திருவிளையாடற் புராணம்/05
"கன்னிப்பருவம். வந்தும் கனிவு மிக்க மணவாழ்வு வாய்க்கவில்லை" என்று ஏங்கினாள்; அதனைத் தன் மகளிடம் தெரிவித்தாள்.
"அன்னையே! நீ நினைப்பது எல்லாம் உடனே நடந்துவிடும் என்று கூற முடியாது; ஆகும்போது ஆகும்; நீ கவலைப்படாதே; யான் போய்த் திசைகள் நான்கும் சென்று நாடுகள் அனைத்தையும் வென்று வீடு திரும்புவேன்" என்று கூறி உடனே எழுந்து திக்கு விசயம் செய்யப் புறப்பட்டாள்.
அரசியின் திருவுளச் செய்தி அறிந்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் உடன் புறப்பட்டனர். தேரும் வந்து சேர்ந்தது; சங்குகள் முழங்கத் தடாதகை தேரில் ஏறிப் புறப்பட்டாள். வாத்தியங்கள் முழங்கின; யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகளும் உடன் சென்றன. சுமதி என்னும் அமைச்சன் மற்றொரு தேரில் ஏறிச் சென்றான். நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும்படையும் செல்ல அம்மையார்தம் செங்கையில் பிரம்பு தாங்கிச் சேவகம் செலுத்திச் சென்றாள்.
கஜபதி, துரகபதி, நரபதி முதலாய வடபுலக் காவல் வேந்தர் புயவலி அடங்க வெற்றி கொண்டாள். யானை, குதிரை, தேர், பிறைநுதல் அழகியர் இவர்களைத் திறையாகப் பெற்றாள். இந்திரனை நோக்கிப் படை செல்ல அவன் எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் விலகிச் சென்றான். வனப்புமிக்க மங்கையரையும், வெள்ளை யானையையும், தெய்வத் தருக்களையும் கவர்ந்து மீண்டாள். இவ்வாறே மற்றைத் திசைக் காவலர் யாவரையும் அவர்கள் ஆண்மை இழக்கச் செருச் செய்து திறையும் கைக் கொண்டாள். மேரு மலையையே வில்லாகக் கொண்டிருந்த சிவபெருமான் இருக்கும் கயிலையை நோக்கிச் சென்றாள். சிவகணங்கள் எதிர்த்துத் தோற்று ஓடின. பின் சிவபெருமானே நேரில் வந்தார் ஒற்றைக் கழல் அணிந்த திருப்பதமும், பாம்பு அசைத்து, உடுத்த வெம்புலித் தோலும், மழுக்கரமும், வெண்ணிறு அணி கோலமும், நூல்மார்பும், கற்றைச் சடையும், தன்னையே நோக்கிய கருணை செய் இரு நோக்கும் கொண்ட தன் வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டி எதிர் கண்டாள்.
கண்டபோதே ஒரு முலை மறைந்தது. உள்ளத்தில் நாணம், மடம், அச்சம் தோன்றப் பண்டைய அன்பு வந்து ஆட்கொண்டது; கருங்குழல் சுமை பிடரியில் தாழக் கெண்டை போன்ற உண்கண்ணால் புறவடி நோக்க, மண் கிளைத்து மின் என நின்றாள். நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் கழுத்தினைக் கொண்ட அப்பாவை தன் மனமாற்றத்தைக் கண்டு திகைத்தாள், அன்று அகல் விசும்பிடை எழுந்த அசரீரி கேட்டு அறிந்த மூதறிவாளன் ஆகிய சுமதி என்னும் அமைச்சன் அம்மையார் அடிபணிந்து "அன்னாய் இக்கொன்றையஞ் சடைக் குழகனே நின் மன்றலுக்கு உரிய மணவாளன்" என்றான். அன்பு துன்ற நின்றவளைப் பார்த்துச் சிவபரஞ்சோதியாகிய பெருமான் இவ்வாறு கூறினார்.
"என்று நீ திக்கு விசயம் செய்து புறப்பட்டாயோ அன்றே யாமும் மதுரையை விட்டு உன்னைப் பின் தொடர்ந்தோம். இன்று முதல் எட்டாம் நாள் சோமவாரத்தன்று மறைவழி மணம் செய்ய வருதும்; நின்னகர்க்கு நீ ஏகு" என்றார்.
இவ்வாறு கூறிய நாதன்மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயத்தார் சூழத் தேர் மேல் ஏறிக்கொண்டு தெய்வ மால்வரைகளையும், புண்ணிய நதிகளையும் கடந்து மாமதுரையை அடைந்தாள்.
மங்கையர்க்கரசியாகிய தடாதகைப் பிராட்டியை மங்கலப் பொருள்களோடு நங்கையர் எதிர் கொள்ளச் செல்வம் மிக்க மாளிகையில் புகுந்தாள். உடனே திருமணச் செய்தியைத் திட்டி எங்கும் ஓலைகளைப் போக்கி அமைச்சர்கள் மங்கல வினைக்கு வேண்டுவனவற்றை அமைக்கத் தொடங்கினர். மாநகர் எங்கும் முரசு அறைவித்துச் செய்தி செப்பினர்.
சிவபெருமானும் குறித்த நாளில் மதுரை வந்து சேர்ந்தார். அவர் இடப வாகனத்தினின்று இறங்கினார். திருமாலும், பிரமனும் இருபுறத்திலும் நின்று வரவேற்றனர். அப்பொழுது காஞ்சனமாலை மகளிர் சூழ வந்து பொற்கலம் கொண்டு அவர் திருவடிகளைக் கங்கை நீர் கொண்டு விளக்கி ஈரம் புலரும்படி வெண்பட்டினால் துடைத்துப் பனிநீர் தெளித்து சந்தனக் குழம்பை அணிந்து கற்பக மலர்கள் சார்த்திக் கை குவித்து வணங்கி "பொற்புமிகு பாவையை மணந்து பொதிகைத் தென்றல் வீசும் பாண்டிய நாட்டை இருந்து ஆள்க" என்று வேண்டினாள்.
தேவர்களும் திருமால் பிரமன் முதலிய தெய்வங்களும் சிவ கணங்களும் வேதம் பயில அந்தணர்களும் தவம் செய்யும் முனிவர்களும் பல தேசத்து மன்னர்களும் நாட்டு மாந்தரும் மகளிரும் குழுமி இருந்து இச் சிறப்பு விழாவில் பங்கு கொண்டனர்.
அந்நாட்டு மக்கள் மணமக்களைக் கண்டு வியந்து பாராட்டினர்.
கன்னிதன் அழகுக் கேற்ற அழகன் இக்காளை என்பார்; மன்னவன் இவனே அன்றி வேறு இல்லை மதுரைக்கு என்பார்.
கலைமகளும் திருமகளும் சுந்தரவல்லியாகிய தடாதகையை 'சோபனம்' என்று கூறி வாழ்த்தி அவள் கைகளைப் பற்றி எழுப்பினர்; மறைகள் ஆர்த்தன.
அறைந்தன தூரியம்; ஆர்த்தன சங்கம்;
நிறைந்தன வானவர் நீண்மலர் மாரி;
எறிந்தன சாமரை; ஏந்திழை யார்வாய்ச்
சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்"
காஞ்சனை வேண்டியவாறு வீட்டு மாப்பிள்ளையாக இருந்து நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொள்ள இறைவன் இசைந்தார். ஆட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்சிப்படுத்திக் காட்ட இதனை ஒரு நாடகமாக ஏற்றுக் கொண்டு நடித்துக் காட்டினார். முடி சூடிக் செங்கோல் ஒச்சும் சீர்மையை மேற்கொண்டார்.
விடைக் கொடி கயல் கொடியாகியது; அரவுக் கலன் பொற்கலன் ஆகியது; கொன்றைப்பூ வேப்பம் பூவாக மாறியது; புலித்தோல் பொன்னாடையாக மாறியது; மதி முடி மணி முடி ஆகியது; மதுரைப் பதியில் உறையும் சோமசுந்தரக் கடவுள் பாண்டியனாகி வீற்றிருந்து செங்கோல் நடத்தினார்.
சிவன் கொண்ட புதிய வடிவுக் கேற்பச் சங்குகன்னன் முதலிய கணத்தவர் தாமும் பண்டை வடிவம் மாறிப் பார்த்திபனின் பணியில் நின்றனர். தென்னவன் வடிவம் கொண்ட சிவபிரான் உலகம் காக்கும் மன்னர்கள் சிவனைப் பூசை செய்வது வேத நெறி என்று உணரும் பொருட்டுத் தானும் அந்நகரில் நடுவூர் என்று ஓர் அழகிய நகரைப் புதுப்பித்தார். சிவாகம வழியே கோயிலும் விதித்து சிவலிங்கத்தையும் பிரதிட்டை செய்து நாளும் விதி முறைப்படி பூஜைகள் செம்மையாகச் செய்தார். பின் தன் கடமைகளைச் செய்து வந்தார். அச்சிவலிங்கத்தையும் சோமசுந்தரக்கடவுளையும் வழிபட்டு மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி நல்லாட்சி செய்தார்.