திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
செலூக்கியர் ஆட்சியின்போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டுமுறை முதலியன யூதர்கள்மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறைநூலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார். உண்மையான ஞானம் இஸ்ரயேலில்தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதினார். எனவே இந்நூல் எபிரேயத்தில் "சீராவின் மகனான ஏசுவின் ஞானம்" அல்லது "பென் சீரா" என வழங்குகிறது.
எபிரேய மொழியில் எழுதப்பெற்ற இந்நூலை, பாலஸ்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் "திருப்பாடல்கள்" நூலுக்கு அடுத்தபடி இந்நூல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது "சபை நூல்" என்றும் பெயர் பெற்றது.
இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்துவிட, இதன் மொழிபெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூல பாடமாகப் பயன்பட்டுவருகிறது. எனினும், எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்துகொள்ள இது பெரிதும் துணை புரிகிறது.
ஞானம் பற்றிய கருத்துக் குவியலைக் கொண்ட முதல் பகுதி, அன்றாட வாழ்வில் ஞானத்தைக் கடைப்பிடிக்கும் முறைபற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி இசுரயேலின் மீட்பு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்வதோடு, அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது.
சீராக்கின் ஞானம்
[தொகு]நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முகவுரை | (1-35 வரிகள்) | 103 |
2. ஞானம் வழங்கும் நன்னெறி | 1:1 - 43:33 | 103 - 173 |
3. மூதாதையர் புகழ்ச்சி | 44:1 - 50:29 | 173 - 185 |
4. பிற்சேர்க்கை | 51:1-30 | 186 - 187 |
சீராக்கின் ஞானம் (The Book of Sirach)
[தொகு]அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
முகவுரை
[தொகு]
1-14 திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள்,
அவற்றைத் தொடர்ந்து வரும் ஏடுகள் வழியாகப்
பல சிறந்த படிப்பினைகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
அவை காட்டும் நற்பயிற்சிக்காகவும் ஞானத்துக்காகவும்
இஸ்ரயேலைப் புகழ்வது நமது கடமையாகும்.
அந்நூல்களைப் படிப்போர் அவற்றைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது;
கல்வியில் நாட்டம் கொண்டோர் என்னும் முறையில்
தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும்.
எனவே, என் பாட்டனாராகிய ஏசு
திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள்,
நம் மூதாதையர் எழுதிய மற்ற ஏடுகள் ஆகியவற்றை
ஆழ்ந்து கற்பதில் ஆர்வம் காட்டினார்;
அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றபின்
நற்பயிற்சி, ஞானம்பற்றி அவரே எழுதலானார்.
இவ்வாறு அவர் எழுதியவற்றின் துணைகொண்டு,
கல்வியில் நாட்டம் கொண்டோர்
திருச்சட்டத்திற்கு ஏற்ப வாழ்வதில் பெரும் முன்னேற்றம் காண்பர்.
15-26 எனவே, நீங்கள் இந்நூலை நன்மனத்தோடும்,
கவனத்தோடும் படிக்குமாறு வேண்டுகிறேன்.
நான் மிகுந்த கருத்துடன் இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருந்தாலும்,
சில சொற்றொடர்களைச் சற்றுப் பிழைபட மொழிபெயர்த்திருக்கக்கூடும்.
அதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்;
ஏனெனில் மூலமொழியாகிய எபிரேயத்தில் சொல்லப்பட்டதைப்
பிறிதொரு மொழியில் பெயர்த்து எழுதுகின்றபொழுது,
அது முதல்நூல் பொருளை உணர்த்துவதில்லை.
இந்த நூலுக்கு மட்டுமன்று;
திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், மற்ற ஏடுகள்
ஆகிய எல்லாவற்றுக்குமே இது பொருந்தும்.
இவற்றின் பொருள் மூலமொழியில் பெரும் அளவில் மாறுபடுகிறது.
27-35 மன்னர் யூர்கெத்தின் [*] ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில்,
நான் எகிப்துக்குச் சென்று அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தேன்.
அப்பொழுது மிகுதியாகக் கற்றுக்கொள்வதற்கு
உகந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எனவே நானே பெரும் முயற்சி எடுத்து உழைத்து,
இந்த நூலை மொழிபெயர்ப்பது முதன்மையான தேவை என்று உணர்ந்தேன்.
அப்போது மிகுந்த கருத்தோடும் திறமையோடும் செயல்புரிந்து
அப்பணியை முடித்தேன்.
இவ்வாறு, வெளிநாடுகளில் வாழ்ந்துவருபவருள்
படிப்பினைமீது நாட்டம் கொள்வோரும்
திருச்சட்டத்தின்படி வாழ்வதற்கான நற்பயிற்சியில் ஈடுபடுவோரும்
பயன் அடையும்பொருட்டு
அதை வெளியிட்டுள்ளேன்.
- குறிப்பு
[*] வரி 27: - "யூர்கெத்து" என்னும் இக் கிரேக்கச் சொல்லுக்குப்
புரவலர், வள்ளல் என்பது பொருள்.
இச்சிறப்புப் பெயர் பல மன்னர்களுக்கு வழங்கியது.
இங்கு மன்னர் 7ஆம் தாலமியை (கி.மு. 170-117) குறிக்கிறது.
அதிகாரம் 1
[தொகு]ஞானம் வழங்கும் நன்னெறி
[தொகு]ஞானத்தின் ஊற்று
[தொகு]
1 ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது;
அது என்றும் அவரோடு இருக்கின்றது. [1]
2 கடல் மணலையோ மழைத்துளியையோ
முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்?
3 வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ
ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்? [2]
4 எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது;
கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. [3]
5 [உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று;
என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.] [4]
6 ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது?
அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? [5]
7 [ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது?
அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?] [6]
8 ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்;
தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.
9 அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்;
தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனால் நிரப்பியவர்.
10 தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்;
தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார். [7]
இறையச்சம்
[தொகு]
11 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்;
அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும்.
12 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது;
மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது.
13 ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்;
அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள்.
14 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்;
அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது. [8]
15 ஞானம் மனிதர் நடுவில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது;
அவர்களுடைய வழிமரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.
16 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு;
அது தன் கனிகளால் மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.
17 அது அவர்களின் இல்லம் முழுவதையும் விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்;
தன் விளைச்சலால் அவர்களின் களஞ்சியங்களை நிறைத்திடும். [9]
18 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி;
அது அமைதியைப் பொழிந்து, உடல்நலனைக் கொழிக்கச் செய்கிறது.
19 ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்;
அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்;
அதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டோரை மாட்சியால் உயர்த்திட்டார்.
20 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்;
அதன் கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.
21 [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது.
அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றிவிடுகிறது.] [10]
பொறுமையும் தன்னடக்கமும்
[தொகு]
22 நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது;
சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சி அடைவர்.
23 பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்;
பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.
24 அவர்கள் தக்க நேரம்வரை நா காப்பார்கள்.
பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.
ஞானமும் ஒழுக்கமும்
[தொகு]
25 ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு;
பாவிகளுக்கு இறைப்பற்று அருவருப்பைத் தரும்.
26 ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி;
அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார்.
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும்.
பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும்.
28 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே;
பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.
29 மனிதர்முன் [11] வெளிவேடம் போட வேண்டாம்.
நாவடக்கம் கொள்.
30 நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்குக் கொள்ளாதே.
உன்மீதே மானக்கேட்டை வருவித்துக்கொள்ளாதே.
ஆண்டவருக்கு நீ அஞ்சி நடவாததாலும்
உன் உள்ளத்தில் கள்ளம் நிறைந்திருந்ததாலும்
ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்;
சபையார் எல்லார் முன்னிலையில் உன்னைத் தாழ்த்துவார். [12]
- குறிப்புகள்
[1] 1:1 = நீமொ 2:4; சாஞா 8:21.
[2] 1:3 = நீமொ 30:4; பாரூ 3:29.
[3] 1:4 = நீமொ 3:19.
[4] 1:5 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[5] 1:6 = சாஞா 9:13.
[6] 1:7 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[7] 1:10 = சஉ 2:26.
[8] 1:14 = திபா 111:10.
[9] 1:17 = சாஞா 7:11.
[10] 1:21 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[11] 1:29 - இது சிரியாக்குப் பாடம்; "மனிதரின் வாயில்" என்பது கிரேக்க பாடம்.
[12] 1:30 = மத் 23:12.
அதிகாரம் 2
[தொகு]ஆண்டவரிடம் பற்றுறுதி
[தொகு]
1 குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால்,
சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.
2 உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு;
உறுதியாக இரு;
துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே.
3 ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்;
அவரை விட்டு விலகிச் செல்லாதே.
உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய்.
4 என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்;
இழிவுவரும்போது பொறுமையாய் இரு.
5 நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது;
ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில்
சோதித்துப் பார்க்கப்படுகின்றனர். [1]
6 ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்;
அவர் உனக்குத் துணை செய்வார்.
உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள். [2]
7 ஆண்டவருக்கு அஞ்சுவோரே,
அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்;
நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.
8 ஆண்டவருக்கு அஞ்சுவோரே,
அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்;
உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது.
9 ஆண்டவருக்கு அஞ்சுவோரே,
நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.
10 முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள்.
ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்?
அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்?
அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்? [3]
11 ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்;
பாவங்களை மன்னிப்பவர்;
துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.
12 கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும்
இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடு வரும்!
13 உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்!
ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை;
எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.
14 தளர்ச்சி அடைந்தோரே,
உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்!
ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்?
15 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவருடைய சொற்களைக் கடைப்பிடிப்பர்;
அவர்மீது அன்புசெலுத்துவோர் அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.
16 ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர்தம் விருப்பத்தையே தேடுவர்;
அவரிடம் அன்பு பாராட்டுவோர்
அவர்தம் திருச்சட்டத்தில் நிறைவு அடைவர். [4]
17 ஆண்டவருக்கு அஞ்சுவோர் முன்னேற்பாடாய் இருப்பர்;
அவர் திருமுன் தங்களைத் தாழ்த்திக் கொள்வர்.
18 'ஆண்டவரின் கைகளில் நாம் விழுவோம்;
மனிதரின் கைகளில் விழமாட்டோம்;
ஏனெனில் அவரது பெருமையைப் போன்று
அவர்தம் இரக்கமும் சிறந்தது' என
அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
- குறிப்புகள்
[1] 2:5 = சாஞா 3:6; 1 பேது 1:7.
[2] 2:6 = திபா 37:3,5.
[3] 2:10 = திபா 37:25.
[4] 2:16 = திபா 119:97, 103.
(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை