திருவிளையாடற் புராணம்/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மாந்தருக்கு மருந்து அளித்தும் அவர்கள் துயரை நீக்குமாறு வேண்டினான். சிவன் தன் திங்கள் திருமுடியிலிருந்து அமுதத் துளிகள் சிலவற்றை அந்நகரில் தெளித்துச்சோர்ந்த அவர்களுக்கு உயிரளித்துக் காப்பாற்றினார். மறுபடியும் அந்நகர் இம்மதுரத்துளிகள் பட்டு இனிமை அடைந்து மதுரை என்னும் பெயருக்கு உரிய தகுதியைப் பெற்றது. யாவரும் விடம் நீங்கி உமை பாகனை வழிபட்டு மேன்மை அடைந்தனர். பாண்டியனும் தெய்வ அருள் நினைத்து உருகித் துதித்து நன் முறையில் ஆட்சி நடத்தி நாள் பல வாழ்ந்து மேன்மை உற்றான். 

29. மாயப் பசுவை வதைத்த படலம்

யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள் கொல்ல முடியாத சீவனை அனுப்பி வைக்க வேண்டுமென்று சமணர் நினைத்தனர். பசுவை அனுப்பினால் அதைக் கொல்லத் தயங்குவர் என்று முடிவு செய்தனர். அதனால் அழிவு வேள்வி ஒன்று இயற்றி அதில் முரட்டுப் பசுவடிவத்தில் ஓர் அசுரனைத் தோற்றுவித்தனர். இட்ட பணியாது என்று பசுவின் வடிவத்தில் இருந்த அசுரன் கேட்டான். பாண்டியன் அனந்தகுணனையும், ஆனந்தம் மிக்க நகர மாந்தரையும் அழிக்க வேண்டும் என்று கட்டளை இட்டனர். அந்த முரட்டுப்பசு தன் கூரிய கொம்புகளைக் கொண்டு வீரியமாகப் போர் செய்யும் வேகத்தோடு மதுரையை நோக்கி ஓடியதும் அரசனும் மக்களும் அஞ்சி அலறி அங்கயற்கண்ணியின் தலைவனாகிய சுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டனர்.

சமணர் திட்டத்தை முறியடிக்கச் சிவனார் தன் இடப வாகனத்தை ஏவி அதனை அடக்குமாறு பணித்தார். களை வடிவத்தில் வந்த எருதினைக் கண்டு கன்னி இளம் அசுரப் பசு இச்சை கொண்டு தன் செயலை மறந்து அதைக்கண்டு ஏங்கி அடங்கி ஒடுங்கி மயங்கிக் கல்லாகச் சமைந்து விட்டது. அது கண்ட தென்னவனும் நகர மாந்தரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏவி விட்ட சமணர் கட்டிய உடையோடு ஒட்டம் எடுத்தனர்.

எருது வடிவத்தில் வந்த அந்தத் தோற்றம் பெருமை மிக்கதாக விளங்கியது. வாலை உயர்த்திக் கொண்டு நிமிர்ந்த நடையோடும் வளைந்த கொம்போடும் வீறு கொண்ட பார்வையோடும் விளங்கிய அக்காளை அவர்களைக் கவர்ந்தது. அப்பெருமைமிக்க எருது நிலை பெற்றுக் காட்சி அளிக்கவேண்டும் என்று அரசனும் மற்றிையோரும் இறைவனை வேண்டிக் கொண்டனர். பருமையான அவ்வடித்தை அங்கேயே விட்டுவிட்டு நுண்மையான ஆவி வடிவத்தில் அவ் எருது ஆண்டவன் திருச்சந்நிதியை அடைந்தது. அந்த எருது ஒரு மலையாக நிலைத்து விட்டது. அதனை இடபமலை என்று செப்பி அனைவரும் வணங்கத் தொடங்கினர்.

இராமன் சீதையைத் தேடித் தென்திசை சென்ற போது வழியில் மதுரை வழியாக வானரங்களோடு சென்றனன். இவ்இடபமலையில் அகத்தியரோடு தங்கி அவர் சொல்லியபடி தாமரைக் குளத்தில் முழுகி இறைவனை வணங்கி அவர் அருளும் ஆசியும் பெற்றுத் தென்னிலங்கை சென்று இராவணனோடு போரிட்டுச் சீதையை மீட்டான். மதுரையில் இராமனும் இலக்குவனும், வானரமும் தங்கிய இடம் அது என்று இன்னமும் பேசப்பட்டு வருகிறது. மறுபடியும் திரும்பி வந்த போதும் அவர்கள் சோம சுந்தரக் கடவுளை வணங்கிப் பின் அயோத்தி அடைந்தனர் என்று கூறப்படுகிறது.

அனந்த குணபாண்டியன் சிவனை வணங்கி அவனருளால் குலபூடண பாண்டியன் என்னும் நன் மகனைப் பெற்று அவனிடம் உரிய வயதில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சிவலோகம் சேர்ந்தான். 

30. மெய்க் காட்டிட்ட படலம்

குணபூடண பாண்டியனுக்கு நம்பிக்கை மிக்க சேனைத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் சுந்தர சாமந்தன் என்பது. அவன் சிவனடியாரைப் போற்றி வணங்கி அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து வந்தான். கொடுத்துக் கொடுத்து அவன் கைகள் சிவப்பேறின. அவன் விழிகள் அடியார் வரும் வழியை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன. அமைதியான காலத்தில் அறங்கள் பல செய்ய அரசனும் ஒப்புதல் அளித்தான்.

வேடர்களுக்குத் தலைவனாக இருந்த சேதிராயன் என்பவன் தன் எல்லைமீறி அரசனுக்குத் தொல்லைதரக் காத்திருந்தான்; படை பலமும் துணிவும் உடைய அவன் முரட்டுத்தனம் மிக்கவனாக இருந்தான்; அவனை எதிர்ப்பது என்பது எளிய செயல் அன்று. அவன் படை யெடுத்து வருவான் என்ற செய்தி கேட்டு நடுங்கிய பாண்டியன் தன் சேனைத் தலைவன் சுந்தரசாமந்தனை அழைத்து, "நாம் தற்காப்பாக மேலும் சேனைகளைத் திரட்ட வேண்டும். நம்மிடம் உள்ள பரிகளும் குதிரை வீரர்களும் போதா. நால்வகைச் சாதியரிடையே வாட்ட சாட்டமான வாலிபர்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து வீரர்கள் ஆக்குவதற்கு எவ்வளவு செலவானாலும் கவலை இல்லை; எடுத்துக் கொடு" என்று சொல்லி நிதிகள் வைத்திருந்த அறைகளின் சாவியை அவனிடம் கொடுத்து விட்டான்.