உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்; பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்." - சீராக்கின் ஞானம் 3:15.

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)

[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3

[தொகு]

பெற்றோர்பால் கடமை

[தொகு]


1 குழந்தைகளே,
உங்கள் தந்தையாகிய எனக்குச் செவிசாயுங்கள்;
நான் கூறுவதன்படி செயல்படுங்கள்;
அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்.


2 பிள்ளைகளைவிடத் தந்தையரை
ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தியுள்ளார்;
பிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.


3 தந்தையரை மதிப்போர்
பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர்.


4 அன்னையரை மேன்மைப்படுத்துவோர்
செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.


5 தந்தையரை மதிப்போருக்குத்
தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்;
அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும்.


6 தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்;
ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர்.


7 தலைவர்கள்கீழ்ப் பணியாளர்கள் போல்
அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள். [1]


8 சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்;
அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.


9 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்;
தாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும். [2]


10 உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்;
உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது.


11 தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை;
தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை. [3]


12 குழந்தாய்,
உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு;
அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே.


13 அவரது அறிவாற்றல் குறைந்தாலும்
பொறுமையைக் கடைப்பிடி;
நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.


14 தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது.
அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.


15 உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்;
பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும்.


16 தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்;
அன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.

தாழ்ச்சி

[தொகு]


17 குழந்தாய்,
நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்;
அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.


18 நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட.
அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.


19 [உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர்.
ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர்
தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.] [4]


20 ஆண்டவரின் ஆற்றல் பெரிது;
ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.


21 உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே;
உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.


22 உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்;
ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.


23 உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே;
ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே
மனித அறிவுக்கு எட்டாதவை.


24 மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது;
தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.


25 [கண் இல்லையேல் பார்க்க முடியாது.
அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.] [5]

செருக்கு

[தொகு]


26 பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்;
கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர். [6]


27 அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்;
பாவிகள் பாவத்தைப் பெருக்குவர்.


28 இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை;
ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது.


29 நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்;
ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

ஏழைகளுக்கு இரங்கல்

[தொகு]


30 எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்;
தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும்.


31 நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர்
தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்;
தங்களது வீழ்ச்சிக்காலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.


குறிப்புகள்

[1] 3:7 = எபே 6:1.
[2] 3:9 = தொநூ 27:27-29.
[3] 3:11 = நீமொ 17:6.
[4] 3:19 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[5] 3:25 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[6] 3:26 = நீமொ 28:14.


அதிகாரம் 4

[தொகு]


1 குழந்தாய்,
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.


2 பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;
வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே.


3 உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே;
வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்.


4 துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே;
ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிகொள்ளாதே. [1]


5 உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து
உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;
உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே.


6 ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால்,
அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார். [2]


7 மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு;
பெரியோர்களுக்குத் தலை வணங்கு.


8 ஏழைகளுக்குச் செவிசாய்;
அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.


9 ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி;
நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு. [3]


10 கைவிடப்பட்டோர்க்குத் தந்தையாய் இரு;
அவர்களின் அன்னையர்க்குத் துணைவன்போல் இரு.
அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்;
தாயைவிட அவர் உன்மீது அன்புகூர்வார்.

ஞானம் என்னும் ஆசான்

[தொகு]


11 ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்;
தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும்.


12 ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்;
அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். [4]


13 அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்;
அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.


14 அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்;
ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.


15 ஞானத்துக்குப் பணிவோர்
மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்;
அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; [5]


16 ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்;
அவர்களுடைய வழி மரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்;


17 முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்;
அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்;
தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை
அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்;
தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும்.


18 அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்;
அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.


19 அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால்,
அவர்களை அது கைவிட்டுவிடும்;
அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.

தன்னம்பிக்கை

[தொகு]


20 தக்கநேரம் பார்;
தீமையைக்குறித்து விழிப்பாயிரு;
உன்னைப்பற்றியே நாணம் அடையாதே.


21 ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும்;
மற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும்.


22 பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக் கொள்ளாதே;
பணிவின் பெயரால் வீழ்ச்சி அடையாதே.


23 பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே. [6]


24 ஞானம் பேச்சில் புலப்படும்;
நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.


25 உண்மைக்கு மாறாகப் பேசாதே;
உன் அறியாமைக்காக நாணம் கொள்.


26 உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே;
ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே. [7]


27 மூடருக்கு அடிபணியாதே;
வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே.


28 இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு;
கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.


29 பேச்சில் துடுக்காய் இராதே;
செயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே.


30 வீட்டில் சிங்கம்போல் இராதே;
பணியாளர்முன் கோழையாய் இராதே.


31 பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே;
கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே. [8]


குறிப்புகள்

[1] 4:4 = தோபி 4:7.
[2] 4:6 = இச 15:9; யோபு 34:28.
[3] 4:9 = எசா 1:17; எரே 22:3.
[4] 4:12 = நீமொ 8:17.
[5] 4:15 = சாஞா 3:8.
[6] 4:23 - "அழகை முன்னிட்டு உன் ஞானத்தை மூடி மறைக்காதே"
என்னும் தொடர் சில கிரேக்கச் சுவடிகளில் காணப்படுகிறது.
[7] 4:26 = நீமொ 28:13; யாக் 5:16.
[8] 4:31 = திப 20:35.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை