உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிளையாடற் புராணம்/30

விக்கிமூலம் இலிருந்து

அனந்த குணபாண்டியன் சிவனை வணங்கி அவனருளால் குலபூடண பாண்டியன் என்னும் நன் மகனைப் பெற்று அவனிடம் உரிய வயதில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சிவலோகம் சேர்ந்தான். 

30. மெய்க் காட்டிட்ட படலம்

குணபூடண பாண்டியனுக்கு நம்பிக்கை மிக்க சேனைத் தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் சுந்தர சாமந்தன் என்பது. அவன் சிவனடியாரைப் போற்றி வணங்கி அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து வந்தான். கொடுத்துக் கொடுத்து அவன் கைகள் சிவப்பேறின. அவன் விழிகள் அடியார் வரும் வழியை எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன. அமைதியான காலத்தில் அறங்கள் பல செய்ய அரசனும் ஒப்புதல் அளித்தான்.

வேடர்களுக்குத் தலைவனாக இருந்த சேதிராயன் என்பவன் தன் எல்லைமீறி அரசனுக்குத் தொல்லைதரக் காத்திருந்தான்; படை பலமும் துணிவும் உடைய அவன் முரட்டுத்தனம் மிக்கவனாக இருந்தான்; அவனை எதிர்ப்பது என்பது எளிய செயல் அன்று. அவன் படை யெடுத்து வருவான் என்ற செய்தி கேட்டு நடுங்கிய பாண்டியன் தன் சேனைத் தலைவன் சுந்தரசாமந்தனை அழைத்து, "நாம் தற்காப்பாக மேலும் சேனைகளைத் திரட்ட வேண்டும். நம்மிடம் உள்ள பரிகளும் குதிரை வீரர்களும் போதா. நால்வகைச் சாதியரிடையே வாட்ட சாட்டமான வாலிபர்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து வீரர்கள் ஆக்குவதற்கு எவ்வளவு செலவானாலும் கவலை இல்லை; எடுத்துக் கொடு" என்று சொல்லி நிதிகள் வைத்திருந்த அறைகளின் சாவியை அவனிடம் கொடுத்து விட்டான்.

அரச செல்வம் அத்துணையும் அவன் கைக்கு வந்ததும் அவன் தங்கு தடையின்றி எடுத்துச் செலவழிக்க முற்பட்டான்; தனக்கோ தன் குடும்பத்துக்கோ அல்ல; அடியவர் திருக்கூட்டத்திற்கும் கோயில் திருப்பணிகளுக்கும் மண்டபங்கள் கட்டுவதற்கும் அஞ்சுவதில்லை. ஆயிரக்கணக்கில் கோயில் திறப்பதற்கும் பூசாரிகள் வளமாக வாழ்வதற்கும் அறக்கட்டளைகள் ஆயிரக்கணக்கில் தோற்றுவித்தும் வேத பாடசாலைகள், சைவ திருச்சபைகள், தேவாரப் பண்ணிசைக்கும் இசைக்கூடங்கள், சாத்திர ஆராய்ச்சிகள் தெய்வீகச் சபைகள் இப்படி அளவற்றன அமைத்தும், அவற்றிற்கு வேண்டிய நிதிகளை வாரி வழங்கினான்.

படைகள் திரட்டுவதற்கும், தளங்கள் அமைப்பதற்கும், குதிரைகள் கட்டுவதற்குத் தொட்டில்களோ படைக்கலக் கூடங்களோ கட்டவும் செலவிடப்படவில்லை. போரின் அறிகுறியே கண்ணுக்குப் படாமல் நிதிகள் மட்டும் நதிகள் போலப் பாய்ந்து ஓடுவதைக் கண்டு அரசன் ஐயம் கொண்டான்.

படைத்தலைவன் நெருங்கிய நண்பன், நம்பிக்கைக்கு உகந்தவனாகவும் இருந்ததால் கேட்பது எப்படி என்று விட்டு வைத்தான். படை திரட்டுவதன் அறிகுறியே தென்படவில்லையே என்று வெளிப்படையாகக் கேட்டான்; உள்ளுர்ப் படைகள் உளுத்துப் போனவை; வெளுத்துக் கட்ட வெளியூர்ப் படைகள் மேலானவை என்று தெரிந்து ஒருபெரிய பொய்யைச் சொல்லித் தப்பித்துக் கொண்டான்; அரசனும் அவன் கூர்த்த அறிவு கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி அடைந்தான்.

அரசனிடம் சொன்ன பொய்கள் ஆயிரம்; அதை மெய்ப்பிக்க வழி என்ன? சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டான். "இறைவா செய்தது தவறோ இல்லையோ என்னால் கூறமுடியாது;” பொதுச்சொத்தை நான் கொள்ளை அடிக்கவில்லை. ஊர்ச் சொத்துக்கு யான் பிள்ளையாகப் பிறக்கவில்லை. நற்பணி மன்றங்களுக்கே அரசனது செல்வத்தைப் பயனிட்டேன்; இதை எப்படி அவனிடம் சொல்வது. சொல்லிவிட்டால் என்ன? சொல்லலாம், சேதிராயன் படை எடுத்து வந்து விட்டால் அப்பொழுது நாட்டையும் அரசனையும் காப்பது எப்படி? எல்லாம் உன் பொறுப்பு” என்று முறையிட்டான்.

"நாளைக்குச் சேனையோடு வருவோம்; நீ அரசனுக்கு அறிவிப்பாய்” என்று அசரீரி கூறியது. நம்பியவரை நாயகனாகிய இறைவன் கைவிடான் என்ற மனநிறை வோடு வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் அரசனும் சுந்தரசாமந்தனும் அரண்மனை முகப்பில் நின்று கொண்டு வரப்போகும் சேனைகளைக் காணக் காத்துக் கொண்டிருந்தனர். சிவபெருமான் கணநாதர்களையும் பூத கணங்களையும் படைகளாகவும் இடபத்தைக் குதிரையாகவும் மாற்றிச் சோமசுந்தரர் ஒற்றைச் சேவகராக அதில் ஏறி வந்து சேர்ந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைப் படைகளும் காலாட்படைகளும் அணிவகுத்து நின்றன. சாமந்தனின் திறமையையும் செயலையும் பாண்டியன் வெகுவாகப் பாராட்டினான்.

ஒற்றைச் சேவகனை அருகில் வரப் பாண்டியன் அழைத்தான். அவன் மிடுக்கான தோற்றத்தைக் கண்டு அவனை மகா வீரன்’ என்று பாராட்டிப் பட்டுத் துகில்களையும் இரத்தின ஆபரணங்களையும் பரிசாகத் தந்தான். அவரும் தன் குதிரையைத் தூண்டி நடையை நடத்திக் காட்டச் செய்து சேனை வெள்ளத்தில் மறைந்து சென்றார். அப்பொழுது வேடுவர் தலைவனான சேதி ராயன் புலி வேட்டைக்குச் சென்று உயிர் துறந்தான் என்ற செய்தியை ஒற்றர்கள் வந்து செப்பினர். பகை நீங்கியது: படைகள் கொட்டிலில் அடங்கச் சென்றன; அவை இருந்த சுவடு இன்றி அனைத்தும் மறைந்து விட்டன. இவ்வளவும் சிவன் காட்டியதே என்றும் அவர் திருவிளையாடலே என்றும் அரசன் அறிந்து அகமகிழ்வு கொண்டான்.

மெய்யன்பன் ஒருவனுக்காகத் தெய்வமே வீரனாக வந்து நின்றதும் சேனை வெள்ளத்தைக் காட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஆயின. சுந்தரசாமந்தனுக்கும் பாண்டியன் குண பூடணனுக்கும் நெருங்கிய உறவு மேலும் வளர்ந்தது. பொய்யை மெய்யாகக் காட்டிய இறைவன் திருவிளையாடல் அதனை நினைத்து இறைவன் பெருமையைப் பேசி மகிழ்ந்தனர். 

31. உலவாக்கிழி அருளிய படலம்

குணவீர பாண்டியன் தனமெல்லாம் தரும நெறியில் செலவழிக்கப்பட்டது. வளம் குன்றிவிட்டது. எனினும் அவன் இறைவனையே நம்பி விரதங்களைச் செய்து நியம நிட்டைகள் தவறாமல் வழிபட்டு வந்தான். தவவலியால் அந்தணர்களையும் வேத வித்தகரையும் அவன் மதிக்கவில்லை. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

வேதம் ஓதாமையாலும் வேள்விகள் நடத்தாமையாலும் மழை வளம் குன்றியது.

"மழை வளம் கரப்பின் வான் பேரச்சம் பிழையுயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்" என்று சிலப்பதிகாரம்கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/30&oldid=1111453" இலிருந்து மீள்விக்கப்பட்டது