திருவிளையாடற் புராணம்/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கொண்டிருந்தனர். அவளால் அதை நம்பவே முடிய வில்லை. கணவர் வந்ததும் உண்மைதானா என்று கேட்டு வினவினாள்.

"யான் ஒரு பாவமும் அறியேன்; கோயிலுக்குச் சென்று இருந்தேன்" என்றார்.

சுற்றியிருந்த மாணவரும் பொதுமக்களும் அவர் அவன் செய்த தீமையைச் சொல்லிச் சொல்லி ஊறு விளை வித்ததாகச் சொன்னார்கள். வந்தவர் இறைவனே என்பது அறிந்து நிறை உள்ளத்தோடு திருக்கோயில் சென்று அனைவரும் வழிபட்டனர். நாட்டு அரசன் குலோத்துங்கனும் இதுகேட்டு வியப்பு அடைந்து அவனும் கோயிலை அடைந்து வழிபட்டான். அவன் ஆட்சியில் இறைவன் மற்றவர்கள் குறைகளைத் தீர்த்து வைத்து உதவுவது கண்டு உவகை அடைந்தான் ஆணை என்பது அரசனது மட்டும் அன்று; அதையும் கடந்து இறைவனது ஆணை தான் உலகத்தில் தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்டச் செய்கின்றன என்பது உணர்த்தப்பட்டது. 

28. நாகம் எய்த படலம்

குலோத்துங்கனுக்குப்பின் அவன் மகன் அனந்த குண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனும் முன்னையோரைப் போலச் சைவம் தழைக்கக்கோயிற் பணிகளும் சாத்திரப் பிரச்சாரமும் செய்து வந்தான். மக்கள் சைவ சமயத்தைப் பின் பற்றினர். அதனால் அழுக்காறு கொண்ட சமணர் அவனை ஒழிக்க வேள்வித் தீ ஒன்று எழுப்பி அசுரன் ஒருவனைப்படைத்து வெளிப்படுத்தினர். அழிவுக்காகப் படைக்கப்பட்ட அசுரன் தனக்கு இடப்பட்ட பணி யாது என்று உருமிக் கொண்டே வந்தான்; மன்னனையும் அவன் ஆளும் தென்னாட்டையும் அழித்து விட்டு வரச் சொல்லி ஏவினர்.

அசுரன் ஆதிசேடன் வடிவம் கொண்டு கொடிய நாகமாக மதுரையை வந்து சூழ்ந்து கொண்டான். நஞ்சு கக்கிக் கொண்டு மக்கள் அஞ்சும்படி வருத்திக் கொல்ல வந்தது; நகர மாந்தர் நாட்டு அரசனாகிய அனந்த பத்மனிடம் ஓடிச் சென்று உரைத்தனர். அவன் அஞ்சுதல் ஒழிந்து நாகம் அணிந்த பினாகபாணியாகிய இறைவனிடம் முறையிட்டு விட்டுத் தெய்வமே துணையாக அக் கொடிய நாகத்தைச் சந்திக்க அனந்த குணபாண்டியன் வில்லும் அம்புமாக விரைந்து சென்றான். நாவும் பல்லும் வெளியே தோன்றும்படி மலைக்குகைபோல் வாயைத் திறந்து கொண்டு ஆலகால விஷத்தைக் கக்குவது போல் எங்கும் நஞ்சைக் கக்கியது. அவன் அஞ்சாமல் அதன் மீது பல அத்திரங்கள் போட்டும் அவை அதன் உடல் மீது பட்டதும் பாறை மீது பட்ட பானை எனத் தவிடு பொடியாயின. அதற்குப் பிறகு சந்திரபாணம் என்னும் பாணத்தை அதன் மீது ஏவ அது அதைக் கண்டதுண்டமாக்கியது. எனினும் அது கக்கிய நஞ்சு காற்றில் கலந்து மக்களை மயக்கமுறச் செய்தது. இனி என்ன செய்வது என்று அறியாது திக்கு முக்காடினான். சோமசுந்தரனைத் தவிர ஏம நெறி காட்ட அவனுக்கு வேறு யார் இருக்கிறார்கள்!

சிவனின் திருக்கோயிலுக்குச் சென்று நஞ்சு கலந்த காற்றினைத் தூய்மைபடுத்தியும், அதனால் நோயுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற மதுரை மாந்தருக்கு மருந்து அளித்தும் அவர்கள் துயரை நீக்குமாறு வேண்டினான். சிவன் தன் திங்கள் திருமுடியிலிருந்து அமுதத் துளிகள் சிலவற்றை அந்நகரில் தெளித்துச்சோர்ந்த அவர்களுக்கு உயிரளித்துக் காப்பாற்றினார். மறுபடியும் அந்நகர் இம்மதுரத்துளிகள் பட்டு இனிமை அடைந்து மதுரை என்னும் பெயருக்கு உரிய தகுதியைப் பெற்றது. யாவரும் விடம் நீங்கி உமை பாகனை வழிபட்டு மேன்மை அடைந்தனர். பாண்டியனும் தெய்வ அருள் நினைத்து உருகித் துதித்து நன் முறையில் ஆட்சி நடத்தி நாள் பல வாழ்ந்து மேன்மை உற்றான். 

29. மாயப் பசுவை வதைத்த படலம்

யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள் கொல்ல முடியாத சீவனை அனுப்பி வைக்க வேண்டுமென்று சமணர் நினைத்தனர். பசுவை அனுப்பினால் அதைக் கொல்லத் தயங்குவர் என்று முடிவு செய்தனர். அதனால் அழிவு வேள்வி ஒன்று இயற்றி அதில் முரட்டுப் பசுவடிவத்தில் ஓர் அசுரனைத் தோற்றுவித்தனர். இட்ட பணியாது என்று பசுவின் வடிவத்தில் இருந்த அசுரன் கேட்டான். பாண்டியன் அனந்தகுணனையும், ஆனந்தம் மிக்க நகர மாந்தரையும் அழிக்க வேண்டும் என்று கட்டளை இட்டனர். அந்த முரட்டுப்பசு தன் கூரிய கொம்புகளைக் கொண்டு வீரியமாகப் போர் செய்யும் வேகத்தோடு மதுரையை நோக்கி ஓடியதும் அரசனும் மக்களும் அஞ்சி அலறி அங்கயற்கண்ணியின் தலைவனாகிய சுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டனர்.

சமணர் திட்டத்தை முறியடிக்கச் சிவனார் தன் இடப வாகனத்தை ஏவி அதனை அடக்குமாறு பணித்தார். களை வடிவத்தில் வந்த எருதினைக் கண்டு கன்னி இளம்