறது. இறைவன்- சிவன் வலியவந்து இம்மண் புகுந்து குருந்த மரத்தடியில் காத்திருந்து ஆட்கொண்டான். நெஞ்சமே! அவனுடைய திருவடிகளைச் சிந்தனை செய்! திருவருட் சிந்தனையுடன் திருப்பெருந்துறையுறை சிவனிடம் உனக்கு வேண்டியதை இரந்து கேள்! திருப்பெருந்துறை சிவன் நீ கேட்கும் எல்லாவற்றையும் தருவான். திருப்பெருந்துறையுறை சிவன் பெருங் கருணையுடையவன் என்று தமது நெஞ்சை திருப்பெருந்துறையுறை சிவனிடம் ஆற்றுப் படுத்துகின்றார். தமது நெஞ்சத்தினை இரத்து கேட்கின்றார் மாணிக்கவாசகர். ஆணவத்துடன், தொடக்குண்டு ஆன்ம போத நிலையில் விளங்கிய ஆன்மாவின் பொறி, புலன்களைச் . சிவத் தன்மையுடையதாக்கிய திருப்பெருந்துறை இறைவனை- என்றும் பிரியாதிருந்தருள் செய்வானை வாயாரப் பேசு என்று கேட்டுக் கொள்கின்றார்.
"ஏ. நெஞ்சே! வேதங்கள்- பழமறைகள் ஐயா! ஐயா! என்று தேடியும் சிவம் என்னும் செய்பொருளை கண்டபாடில்லை! அந்த வேதங்களுக்கெல்லாம் நாயகனாகவும் வேதங்களையெல்லாம். கற்றறிந்தவனாகவும் விளங்கும் நான்முகனும் கண்டதில்லை. செல்வத்தின் தலைவன் திருமாலும் கண்டதில்லை. இறைவனை அறிவினாலும் பணத்தினாலும் காண இயலாது. இங்ங்ணம் நான்மறைகளாலும் நான்முகனாலும் திருமரலாலும் காண இயலாத இறைவன் எளியேனை ஆண்டு கொண்டருளினர். ஆண்டுகொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளிய அருளிப்பாட்டை என்னென்பது? அன்பு காட்டினால் போதாது; அருள் செய்தால் போதாது. வேலை- தொண்டு செய்யப் பணித்தால் தான் உறவு ஆழம்படும்; உறுதிப்படும் என்று பேசுகிறார். ‘கவிப் பணி கொள்’ என்றும், “எது எயைப் பணி கொள்ளுமாறு அது கேட்போம்” என்றும் அருளியுள்ளமை யைக்கற்றுத்தெளிக.
தொண்டு செய்ய ஒருப்படுமின்! தொண்டராக விளங்குமின்! இறைவன், திருப்பெருத்துறையுறை சிவன் ஆட்கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளியதற்கு ஏது கைம்மாறு இல்லை, இல்லை! அதனால் கைம்மாறு உண்டோ என்று நெஞ்சை நோக்கிக் கேட்கின்றார். நெஞ்சு, “இல்லை இதற்கு ஓர் கைம்மாறு” என்று கூறுகிறது.
கீழ்மையே செய்து கெடுக்கும் நெஞ்சத்தினை மாணிக்கவாசகர் தன் வசப்படுத்திக் கொண்டு திருப்பெருத் துறையுறை சிவன் புகழ் பாடும்படி செய்தது.புகழ்மிக்க செயல்.
திருவாசகம் ஓதுதல் மூலம் நாளும் நமது நெஞ்சத்தைத் திருத்துவோம்! நம் வசப்படுத்துவோம்! இறைவன் புகழ் பாடிப்பரவுவோம். தொண்டு செய்வோம்! நம்மைச் சிவமாக்கி ஆட்கொண்டருளும் மாண்க்கவாசகர் திருவடித் தாமரைகள், போற்றி போற்றி! அறிவு தந்து ஆட்கொண்டருளிய அற்புதத்தைப் போற்றுவோம்.