திருவிளையாடற் புராணம்/35
திருவிளையாடல் என உணர்ந்து எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தான். சைவ சமயம் ஓர் எல்லைக்கு உட்பட்டதன்று; சோழநாடு பாண்டியநாடு மட்டும் அல்ல அரசுகள் எல்லாம் பேரரசு ஆகிய பெருமானின் முன் நில்லா என்பதை உணர்ந்தான் ; சோழனையும் தன் ஆருயிர் நண்பனாக மதிக்கத் தொடங்கினான். யார் வந்து வணங்கினாலும் அதற்குத் தடைகூடாது என்று திருந்திய மனம் பெற்றான்.
காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டு அரசனாகிய இராசேந்திரன் நல்லுறவு வளர்த்து அவன் நட்பைப் பெருக்கினான்; அவனும் அன்புக் காணிக்கையாக ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் தந்தான். அதற்கு ஈடாக வரிசைகள் சிலவற்றை அனுப்பினான். நட்பு இருவருக்கும் கொடுத்தல் வாங்கல் உறவுக்கு அடி சோலியது
சோழன் தன் மகளைப் பாண்டியன் இராசேந்திரனுக்குத் தந்து மணமுடிக்க நினைத்தான்; அதற்கு வேண்டிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இராசேந்திரனின் தம்பி இராசசிங்கன் என்பவன் முந்திக்கொண்டான். அவனே சோழ நாட்டுக்குச் சென்று சோழன் திருமகளைத் தன் துணைவியாக ஆக்கிக்கொள்ள விழைந்தான்; அதற்காக அவன் தலைநகராக இருந்த காஞ்சி நகருக்கு நேரிற்சென்றான். வீடு தேடி வந்த வேந்தனுக்குத் தன் மகளைக் கொடுக்க முடிவுசெய்தான்; இளையவனுக்குத் தன் மகளை மணம்செய்து தந்தான். தமையனுக்கு அழைப்பு அனுப்பாமலேயே மணம் முடித்துக் கொண்டனர்.
பெண்ணைக் கொடுத்ததும் மாமனும் மருமகனும் புது உறவு கொண்டு தமையனைத் துறக்க முடிவு செய்தனர். அவனுக்குத் துரோகம் விளைவிக்க முனைந்தனர். சோழர் படை கொண்டு இராசேந்திரனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவது என அவன் தம்பியோடு உடன் பாட்டைச் செய்து கொண்டான்; சோழன் படை பாண்டிய நாட்டை நோக்கிச் சென்றது. கடல்போல் குமுறிக்கொண்டு வந்த சேனையைப் பாண்டியன் எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் சோமசுந்தரர் திருக்கோயில் முன் சென்று முறையிட்டான்.
"கவலைப்படாதே உன் படைகொண்டு அவனிடம் போரிடு; நான்வந்து உதவுகிறேன்" என்று அசரீரி வழியாக இறைவன் கூறினார். கடலில் சங்கமிக்கும் நதி எனப் பாண்டியன் சேனை எதிரியின் படைகளைச் சந்தித்தன. சோமசுந்தரரின் அருளால் பாண்டியன் படைகள் பன் மடங்காகச் சோழன் படைகளுக்குப் புலப்படும்படிச் செய்தார். இச் சேனையைக் கண்டு மலைந்துவிட்ட சோழனின் சேனைகள் சோர்ந்துவிட்டன. இரு திறத்தினரும் போர் செய்து களைத்துவிட்டனர். குடிக்கவும் நீர் இன்றி அல்லல் பட்டனர்.
சோமசுந்தரர் பாண்டியர் சேனைக்கு இடையில் தண்ணீர்ப்பந்தல் வைத்து அவர்களுக்கு மட்டும் குடிக்க நீர் தந்து உதவினர்; தனி ஒருவராக இருந்து அனைவருக்கும் நீர் உதவினார். எதிரியின் படை குடிக்க நீர் கிடைக்காமையால் போர் செய்ய முடியாமல் துவண்டு தோற்றது. காடு வெட்டியும் வெற்று வேட்டு ஆகிய இராசசிங்கமும் சிறைப்பட்டனர். காவலர்கள் அவர்களைக் கட்டி இழுத்து வந்தனர். அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சுந்தரரிடம் முறையிட்டான்.
'அறம் பிழைக்க மாட்டாய் நீ; அறிவுள்ள உனக்கு நான் சொல்ல ளேண்டியதில்லை; நீயே முடிவு செய்து கொள்" என்று இறைவன் அசரீரியாக அறிவித்தார். பகைவனை மன்னிக்கும் பண்பு அவனிடம் இருந்தது: சோழனை விடுதலை செய்து யானை தேர் குதிரை பொருள் சில தந்து நீ போய் ஊர் சேர்" என்று கூறி அனுப்பி வைத்தான்.
தன் தம்பியையும் மன்னித்து அவன் செல்வத்தையும் செருக்கையும் களைந்து அவனை அடக்கி ஆணவம் நீக்கி விட்டான்.
பாண்டிய நாட்டில் திருப்பூவணம் என்னும் சிவத் தலத்தில் ஆடல் பாடல் அழகு இம்மூன்றும் கூடிய நடனக்காரி ஒருத்தி இறைவனிடம் ஆழ்ந்த பற்றும் அடியாருக்குத் தொண்டும் செய்து வந்தாள். தான் ஈட்டும் பொருளை எல்லாம் தன்னை நாடி வரும் சிவ பக்தர்களுக்குத் தந்து அவர்களைப் போற்றி வந்தான்.
தான் சிவனுக்கு ஒரு திருஉருவம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். அப்படிவம் செய்யத் தன்னிடம் பேர்திய பொன் இல்லையே என்று கவலை கொண்டாள். இறைவனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து வேண்டு கோள் விடுத்தாள்.