திருவிளையாடற் புராணம்/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

49. திருவாலவாயான படலம்

சுகுண பாண்டியனுக்குப்பின் அவனுடைய வாரிசுகளில் குறிப்பிடத் தக்கவன் வம்மிச சேகர பாண்டியன் ஆவான். அவன் காலத்தில் மதுரை நகர் விரிவடைந்தது. மக்கள் பெருக்கம் அதிகம் ஆகஆக வீடுகளும் தெருக்களும் பெருகிப் புறநகர்ப் பகுதிகள் விரிவடைந்தன. நகர் ஆட்சி கட்டுக்குள் அடங்காதது ஆயிற்று.

அரசனுக்கு மதுரை நகர் எல்லை எது என்ற ஞானம் இல்லாமல் திட்டமிட்ட பணிகளைச் செய்ய முடியாமல் போயிற்று.

அந்நகரத்தின் எல்லை எது என்று தெரியாமல் இருந்ததால் கிராமம் எது நகரம் எது என்ற வேறுபாடு மறைந்து விட்டது. அதனால் ஆட்சிச் சிக்கல் ஏற்பட்டது: வரம்பு மீறிய எல்லையையும் அவன் கட்டிக் காக்க விரும்ய வில்லை.

மதுரையின் புனிதமும் பிற எல்லைகளின் கலப்பால் கெட்டு விடுகிறது என்பதால் இறைவனும் அது செயற்படுத்த வேண்டிய ஒன்று என்று முடிவு செய்தார். எப்படி எல்லையைச் சுட்டிக்காட்டுவது என்ற தொல்லை, ஏற்பட்டது.

அதற்கு வழியையும் கண்டார்; தன் கரத்தில் ஆபரணமாகச் சுற்றிக்கொண்டிருந்த ஆலகால நஞ்சைக்கொண்ட பாம்பினை ஏவினார். அது தன் வாலையும் தலையையும் தொட்டுக் கொண்டு ஒரு சுற்று சுற்றியது. அதுவே மதுரையின் நில எல்லையாகியது.

பாண்டியன் சுற்றிலும் சுவர் எழுப்பிக் காவல்மதிலை எழுப்பினான். தெற்கு வாயிலுக்குத் திருப்பரங்குன்றமும், வடக்கு வாயிலுக்கு இடப மலையும், மேற்கு வாயிலுக்குத் திருவேடகமும். கிழக்கு வாயிலுக்குத் திருப்பூவணமும் எல்லைகளாக அமைந்தன. மதிலுக்கு ஆலவாய் மதில் எனவும் நகருக்கு ஆலவாய் நகரம் எனவும் பெயர்கள் அமைந்தன. அந்நகரத்தில் புத்தம் புதிய மண்டபங்களையும் கோபுரங்களையும் மாளிகைகளையும் கட்டி அழகுபடுத்தினான். நகர் என்றாலேயே மாளிகை என்ற பொருள் உண்டு. அதற்கேற்ப அவன் ஆட்சிக் காலத்தில் நகரில் மாளிகைகள் எழுந்தன.

திங்களின் மதுரத் துளிகள் பட்டதால் மதுரை என்றும், மேகங்கள் மாடங்களைப் போலக் கவிந்து நகரைக் காப்பாற்றியதால் கூடல் என்றும், இப்பொழுது திருவாலவாய், என்றும் அந்நகருக்குப் பெயர்கள் அமைந்தன.