திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 17 முதல் 19 வரை

விக்கிமூலம் இலிருந்து


படிமம்:ReinassanceLute.jpg
"யாழின் சுருதிகள் மாறாமலே இருந்துகொண்டு, பண்ணின் இயல்பை மாற்றி அமைப்பதுபோல் இயற்கையின் ஆற்றல்களும் செயல்படுகின்றன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்." - சாலமோனின் ஞானம் 19:18.

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 19 வரை

அதிகாரம் 17[தொகு]

இருளும் ஒளியும்[தொகு]


1 உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை.
எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்.


2 நெறிகெட்டவர்கள் உமது தூய மக்களினத்தை அடிமைப்படுத்த எண்ணியபோது
அவர்களே காரிருளின் அடிமைகளாகவும்
நீண்ட இரவின் கைதிகளாகவும்
தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு,
உமது முடிவில்லாப் பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள். [*]


3 மேலும் மறதி என்னும் இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால்
தங்கள் மறைவான பாவங்களில் மறைந்து கொண்டதாக
எண்ணிக் கொண்டிருந்த அவர்கள்
அச்சத்தால் நடுங்கியவர்களாய்
கொடிய காட்சிகளால் அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.


4 அவர்கள் பதுங்கியிருந்த உள்ளறைகள்கூட
அவர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை.
அச்சுறுத்தும் பேரொலிகள் எங்கும் எதிரொலித்தன.
வாடிய முகங்கள் கொண்ட துயர ஆவிகள் தோன்றின.


5 எந்த நெருப்பின் ஆற்றலாலும் ஒளி கொடுக்க இயலவில்லை;
விண்மீன்களின் ஒளி மிகுந்த சுடர்களாலும்
இருள் சூழ்ந்த அவ்விரவை ஒளிர்விக்க முடியவில்லை.


6 தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும் தீயைத் தவிர
வேறு எதுவும் அவர்கள் முன்னால் தோன்றவில்லை.
அவர்களோ நடுக்கமுற்று,
தாங்கள் காணாதவற்றைவிடக்
கண்டவையே தங்களை அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.


7 மந்திரவாதக் கலையின் மாயங்கள் தாழ்வுற்றன.
அவர்கள் வீண்பெருமை பாராட்டிய ஞானம்
வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.


8 நோயுற்ற உள்ளத்திலிருந்து அச்சத்தையும்
குழப்பத்தையும் விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே
நகைப்புக்கிடமான அச்சத்தினால் நோயுற்றார்கள்.


9 தொல்லை தரக்கூடிய எதுவும் அவர்களை அச்சுறுத்தவில்லை எனினும்,
கடந்து செல்லும் விலங்குகளாலும்
சீறும் பாம்புகளாலும் அவர்கள் நடுக்கமுற்றார்கள்.
எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத காற்றைக்கூட


10 ஏறிட்டுப் பார்க்க மறுத்து,
அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.


11 கயமை தன்னிலே கோழைத்தனமானது.
தானே தனக்கு எதிராகச் சான்று பகர்கிறது;
மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாகி
இடர்களை எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.


12 அச்சம் என்பது பகுத்தறிவின் துணையைக் கைவிடுவதே.


13 உதவி கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்புக் குன்றும்போது,
துன்பத்தின் காரணம் அறியாத நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.


14 உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும்,
ஆற்றலற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும்
அவர்கள் யாவரும் அமைதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.


15 சில வேளைகளில் மாபெரும் பேயுருவங்கள்
அடிக்கடி தோன்றி அவர்களை அச்சுறுத்தின;
மற்றும் சில வேளைகளில் அவர்களது உள்ளம்
ஊக்கம் குன்றிச் செயலற்றுப் போயிற்று.
ஏனெனில் எதிர்பாராத திடீர் அச்சம் அவர்களைக் கலங்கடித்தது.


16 அங்கு இருந்த ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர்;
கம்பிகள் இல்லாச் சிறையில் அடைபட்டனர்.


17 ஏனெனில் உழவர், இடையர்,
பாலை நிலத்தில் பாடுபடும் தொழிலாளர்
ஆகிய அனைவரும் அதில் அகப்பட்டுத்
தவிர்க்கமுடியாத முடிவை எதிர்கொண்டனர்;
ஏனெனில் அவர்கள் அனைவரும்
இருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர்.


18 காற்றின் ஒலி,
படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரல்,
பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும் வெள்ளத்தின் சீரான ஓசை,
பெயர்த்துக் கீழே தள்ளப்படும் பாறைகளின் பேரொலி,


19 கண்ணுக்குப் பலப்படாதவாறு தாவி ஓடும் விலங்குகளின் பாய்ச்சல்,
கொடிய காட்டு விலங்குகளின் முழக்கம்,
மலைக் குடைவுகளிலிருந்து கேட்கும் எதிரொலி ஆகிய அனைத்தும்
அவர்களை அச்சத்தால் முடக்கிவிட்டன.


20 உலகெல்லாம் ஒளி வெள்ளத்தில் திளைத்து,
தன் வேலையில் தடையின்றி ஈடுபட்டிருந்தது.


21 இவ்வாறிருக்க,
எகிப்தியர்கள்மேல் மட்டும் அடர்ந்த காரிருள் கவிந்து படர்ந்தது.
அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது.
எனினும் அவர்களே இருளைவிடத்
தங்களுக்குத் தாங்கமுடியாத சுமையாய் இருந்தார்கள்.


குறிப்பு

[*] 17:2 = விப 10:21-23.


அதிகாரம் 18[தொகு]


1 உம் தூயவர்களுக்கோ பேரொளி இருந்தது.
அவர்களுடைய குரலை எதிரிகள் கேட்டார்கள்.
ஆனால் அவர்களின் உருவங்களைக் காணவில்லை.
தங்களைப் போலத் துன்புறாததால்
தூயவர்களைப் பேறுபெற்றோர் என்று கருதினார்கள்.


2 அப்பொழுது உம் தூயவர்கள்
அவர்களுக்குத் தீமை எதுவும் செய்யாததால்,
எகிப்தியர்கள் நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்;
தங்களது பழைய பகைமைக்கு மன்னிப்புக் கேட்டார்கள். [1]


3 இருளுக்கு மாறான ஒளிப்பிழம்பாம்
நெருப்புத் தூணை உம் மக்களுக்குக் கொடுத்தீர்.
முன்பின் அறியாத பாதையில்
அது அவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியது;
மாட்சி பொருந்திய அப்பயணத்தில்
அது வெம்மை தணிந்த கதிரவனாய் இருந்தது.


4 திருச்சட்டத்தின் அழியாத ஒளியை
உலகிற்கு வழங்க வேண்டிய உம் மக்களை
எகிப்தியர்கள் சிறைப்பிடித்தார்கள்.
இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே
இருளில் அடைக்கப்படவேண்டியது பொருத்தமே. [2]

தலைப்பேறுகளின் இறப்பும் இஸ்ரயேலரின் மீட்பும்[தொகு]


5 எகிப்தியர்கள் உம் தூயவர்களின் குழந்தைகளைக் கொல்லத்
திட்டமிட்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது.
எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக
அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளை மாய்த்துவிட்டீர்;
அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர். [3]


6 தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து
அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி
அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது.


7 நீதிமான்களின் மீட்பையும்
அவர்களுடைய பகைவர்களின் அழிவையும்
உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


8 எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால்
உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.


9 நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்;
நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப்
பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு
அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்;
மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை
அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.


10 ஆனால் பகைவர்கள் கதறியழுத குரல்கள் எதிரொலித்தன;
தங்கள் குழந்தைகளுக்காக எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.


11 அடிமையும் தலைவரும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டார்கள்;
குடிமகனும் மன்னரும் ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்;


12 எண்ணிலடங்காதோர் ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி,
எல்லாரும் ஒருமிக்க மடிந்து கிடந்தனர்.
உயிரோடிருந்தவர்களால் அவர்களைப் புதைக்கவும் இயலவில்லை.
அவர்களின் பெருமதிப்பிற்குரிய வழித் தோன்றல்கள்
ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.


13 மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து
அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும்,
தங்கள் தலைப்பேறுகள் கொல்லப்பட்டபோது,
இம்மக்கள் 'இறைமக்கள்' என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.


14 எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது,
நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில்,


15 எல்லாம் வல்ல உம் சொல்
விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து,
அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப்போல்
அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின்மீது வந்து பாய்ந்தது.


16 உமது தெளிவான கட்டளையாகிய
கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்றுகொண்டு,
எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது;
மண்ணுகத்தில் கால் ஊன்றியிருந்தபோதிலும்,
விண்ணகத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.


17 உடனே அச்சுறுத்தும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்கடித்தன;
எதிர்பாராத பேரச்சம் அவர்களைத் தாக்கியது.


18 அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக
அவர்கள் குற்றுயிராய் விழுந்தபோது,
தாங்கள் மடிவதன் காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.


19 ஏனெனில் தாங்கள் பட்ட துன்பத்தின் காரணத்தை
அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி
அவர்களைத் தொல்லைப்படுத்திய கனவுகள்
அதை முன்னறிவித்திருந்தன.


20 நீதிமான்களும் இறப்பை நுகர நேர்ந்தது.
பாலைநிலத்தில் இருந்த மக்கள் கூட்டம்
கொள்ளை நோயால் தாக்குண்டது.
ஆயினும் உமது சினம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.


21 குற்றமற்றவர் ஒருவர் அவர்களுக்காகப் பரிந்துபேச விரைந்தார்;
திருப்பணி என்னும் தம் படைக்கலம் தாங்கியவராய்,
மன்றாட்டையும் பரிகாரத்திற்கான நறுமணப்புகையையும் ஏந்தியவராய்,
உமது சினத்தை எதிர்த்து நின்று
அழிவை முடிவுறச் செய்தார்;
இவ்வாறு, தாம் உம் அடியார் என்று காட்டினார்.


22 உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ
அவர் உமது சினத்தை மேற்கொள்ளவில்லை;
ஆனால் எங்கள் மூதாதையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும்
உடன்படிக்கையையும் நினைவூட்டி
'வதைப்போனை'த் தம் சொல்லால் தோல்வியுறச் செய்தார்.


23 செத்தவர்களின் பிணங்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து
பெரும் குவியலாய்க் கிடந்தன.
அப்போது அவர் குறுக்கிட்டு உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி,
எஞ்சியிருந்தோரை அது தாக்காமல் செய்துவிட்டார்.


24 அவர் அணிந்திருந்த நீண்ட ஆடையில்
உலகு அனைத்தும் பொறிக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த நான்கு கல் வரிசையிலும்
மூதாதையரின் மாட்சிமிகு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அவர் தலையில் இருந்த மணிமுடியில்
உமது மாட்சி வரையப்பட்டிருந்தது. [4]


25 'அழிப்போன்' இவற்றைக் கண்டு பின்வாங்கினான்.
அச்சம் அவனை ஆட்கொண்டது.
உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே அவனுக்குப் போதுமானது. [5]


குறிப்புகள்

[1] 18:2 - "தங்களை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டார்கள்"
என்றும் மொழிபெயர்க்கலாம்.
[2] 18:1-4 = விப 13:17-22.
[3] 18:5 = விப 11:1-6.
[4] 18:24 = விப 28:1-43; சீஞா 45:6-13; 50:11.
[5] 18:20-25 = எண் 16:41-50.


அதிகாரம் 19[தொகு]

செங்கடலால் அழிவும் மீட்பும்[தொகு]


1 இறைப்பற்றில்லாதவர்களைக்
கடவுளின் சீற்றம் இரக்கமின்றி இறுதிவரை தாக்கியது.
ஏனெனில் அவர்கள் செய்யவிருந்ததைக்
கடவுள் முன்னரே அறிந்திருந்தார்.


2 இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல விடைகொடுத்து,
விரைவில் அவர்களை வெளியே அனுப்பி வைத்த
அதே எகிப்தியர்கள் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டு
அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.


3 எகிப்தியர்கள் தங்களுள் இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி,
அவர்களுக்காக இன்னும் துயரம் கொண்டாடுகையில்,
இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில் இறங்கினார்கள்;
முன்பு யாரை வெளியேறும்படி வேண்டிக் கொண்டார்களோ,
அவர்களையே தப்பியோடுவோரைப்போலத் துரத்திச் சென்றார்கள்.


4 தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே
அவர்கள் தள்ளப்பட்டார்கள்;
அதனால் இதற்குமுன் நடந்தவற்றையெல்லாம்
அவர்கள் மறந்து விட்டார்கள்;
இவ்வாறு தங்கள் துன்பத்தில் குறையாயிருந்த தண்டனையை
நிறைவு செய்தார்கள்.


5 இவ்வாறு உம் மக்கள் வியத்தகு பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள்.
அவர்களுடைய பகைவர்களோ விந்தையான சாவை எதிர்கொண்டார்கள்.


6 உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி,
படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து,
மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது.


7 அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது.
முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.
செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும்,
சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின.


8 உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும்
அவ்வழியே கடந்து சென்றனர்.
உம்முடைய வியத்தகு செயல்களை
உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.


9 குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும்,
ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிகொண்டும்,
தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப்
புகழ்ந்து கொண்டே சென்றனர். [1]

இயற்கையில் ஏற்பட்ட மாற்றம்[தொகு]


10 அவர்கள் வேற்று நாட்டில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தவற்றை
இன்னும் நினைவு கூர்ந்தார்கள்;
விலங்குகளுக்கு மாறாக நிலம் கொசுக்களைத் தோற்றுவித்ததையும்,
மீன்களுக்கு மாறாகத் தவளைக் கூட்டங்களை
ஆறு உமிழ்ந்ததையும்
அவர்கள் இன்னும் நினைவில் வைத்திருந்ததார்கள்.


11 பின்பு சுவையான இறைச்சியை அவர்கள் விரும்பி வேண்டியபோது,
புதுவகைப் பறவைகளைக் கண்டார்கள்.


12 ஏனெனில் அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக்
கடலிலிருந்து காடைகள் புறப்பட்டுவந்தன.

எகிப்தியர்களின் குற்றமும் தண்டனையும்[தொகு]


13 பேரிடியால் எச்சரிக்கப்பட்ட பின்னரே
பாவிகள் தண்டிக்கப்பட்டார்கள்;
தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக
நீதியின்படி துன்புற்றார்கள்;
ஏனெனில், அன்னியர்மட்டில்
பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.


14 சோதோம் நகரைச் சேர்ந்தோர்
தங்களை நாடிவந்த வேற்றினத்தார்க்கு
இடம் கொடுக்க மறுத்தார்கள்.
எகிப்தியர்களோ தங்களுக்கு நன்மை செய்தவர்களையே
அடிமைப்படுத்தினார்கள். [2]


15 இது மட்டுமன்று;
சோதோம் நகரைச் சேர்ந்தோர் உறுதியாகத்
தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்;
ஏனெனில் அவர்கள் அயல்நாட்டினரைப் பகைவர்களென நடத்தினார்கள்.


16 எகிப்தியர்களோ அயல்நாட்டினரை விழாக்கோலத்துடன் வரவேற்று,
அவர்களுக்கு எல்லா உரிமையும் அளித்தபின்னரும்
கொடுந்தொல்லைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.


17 நீதிமானின் கதவு அருகில் சோதோம் நகரைச் சேர்ந்தோர்
கவ்விய காரிருளால் சூழப்பட்டு,
தம்தம் கதவைத் தடவிப்பார்த்து வழி தேடியதுபோல்,
எகிப்தியர்களும் பார்வையற்றுப் போயினர்.

இயற்கையில் விளங்கிய இறைவனின் ஆற்றல்[தொகு]


18 யாழின் சுருதிகள் மாறாமலே இருந்துகொண்டு,
பண்ணின் இயல்பை மாற்றி அமைப்பதுபோல்
இயற்கையின் ஆற்றல்களும் செயல்படுகின்றன.
நிகழ்ந்தவற்றைக் கண்டு
இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.


19 நிலத்தில் வாழும் விலங்குகள்
நீரில் வாழும் விலங்குகளாக மாறின;
நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.


20 நீரின் நடுவிலும் நெருப்பு
தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது;
நீரும் தன் அவிக்கும் இயல்வை மறந்துவிட்டது.


21 மாறாக, அழியக்கூடிய உயிரினங்கள் நெருப்புக்குள் நடந்தபோதும்,
அவற்றின் சதையை அது சுட்டெரிக்கவில்லை;
பனிக்கட்டிபோல் எளிதில் உருகும் தன்மை கொண்ட
அந்த விண்ணக உணவையும் உருக்கவில்லை.


22 ஆண்டவரே,
நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்;
எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும்
நீர் அவர்களுக்குத் துணைபுரியத் தவறவில்லை.


குறிப்புகள்

[1] 19:1-9 = விப 14:1-4.
[2] 19:14 = தொநூ 19:1-11.


(சாலமோனின் ஞானம் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை