திருவிளையாடற் புராணம்/07
மங்கையர்க்கரசியாகிய பாண்டியர் மகள் வேண்டிய உணவு சமைத்து ஈண்டிய முனிவர்களுக்கும் வேதியருக்கும் மன்னவர்க்கும் அருந்தி அகமலர்ந்து நன்னிதியும் பட்டு ஆடைகளும், பாக்கு வெற்றிலைசந்தனம் பூ முதலியனவும் தந்து வழி அனுப்பினாள். அதற்குப் பிறகு ஓய்வாகக் கணவன் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தாள். கடமைகள் முடிந்துவிட்டன என்ற கருத்தில் மனநிறைவோடு அங்கு இருந்தனர்.
சோறு சமைத்த மடைப்பள்ளி அதிகாரிகள் அன்னை பிராட்டியிடம் "சமைத்து வைத்த சோற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடத் தீரவில்லை. தின்பதற்கு ஆட்கள் இல்லாமல் அப்படி அப்படியே கிடக்கின்றன. தேவர்கள் வருவார்கள் கணங்கள் உண்பார்கள் என்றெல்லாம் நினைத்து மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறோம். என்ன செய்வது அவற்றைத் தூக்கி எங்கே கொட்டுவது" என்று அவர்கள் தம் தொழில் முறைப்படி வந்து தொழுது உரைத்தனர்.
அன்னையார் அருகிருந்த மாப்பிள்ளையாகிய சிவபெருமானிடம் சிரித்துக் கொண்டே சொன்னார். "என்ன ஆயிற்று, உங்கள் சிவ கணம் தேவர்கள் ஆட்கள் ஏன் வரவில்லை. உங்கள் ஆட்கள் இவ்வளவுதானா? சமைத்து வைத்தது எல்லாம் வீணாகி விட்டதே?" என்று பேசினார்.
"நீ பாண்டியன் மகள் என்பது தெரியும். வேண்டிய செல்வம் உன்னிடம் குவிந்து கிடக்கிறது. திக்குகளில்இருந்து திறைகள் வேறு வந்து குவித்திருக்கின்றன. கற்பக தருபோன்ற தெய்வ மரங்கள் விரும்பும் உணவை அள்ளித் தருகின்றன. தமிழகம் செல்வத்துக்கும் சோற்றுக்கும்பெயர் போனது. உன் சமையல்காரர்கள் மகாமேதாவிகள். உன் செல்வத்தைக் காட்டச் செருக்கோடு செய்த உணவு உண்ண ஆட்கள் இல்லை என்று குறைப்படுகிறாய் எம்முடைய ஆட்கள் வந்தால் உன்னால் சோறு போட முடியாது; ஒரு ஆளுக்குக் கூட உங்களால் வயிறு நிறையச் சோறுபோட முடியாது. அதனால்தான் எம் சிவகணங்களை அழைத்து வரவில்லை. அவர்களுக்கெல்லாம் சோறு போட்டுக் கட்டுப்படி ஆகாது" என்று பேசத் தொடங்கினார்.
"என்னது; அப்படிச் சொல்லிவிட்டீர், எத்தனை ஆட்கள் வேண்டுமானாலும் வரட்டும்; எங்களால் சமாளிக்கமுடியும்" என்றாள்.
சிவன் கிளறி விட்டதால் குண்டோதரன் வயிறு மண்டி எரிந்தது; அகோரப் பசி எடுத்தது; எரிமலை வழிதவறி வயிற்றுக்குள் புகுந்து விட்டது போலப் பசியால் வெந்து வேதனைப்பட்டான். சோற்று மலையினை அவன் அழித்துச் சேற்றுநிலம் ஆக்கினான்; கறி காய், இனிப்புகள். பருப்பு வகைகள், சாம்பார், ரசம், குழம்பு, பாயசம் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தான். அவன் பசியை அவ்வளவும் சேர்ந்து கால் வயிறு கூட அடக்கவில்லை; நீர் வேட்கையால் மோர் கேட்டான்; எல்லாம் தீர்ந்து விட்டது என்றனர். என்ன செய்வது! பிராட்டியார் இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று வியந்தார்.
இராமாயணத்தில் கும்பகருணன் வண்டி வண்டியாகச் சோறும் ஊனும் கள்ளும் அயின்றான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவனை வெல்லக்கூடிய நிலையில் இவன் இருந்தது அவளுக்கு அதிசயமாக இருந்தது இவன் ஒருவனுக்கே சோறு போட முடியவில்லை. சிவகணம் அனைத்தும் வந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தாள்; ஆணவத்தால் அவசரப்பட்டுத் தன் மிகுதியை எடுத்துப் பேசியது தகுதியற்றது என்பதை உணர்ந்தாள்; கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல இப்பொழுது புதிய பிரச்சனை உருவாகியது; அவன் பசிக்கு அலைகிறான்; நீருக்கு உலைகிறான்; என்ன செய்வது; இறைவன் முப்புரத்தில் இட்ட தீ அவன் வயிற்றின் அடிப்புறத்தில் புகுந்துவிட்டதே என்று அஞ்சினாள்; பசி என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை அவன் நிலை காட்டியது; உயிர்களின் பசிக்கு உணவு இடுவது எளியது அல்ல என்பதைத் தடாதகை உணர்ந்தாள். இறைவனோடு போட்டி போட்டுக் கொண்டு பேசியது தவறு என்பதை உணர்ந்தாள்; போதும் ஒரு குண்டோதரன் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.