திருவிளையாடற் புராணம்/08
கருணைக் கடலாகிய சோமசுந்தரக் கடவுள் தடாதகைப் பிராட்டியைப் பார்த்து "இவன் ஒருவன் பசியை உங்களால் அடக்க முடியவில்லையே" என்று பரிந்து பேசினார். அவன் பசியால் துள்ளிக் குதித்தான். எது கிடைத்தாலும் அள்ளிப் பருக ஆவல் காட்டினான். உலகுக்கெல்லாம் உணவு அளிக்கும் அம்மை ஆகிய அன்னபூரணியை அழைத்தார். இறைவன் பணி கேட்டு தயிர்ச் சோற்றுக் குழிகள் நான்கினைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.
சோற்றைக் கண்டதும் பசி மூண்டது. அள்ளி அள்ளி வயிற்றில் போட்டு அடைத்தான்; வாங்கி வாங்கி வாய் மடுத்ததும் உடம்பெல்லாம் வயிறாக வீங்கியது. நீர் வேட்கையால் தரை இடிபட மலை ஏறக் கீழே விழுந்து புரண்டான்; குடிக்க நீர் வேண்டிக் கதறினான்; எங்கு நீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் தேடி அலைந்தான். ஆறு, குளம், குட்டை, ஏரி வாய்க்கால்களில் அங்கு உள்ள தண்ணீர் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வறண்டு போகும்படி வாய் வைத்துக் குடித்தான்.
அப்பொழுதும் அவன் வேட்கை அடங்கவில்லை. சுந்தரேசரிடம் வந்து அவர் காலடிகளில் விழுந்து "தண்ணிர் வேண்டும்" என்று முறையிட்டான். அவன் குறையறிந்து இறைவன் தன் சடை மீது இருந்த கங்கையை விளித்து "நீ பகீரதன் பொருட்டு அன்று பாய வட நாடு செழித்துக் கிடக்கிறது; தமிழகத்தில் ஆறுகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது; காவிரி ஒன்று போதாது; அது சோழ நாட்டுக்குச் சோறு தருகிறது. பாண்டிய நாட்டுக்கும் ஒரு நதி தேவைப்படுகிறது; நீ இங்குப் பாய்ந்து ஓடு" என்று கட்டளை இட்டார்.
குண்டோதரனைப் பார்த்து நீ வை கை என்றார்; அவ்வாறு சொன்னதும் அவன் நீர் வரும் திக்கு நோக்கிக் கைகளை விரித்துப் பிடித்துக் காத்திருந்தான். வெள்ள மெனப்பெருகி வந்த நீரை உள்ளம் உவந்து வேட்கை தீரக் குடித்தான். பசியும் தாகமும் தணிந்தன. அவன் வயிறு குளிர்ந்தது; அவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து சோமசுந்தரரை உணர்ச்சி ததும்பத் துதித்துப் பாடினான். அருட் பாடல் கேட்டு இறைவன் அவனைச் சிவ கணத் தலைவனாக்கி உயர்பதவி அளித்து மகிழ வைத்தார். திருமண வைபவம்முடிந்து மன்னனாக இருந்து அப்பாண்டிய நாட்டைச் சோமசுந்தரக் கடவுள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தார்.
கங்கை நதி பாய்ந்ததால் வைகை நதியில் நீர்ப் பெருக்கு மிகுந்தது; அது புண்ணிய நதியாக மாறியது. அதனால் அதில் நண்ணி நீராடியவர்கள் நற்கதி அடைந்தனர். கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை அன்றே சிவபெருமான் உருவாக்கி வைத்தார்.
சிவனின் சடையில் இருந்து இறங்கி வந்ததால் அது 'சிவகங்கை' என்றும், அதில் முழுகுபர் ஞானம் பெறலாம் என்பதால் 'சிவஞான நதி' என்றும், காற்றினும் வேகமாகக் கடுகி வரலால் 'வேகவதி' என்றும் பெயர் பெற்றது. நூல்கள் இதனைப் புகழ்ந்து பேசுவதால் 'கிருத மாலை' என்றும் இது வழங்கலாயிற்று. புண்ணிய நதிகளுள் இது ஒன்றாக விளங்கியது.