திருவிளையாடற் புராணம்/14

விக்கிமூலம் இலிருந்து

வருணன் தன் கருவம் அடங்கி அவன் காலடியில் விழுந்து மன்னிப்புப் பெற்றுச் சென்றான். ஒரு பகை நீங்கியது என்று உவகை அடைந்தான்; வருபகை நோக்கிக் காத்திருந்தான். 

14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்

சேர சோழ, பாண்டியர் எனக் கூறப்படும் மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் உண்டாயிற்று. பஞ்சம் ஏற்படும் நிலையில் அதற்காக அஞ்சி என்ன செய்வது என்று தெரியாமல் பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவரைத் தஞ்சம் அடைந்து தமிழ் வழங்கும் தண் தமிழ் நாட்டில் மழை இல்லாமல் வருந்துவதை அவ் அருந்தவ முனிவனிடம் அவர்கள் சொல்லி உதவ வேண்டினர்.

சோம சுந்தரர் விரும்பி உவக்கும் நாளாகிய சோமவார நாளில் அவ்விரதத்தை அனுஷ்டித்தால் ஆகாத காரியம் யாதும் இல்லை என்று கூறி அதனை ஏற்று நடத்தும் வழிமுறைகளை விவரமாகக் கூறினார். அவ்விரதத்தில் இந்திரன் உலகுக்குச் சென்று வேண்டியதைப் பெறலாம் என்று விளம்பினார்.

மதுரைக் குளத்தில் முழுகி எழுந்து சோமசுந்தரக் கடவுளை வழிபட்டு ஆகம விதிப்படி சோமவார விரதம் அனுட்டித்தனர். அதன் பயனாக அவர்கள் இந்திர உலகத்துக்கு விருந்தினராக அழைக்கப்பட்டனர். மூவரும் அவன் அனுப்பிய விமானத்தில் ஆகாய வழியாகச் சென்று தேவர் உலகத்தை அடைந்தனர்.

இந்திரன் இட்ட ஆசனங்களில் தான் காட்டிய குறிப்பின் படி சேரனும், சோழனும் அடக்கமாக அமர்ந்தனர். பாண்டியன் மட்டும் அவனுக்குச் சரிநிகர் சமானமாக அவன் வீற்றிருந்த சிங்காதனத்திலேயே பக்கத்தில் உட்கார்ந்ததால் மரியாதை குறைவாக அவன் நடந்து கொண்டதை இந்திரனால் பொறுக்க முடியவில்லை.

சேரனையும் சோழனையும் விளித்து உமக்கு வேண்டு வது யாது? என்று கேட்டான்.

மழை வேண்டியே அங்குத் தாம் வந்ததாக அறிவித்தனர். தழைக்கும் மழை பொழிவதாக என்று வரம் தந்து அவர்களை வழி அனுப்பி வைத்தான். பாண்டியனுக்குத் தக்க பாடம் கற்றுத் தர வேண்டுமென்று நினைத்து அவனை வெளிக்குப் புகழ்ந்து உள்ளுக்குள்ளே புமுங்கி ஒரு சூழ்ச்சி செய்தான்.

சுமக்க முடியாத பொன்னாரம் ஒன்று தந்து அவனை "மார்பில் அணிக" என்றான். அது தாங்க முடியாது அவன் தோள்கள் வீங்கும் என அவன் நினைத்தான். பூமாலை போல அதனை எளிதில் தாங்கித் தன் வலிமை ஓங்கக் காட்சி அளித்தான். அவன் திண்ணிய உரம் கண்டு இந்திரன் திகைப்பு அடைந்தான். ஆரம் பூண்ட பாண்டியன் என்னும் புகழ் மொழிக்கு உரியவன் என்று அவனைப் பாராட்டினான். வீரம் குன்றாது அவன் புகழ் மொழிக்குச் செவி சாய்க்காது புவி நோக்கித்திரும்பினான்.

சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் இந்திரனின் ஆணையால் செறிந்த மழை பெய்தது. பசும் புல்லும் பயிர்களும் விளைந்து அந்நாடுகள் வளம் கொழித்தன. பாண்டிய நாட்டில் மட்டும் மேகங்கள் மழை பெய்யாமல் விட்டன. நாடு வறட்சி அடைந்தது. அதைக்கண்டு மருட்சி அடையாத உக்கிரமன் அக்கிரமம் செய்த மேகங்கள் அங்கு நிறை குடம் இடுப்பில் வைத்து நடக்கும் பெண்களைப் போல அவன் நாட்டு மலை முகடுகளில் மேய்ந்து கொண்டிருந்தவற்றை விலங்கிட்டு இழுத்துப் பிடித்துச் சிறை செய்தான்.

மேகத்தை ஏகாதபடி சிறை செய்த அச்செயல் இந்திரனின் சினத்தையும் செருக்கையும் தூண்டின. வேல் விடுத்து வருணனை வற்றச் செய்தான். சுமக்க முடியாத ஆரத்தைச் சுமந்து காட்டினான். தம் இச்சைப்படி திரிந்து செல்லும் மேகங்களைச் சிறையிட்டுக் கொச்சைப்படுத்தி விட்டான்; இவன் சாமானியன் அல்லன்; ஏமாளியும் அல்லன். அவனை நேரில் சென்று போரில் வெல்ல வேண்டும் என்று படைகள் திரட்டிப் பார் நோக்கி வந்தான்.

பாண்டிய நாட்டில் அவன் உக்கிரமனைச் சூழ அவன் வக்கிரம் கொண்டு யானை மீது அமர்ந்து சேனைகளைச் செலுத்தி வான் வேந்தனை வளைத்துவாட்டினான்; சூரிய அம்பினை ஏவ உக்கிரன் சந்திர அம்பில் எதிர்த்தான். சிங்க அத்திரத்தை விடுக்கச் சிம்புள் அத்திரத்தில் தடுத்தான். மோகாத்திரத்தை ஏவ அவன் ஞானாத்திரத்தை ஏவினான். விற்போர் நீங்கி மற்போர் செய்து தடுப்போர் இன்றி மண்ணில் உருண்டனர். இந்திரன் குலிசப்படை எடுத்துக் குனிந்து வீச அவன் சிவன் தந்த வளை கொண்டு அவன் தலை முடியில் தாக்கினான். தலை தப்பியது; முடி சிதறியது; தலையைத் தொடாமல் அவன் தலைமையை மட்டும் அது போக்கியது; உயிர் தப்பினால் போதும் என்று உயரப் பறந்து விண்ணுலகு அடைந்தான். அங்கிருந்து தூது அனுப்பி ஓலை எழுதி மேகங்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.

பயன்படாத அம்மேங்களை விடுவதில்லை என்று உறுதியாக இருந்தான்; மழை தருவதாக வாக்குறுதி தந்தால் அவற்றை விடுவிப்பதாகக் கூறினான். தேவர் தலைவனுக்குப் பிணையாக வார்த்தை தவறாத வேளாளன் ஒருவன் குறுக்கே நின்றான்; தாம் மழை தராவிட்டால் தக்க தண்டனை அடைவதாக இந்திரன் உறுதி தந்ததால் மேகங்களை அவிழ்த்துவிட்டான்; அவை மழையைக் கவிழ்த்துக் கொட்டின. அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற அவை செய்தன. 

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.

சோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.

மழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/14&oldid=1111425" இலிருந்து மீள்விக்கப்பட்டது