திருவிளையாடற் புராணம்/13
இனிய காரிகையைக்கண்டு மருமகள் ஆவதற்கு வேண்டிய கவினும் நலனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள். அங்கலக்ஷணம் அனைத்தும் உடைய அப்பங்கயச் செல்வி போன்ற அரசமகளை அனைவரும் ஆமோதித்தனர். நாள் பார்த்துக் கோள் குறித்து அரசர்களுக்கு ஆள் மூலம் ஓலை போக்கிச் செய்தி சொல்லி மணநாள் ஏற்பாடு செய்தனர்.
தேவர்களும், விட்டுணு, பிரமன் முதலிய தெய்வங்களும் முனிவர்களும் மண்ணுக்குரிய மகிபர்களும் வேத வேதியரும் நகர மாந்தரும் கூடிய அரங்கில் இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
நாட்கள் சில நகர்ந்தன. நாட்டு ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்புவித்து விட்டுச் சுந்தரேசர் விடை பெற விரும்பினார். அதற்கு முன் அவன் சந்திக்க வேண்டிய பகைகளை எடுத்து உரைத்தார். "இந்திரனும் வருணனும் மேருமலையும் உனக்கு இடையூறு செய்வர். அவர்களை வெல்வதற்கு வேல், வளை, செண்டு என்ற மூன்று படைகளைத்தருகிறேன். பெற்றுக் கொள்க" என்று சொல்லி அவற்றை அவனிடம் தந்தார். நீண்ட காலம் மதுரையில் தங்கிவிட்டதால் தானும் தடாதகையாரும் திருக்கோயிலுக்குச் சென்று விட்டனர்; சிவகணங்கள் முன்னை வடிவம் கொண்டு தத்தம் பதவிகளைத் தாங்கக் கயிலை சென்றனர்.
உக்கிர குமாரன் நீதி நெறி கருதி ஆட்சி செய்து வந்தான்; வளங் கொழிக்கும் பாண்டிய நாட்டில் மக்களுக்கு யாதொரு குறையுமில்லை யாதலின் வேள்விகள் செய்து உயர் பதவிகள் பெற நினைத்தான். தொண்ணூற்று ஆறு அசுவ மேத யாகங்கள் செய்து பெயரும் பெற்றான். இன்னும் நான்கு செய்துவிட்டால் இந்திரப்பதவியை இழக்க வேண்டி வரும் என்று அஞ்சி மேலும் யாகங்களைத் தடை செய்ய இந்திரன் நினைத்தான்.
நாட்டின் வளத்துக்குக் கேட்டினை உண்டாக்கி விட்டால் அவன் வேள்விகள் இயற்ற முடியாது என்பதால் வருணனை அழைத்துக் கடல் நீரை எழச் செய்து மதுரையை அழிக்கச் சொன்னான். இந்திரன் ஏவலைத் தாரக மந்திரம் எனக்கொண்டு நள்ளிரவு என்றும் பாராமல் ஏழுகடலையும் ஒன்றாகத் திரட்டி மதுரை மீது ஏவினான்.
சித்தர் வடிவில் சிவபெருமான் தோன்றி "நீ வேலை விட்டு அதனை வற்றச் செய்" என்று சொல்லி மறைந்தார். விழித்து எழுந்த வேந்தன் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் நீரே இருந்தது கண்டு திகைத்து நின்றான். கனவில் வந்த சித்தனார் நகைத்துக் கொண்டே பேசினார்.
“கடலைக் கண்டு நடுங்குவது ஏன்? உன் கையில் இறைவன் தந்த வேல் இருக்கிறதே! என்னசெய்தாய்? அந்த வேலைக் கொண்டு இந்தக் கடலைச் சுடலைவனம் ஆக்கு” என்று சொன்னார்.
சித்தர் சொன்ன படியே இறைவன் தந்த வேலை எடுத்துக் கடல் நீரில் வீச அது சுருக்கென்று ஒலிசெய்து தாக்கக் கடல்நீர் வற்றிவிட்டது. சித்தர் எங்கே என்று திரும்பிப்பார்த்தான். அவர் சிவன்கோயிலுள் நுழைவதைப் பார்த்தான். மீனாட்சி சுந்தரர் ஆக அங்கிருந்து: தனியாட்சி நடத்துவதைக் கண்டான். கண் மகிழ அக்காட்சியைக் கண்டு பின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். வருணன் தன் கருவம் அடங்கி அவன் காலடியில் விழுந்து மன்னிப்புப் பெற்றுச் சென்றான். ஒரு பகை நீங்கியது என்று உவகை அடைந்தான்; வருபகை நோக்கிக் காத்திருந்தான்.
சேர சோழ, பாண்டியர் எனக் கூறப்படும் மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் உண்டாயிற்று. பஞ்சம் ஏற்படும் நிலையில் அதற்காக அஞ்சி என்ன செய்வது என்று தெரியாமல் பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவரைத் தஞ்சம் அடைந்து தமிழ் வழங்கும் தண் தமிழ் நாட்டில் மழை இல்லாமல் வருந்துவதை அவ் அருந்தவ முனிவனிடம் அவர்கள் சொல்லி உதவ வேண்டினர்.
சோம சுந்தரர் விரும்பி உவக்கும் நாளாகிய சோமவார நாளில் அவ்விரதத்தை அனுஷ்டித்தால் ஆகாத காரியம் யாதும் இல்லை என்று கூறி அதனை ஏற்று நடத்தும் வழிமுறைகளை விவரமாகக் கூறினார். அவ்விரதத்தில் இந்திரன் உலகுக்குச் சென்று வேண்டியதைப் பெறலாம் என்று விளம்பினார்.
மதுரைக் குளத்தில் முழுகி எழுந்து சோமசுந்தரக் கடவுளை வழிபட்டு ஆகம விதிப்படி சோமவார விரதம் அனுட்டித்தனர். அதன் பயனாக அவர்கள் இந்திர உலகத்துக்கு விருந்தினராக அழைக்கப்பட்டனர். மூவரும் அவன் அனுப்பிய விமானத்தில் ஆகாய வழியாகச் சென்று தேவர் உலகத்தை அடைந்தனர்.