திருவிளையாடற் புராணம்/03

விக்கிமூலம் இலிருந்து


3. திருநகரம் கண்ட படலம்

கடம்ப வனத்தின் கிழக்கே மணலூர் என்னும் ஊர் உள்ளது. அதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டியன் குலசேகரன் என்பவன் அறம் வழுவாமல் மனு நெறிப்படி ஆட்சி நடத்தி வந்தான். அவன் வாழ்ந்த நகரில் வணிகன் ஒருவன் செல்வச் சிறப்போடு வாழ்ந்து வந்தான். அவன் செல்வச் சிறப்புக் கேற்ப அவன் பெயரும் தனஞ்சயன் என்று வழங்கப்பட்டது.

அவன் வாணிபம் செய்யும் பொருட்டுத் தன் சொந்த ஊரை விட்டு மேற்குப் பக்கம் பயணம் ஆனான், தன் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்வழியில் இருட்டியது. கடம்ப வனத்தில் அகப்பட்டுக் கொண்டான், மனித சஞ்சாரமற்ற அக் காட்டில் தன்னந்தனியாக இருக்க வேண்டி இருந்தது. தெய்வம்தான் துணை என்று அங்கே அங்குமிங்கும் உழன்றான். எதிர்பாராதபடி இந்திரன் அமைத்த விமானத்தின் கீழ்ச் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. ஒளியோடு விளங்கிய அத் தெய்வத் தலம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. அதனை வழிபடும் முயற்சியில் இரவினைக் கழிக்க முற்பட்டான்.

நள்ளிரவில் கள்வர்கள் வரும் நேரத்தில் புதியவர்கள் யாரோ அங்கு வந்து கூடுவதைப் பார்த்தான்; அவர்கள் மானுடர்கள் அல்லர், தேவர்கள் என்பதை அறிந்தான்; அவர்கள் பூஜைக்கு வேண்டிய மலர்களோடும் மணம் நிறைந்த பொருள்களோடும் வந்து நான்கு வேளையும் பூஜை செய்வதைப் பார்த்தான். தானும் அவர்களுக்கு மலர்கள் கொண்டு வந்து உதவினான்.

பூஜைக்கு வேண்டிய பூக்களும், பனி நீரும், சந்தனமும், மற்றும் வாசனைப் பொருள்களும் தன் கையால் அவர்களுக்குக் கொண்டு வந்தான்; நான்கு யாம பூசைகளிலும் அவனும் கலந்து கொண்டான். அவனும் பொற்றாமரைக் குளத்தில் முழுகி ஆகம விதிப்படி இறைவன் தாளை வணங்கி மன நிறைவு பெற்றான்.

பொழுது விடிந்தது; தூக்கம் நீங்கிக் கோயிலைப் பார்த்தான்; தேவர்களில் ஒருவரும் அங்கு இல்லை; தெய்வம் மட்டும் அங்குச் சிவலிங்க வடிவில் காட்சி அளித்தது. மனித சஞ்சாரம் அற்ற அக்கோயிலுக்கு தேவர்கள் வந்து வழிபாடு செய்வதும் போவதும் அவனுக்கு வியப்பைத் தந்தன. ஊருக்குத் திரும்பியதும் முதற் செய்தியாக நாட்டு மன்னனுக்கு உரைப்பது என்று கொண்டான்.

அரசனை அன்று மாலையே சந்தித்துத் தான் கண்ட புதுமையைச் செப்பினான். இதனைக் கேட்ட பாண்டியன் அப்புதுமை பற்றிய நினைவோடு உறங்கச் சென்றான். அவன் கனவில் சித்தர் வடிவில் சிவன் வந்து காட்சி அளித்து அவனுக்கு அங்குக் கோயில் எழுப்பவழி கூறினார். கோயிலும், மண்டபங்களும் அமைத்து அழகிய நகர் ஒன்று அக்கடம்பவனத்தில் உண்டாக்க வேண்டும் என்று கூறிச் சென்றார்.

மறு நாள் பொழுது. விடிந்தது, அமைச்சர்களோடும் கட்டிடச் சிற்பிகளோடும் தனஞ்சயன் வழிகாட்டப் பாண்டியன் அவ்வனத்துக்குச் சென்றான், திக்குத் தெரியாத அந்தக் காட்டில் கலங்கரை விளக்குப் போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்த இந்திர விமானத்தைக் கண்டான். தெய்வ நினைவால் அவன் சிந்தை குளிர்ந்தான். அவன் எதிர்பார்க்கவில்லை; கனவில் கண்ட சித்தரே நேரே அவன் திருமுன்பு வந்தார். அவனிடம் எங்கெங்கே எவ்வெவ்வாறு கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என்பதையும், கோயில் அமைப்பையும், உட்பிரகாரம், வெளிச் சுற்று இவற்றின் அமrப்புகளையும், மதில்கள், கோபுரங்கள் அவற்றைச் சுற்றி மாளிகைகள், கடைகள், விழா வீதிகள் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கினார். பின்பு அவர் அங்கிருந்து மறைந்து விட்டார். வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்த பாண்டியன் அளவு கடந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண்டான்.

இறைவன் பணித்தபடியே அந்நகரை நிர்மாணித்தான். வேதங்கள் பயிலும் பதும மண்டபமும், அர்த்த மண்டபமும், இசை பயிலும் நாத மண்டபமும், பறை பயிலும் நிருத்த மண்டபமும், விழாக்கோள் மணி மண்டபமும், வேள்விச் சாலைகளும், மடைப் பள்ளிகளும் அமையத் திருக்கோயிலைக் கட்டுவித்தான்.

அதனை அடுத்து வலப்பக்கம் மீனாட்சி அம்மைக்குத் திருக்கோயிலை எழுப்பி அதனையும் அவ்வாறே கட்டிமுடித்தான். இவ்விரண்டையும் சுற்றி மேகம் தவழும் வான். மதில்களையும், விண்ணை அளாவும் கோபுரங்களையும் எழுப்புவித்தான். கோயிலைச் சுற்றிக் கோபுரங்களையும், மாட மாளிகைகளையும் கட்டி வைத்தான். நாற்புறமும் அங்காடிகள் அமைக்க அழகிய தெருக்களை உண்டாக்கி வைத்தான். அவற்றையும் கடந்து அகன்ற தெருக்களையும் வீடுகளையும் கட்டித் தந்தான். திட்டமிட்ட நகராக அதனை நிர்மாணித்தான். சாந்தி செய்ய விழா எடுத்தான்.

இறைவனே அந்நகருக்கு இனிமையும் நன்மையும் அழகும் உண்டாக்கத் தன் சடை முடியில் இருந்து எழுந்த கங்கை நீரில் சந்திரனில் தோன்றிய குளிர்ந்த அமுதத்தைத் தெளித்து அதனை அந்நகர் முழுவதும் பரவச் செய்தார். மதுரம் பெருகியது. அதனால் அந்நகருக்கு மதுரை என்னும் புதுப்பெயரும் மருவியது.

அக்கோயில் புனரமைப்புப் பெற்று எட்டுத்திக்கும் அதன் பெருமை பரவ மக்கள் வந்து குழுமி வழிபட்டுப் பயன்பெற்றனர்; பாண்டியனும் அக்கோலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு நற்பயன் அடைந்தான்; மலையத்துவசன் என்னும் பெயருடைய மகனைப் பெற்று ஆட்சிக்கு உரியவனாக அவனை ஆக்கி எந்த விதக் குறைவு மில்லாமல் ஆண்டு வந்தான். பல ஆண்டு வாழ்ந்து இயற்கை தரும் மூப்பைத் தாங்க முடியாமல் இறைவன் திருவடி நிழலை அடைந்தான். இறந்தபின் சொர்க்க நிலை அடைந்தான்.

மதுரை நகரின் வளர்ச்சிக்கு இவன் கால்கோள் செய்தும், எவரும் வியக்கக் கோயிற் பணிகள் செய்தும் வான் புகழ் பெற்று மறைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/03&oldid=1110607" இலிருந்து மீள்விக்கப்பட்டது