உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிளையாடற் புராணம்/50

விக்கிமூலம் இலிருந்து

50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் அவ்வப்பொழுது போர்கள் மூண்டன. பாண்டியர்கள் கோயில் திருப்பணிகளில் அரசுப் பொருளைச் செலவிட்டபடியால் படைகளைப் பெருக்க இயலவில்லை; வகுத்தல் கணக்குப் போட்டவர்கள் பெருக்கல் கணக்கில் தவறிவிட்டார்கள் வம்பி சேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் விக்கிரம சோழன் என்பவன் வடபுல வேந்தர்களான கயபதி: நரபதி, துரகபதி முதலியவர்களைத் துணைக் கொண்டு எதிர்த்தான்.

வடக்கும் கிழக்கும் சேர்ந்து தெற்கைத் தாக்கின. அவை முடிவில் மேற்கைப் பார்க்க வேண்டி ஏற்பட்டது. பாண்டியன் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டுப் பகைவர்கள் போர் தொடுத்திருப்பதைத் தெரிவித்தான். பாண்டியர்களுக்கு எப்பொழுதும் வங்கிப் பணம் போல இருந்து உதவும் சோமசுந்தரர் "நீ அஞ்சாமல் போர் செய். யாம் துஞ்சாமல் உமக்கு உதவுவோம்" என்று அசரீரி வடிவில் குரல் தந்தார்.

“யாமிருக்கப் பயமேன்" என்று இறைவன் கூறியபின் அவனுக்குத் துணிவு பிறந்தது; பெரும் படையுடன் வந்த வடபுலத்தவனை எதிர்த்தான். ஆரம்ப வெற்றி சோழனுக்கே சென்றது. பின்னிட்டுக் கால் எடுத்து வைக்கும் நேரத்தில் முன்னிட்டு இறைவன் வேடுவ வேடத்தோடு களத்தில் புகுந்து அம்பு எய்தான். அவற்றில் சுந்தரேசன் என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. வேடுவனாக வந்தவர் சோமேசர் என்பதை அறிந்த சோழன் கதி கலங்கினான். களத்தைவிட்டு அவன் புறமுதுகிடத் தொடங்கினான்.

வடபுலத்தவன் அஞ்சிப் புறமுதுகிட்ட சோழனை இழிவுபடுத்தினான். போருக்கு வந்த பிறகு உயிருக்கு அஞ்சி ஊர் திரும்பிய அவன் கோழைத் தனத்தைக் கண்டு சினந்தனர். அவர்கள் மட்டும் நின்று போர் செய்து வீர மரணம் அடைந்தனர். பாண்டியன் வெற்றி அடைந்து விழாக் கொண்டாடினான்.

கோயில் திருப்பணிகள் பல புதியன செய்து வில்லும் அம்பும் பொன்னால் செய்து அந்தப் போர் நினைவுக்கு வடிவு தந்தான். சுந்தரனின் திருநாமம் அவ்வம்பில் பொறிக்கப்பட்டது. 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/50&oldid=1113244" இலிருந்து மீள்விக்கப்பட்டது