திருவிளையாடற் புராணம்/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7) ஈசத்துவம் முத்தொழிலையும் தன் விருப்பப்படி செய்தலும் சூரியன் முதலிய கிரகங் கள் தன் ஏவலைக் கேட்டலும்.
8) வசித்துவம் இந்திரன் முதலான தேவர்களையும் அசுரர்களையும் மனிதர்களையும் விளங்குகளையும் தன்வசியம் ஆக்கிக் கொள்ளுதல்.

இறைவனை அறிந்த யோகியர்கள் இந்தச் சித்திகளை அறிவார்கள்; ஆனால் செயல்படுத்த மாட்டார்கள்; இவை நாடிய பொருளைத் தரும்; தேடிய தகவல்களைத் தரும்; எனினும் அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டுச் சித்திகளை அடைய உத்தம யோகியர்கள் விரும்பமாட்டார்கள்; அதை விட உயர்ந்த மனநிலையில் வாழவேண்டுவார்கள் என்று அறிவித்தார்.

ஆசிரியரிடம் சித்திகளைப்பற்றி அறிந்தவர்கள் உமா பார்வதியை மனத்தில் தியானித்து அதன் பயனாக அட்டமாசித்திகளை நன்கு பயின்று விண்வழியே சென்று தாம் உறையும் திருக்கைலாய மலையை அடைந்தனர். 

34. விடை இலச்சினை இட்ட படலம்

சோழனுக்கும் பாண்டியனுக்கும் அக்காலத்தில் நல்லுறவு இல்லாமல் இருந்தது. பொதுவாகச் சோழர்கள் அக்காலத்தில் சமண சமயத்தை ஆதரித்து வந்தனர். விதி விலக்காக ஒரு சோழன் இருந்தான். அவன் காடு வெட்டிச் சோழன் என்று அழைக்கப்பட்டான். காடு திருத்தி நாடு ஆக்கியமையால் அவன் காடு வெட்டிச் சோழன் என அழைக்கப்பட்டான். அவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அவன் மதுரை சென்று சொக்கனை வழிபட வேண்டு மென்று சதா ஏக்கம் கொண்டிருந்தான்; தூக்கத்திலும் அந்நினைவோடு இருந்தான், சித்தர் வடிவில் சிவனார் வந்து அவன் மெத்த மகிழ்ச்சி அடையும்படி அவனைப் பாண்டிய நாட்டுக்கு வரச் சொன்னார். அன்று இரவே அவன் மதுரை நோக்கி வந்தபோது வைகையில் வெள்ளம் வந்து அவன் வருகையைத் தடுத்தது. அவன் அங்கயற் கண்ணி மணாளனை நினைத்து முறையிட அவர் அவனுக்காக நீரைக் குறைத்துக் கரை ஏற்றினார். அவனை வடக்கு வழியாக வரச்சொல்லிச் சித்தர் வடிவிலே சென்று அவனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். தாமரைக் குளத்தில் அவன் முழுகி எழுந்து பார்வதி மணாளனை வணங்கி வழிபட்டு மனநிறைவோடு திரும்பிச் க்சன்றான்; வடக்கு வழியிலேயே அவனைப் போகவிட்டுக் கோபுர வாயிலின் பெருங் கதவுகளுக்குத் தாளிட்டு இடப இலச்சனையை முத்திரையாக இட்டுத் தம் திருக்கோயில் விமானத்தை அடைந்தார்.

பொழுது விடிந்தது. தொழு பணி செய்யும் காவலாளிகள் இடபக் குறி இட்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்; கயற் குறி இருந்த இடத்தில் வேறு ஓர் அயற்குறி இருத்தல் கண்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். அக்காலத்தில் மதுரையை ஆண்டவன் இராசேந்திரன் ஆவான்.

இடபத்துக்கு உரியவன் இருடிகளின் தலைவனாகிய கயிலை மன்னன் என்பது அறிந்து எல்லாம் அவர் அழகிய திருவிளையாடல் என உணர்ந்து எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான். சைவ சமயம் ஓர் எல்லைக்கு உட்பட்டதன்று; சோழநாடு பாண்டியநாடு மட்டும் அல்ல அரசுகள் எல்லாம் பேரரசு ஆகிய பெருமானின் முன் நில்லா என்பதை உணர்ந்தான் ; சோழனையும் தன் ஆருயிர் நண்பனாக மதிக்கத் தொடங்கினான். யார் வந்து வணங்கினாலும் அதற்குத் தடைகூடாது என்று திருந்திய மனம் பெற்றான். 

35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்

காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டு அரசனாகிய இராசேந்திரன் நல்லுறவு வளர்த்து அவன் நட்பைப் பெருக்கினான்; அவனும் அன்புக் காணிக்கையாக ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் தந்தான். அதற்கு ஈடாக வரிசைகள் சிலவற்றை அனுப்பினான். நட்பு இருவருக்கும் கொடுத்தல் வாங்கல் உறவுக்கு அடி சோலியது

சோழன் தன் மகளைப் பாண்டியன் இராசேந்திரனுக்குத் தந்து மணமுடிக்க நினைத்தான்; அதற்கு வேண்டிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இராசேந்திரனின் தம்பி இராசசிங்கன் என்பவன் முந்திக்கொண்டான். அவனே சோழ நாட்டுக்குச் சென்று சோழன் திருமகளைத் தன் துணைவியாக ஆக்கிக்கொள்ள விழைந்தான்; அதற்காக அவன் தலைநகராக இருந்த காஞ்சி நகருக்கு நேரிற்சென்றான். வீடு தேடி வந்த வேந்தனுக்குத் தன் மகளைக் கொடுக்க முடிவுசெய்தான்; இளையவனுக்குத் தன் மகளை மணம்செய்து தந்தான்.