திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஒவ்வோர் உயிரும் தன் இனத்தின்மீது அன்பு பாராட்டுகிறது; ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு செலுத்துகிறார்." - சீராக்கின் ஞானம் 13:15.

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

தீய உறவு[தொகு]


1 மையைத் தொடுவோர் தங்களைக் கறைப்படுத்திக் கொள்வர்;
செருக்குடையோருடன் சேர்ந்து பழகுவோர் அவர்களைப்போலவே மாறுவர்.


2 உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே;
உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும்
செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே.
மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு?
கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்.


3 செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி
ஏழைகளை இழிவுபடுத்தவும் செய்வார்கள்;
ஏழைகளோ அநீதிக்கு ஆளாவதோடு மன்னிப்பும் கேட்கவேண்டும். [1]


4 உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின்,
செல்வர் உன்னைச் சுரண்டுவர்;
உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர்.


5 நீ வசதியாய் இருக்கும்போது உன்னோடு ஒட்டி உறவாடுவர்;
உன்னை வெறுமையாக்கி விட்டுக் கவலையின்றி இருப்பர்.


6 உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்;
உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து
உனக்கு ஊக்கம் அளிப்பர்;
உன்னிடம் நயந்து பேசி,
'உனக்குத் தேவையானது என்ன?' எனக் கேட்பர்.


7 நீ திகைக்கத் திகைக்க உனக்குப் பல்சுவை விருந்தூட்டி,
சிறிது சிறிதாக உன்னை அறவே கறந்து,
இறுதியில் உன்னை எள்ளி நகையாடுவர்;
பின்னர் உன்னைக் காண நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்;
உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.


8 ஏமாந்து போகாதவாறு எச்சரிக்கையாய் இரு;
உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.


9 வலியோர் உன்னை விருந்துக்கு அழைக்கும்போது
ஆர்வம் காட்டாதே;
அப்படியானால் மீண்டும் மீண்டும் உன்னை அழைப்பர்.


10 எதிலும் முந்திக்கொள்ளாதே; நீ ஒதுக்கப்படலாம்.
தொலைவில் ஒதுங்கி நில்லாதே; நீ மறக்கப்படுவாய். [2]


11 வலியோரை உனக்கு இணையாக நடத்த முயலாதே;
அவர்களின் நீண்ட பேச்சுகளை நம்பாதே.
உன்னை ஆழம் காணவே அவர்கள் நீண்டநேரம் பேசுகின்றார்கள்;
அவர்கள் சிரித்துப் பேசுவதும் உன்னைக் கணிப்பதற்கே.


12 இரகசியங்களைக் காப்பாற்றாதோர் இரக்கமற்றோர்;
உன்னைக் கொடுமைப்படுத்தவும் சிறைப்படுத்தவும்
அவர்கள் தயங்கமாட்டார்கள்.


13 அவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாய் இரு;
ஏனெனில் உனது வீழ்ச்சியை மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.


14 [3] [நீ உறங்கும்போது இவற்றைக் கேட்க நேர்ந்தால் விழித்தெழு;
உன் வாழ்நாள்முழுவதும் ஆண்டவர்மீது அன்புசெலுத்து;
உன் மீட்புக்காக அவரை மன்றாடு.]


15 ஒவ்வோர் உயிரும் தன் இனத்தின்மீது அன்பு பாராட்டுகிறது;
ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு செலுத்துகிறார்.


16 உயிரினங்களெல்லாம் தங்கள் இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன;
மனிதரும் தம்மைப்போன்ற மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.


17 ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் உறவு ஏது?
பாவிகளுக்கும் இறைப்பற்றுள்ளோருக்கும் தொடர்பு ஏது? [4]


18 கழுதைப் புலிக்கும் நாய்க்கும் இடையே அமைதி எது?
செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சமாதானம் ஏது?


19 காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில் சிங்கங்களுக்கு இரையாகும்;
ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர். [5]


20 இறுமாப்புக் கொண்டோர் தாழ்ச்சியை அருவருப்பர்;
செல்வர் ஏழைகளை அருவருப்பர்.


21 செல்வர் தடுமாறினால் நண்பர்கள் தாங்குவார்கள்;
எளியோர் விழும்போது நண்பர்களும் சேர்ந்து தள்ளி விடுவார்கள்.


22 செல்வர் நாத்தவறினால் அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்;
தகாதவற்றைப் பேசினும் அவற்றை முறைப்படுத்துவர்.
எளியோர் நாத்தவறினால் அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்;
அறிவுக்கூர்மையோடு பேசினும் அவர்களுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இலர்.


23 செல்வர் பேசும்போது எல்லாரும் அமைதியாய்க் கேட்பர்;
அவரது பேச்சை வானுயரப் புகழ்வர்.
ஏழை பேசும்போது, 'இவன் யார்?' எனக் கேட்பர்;
பேச்சில் தடுமாற்றம் ஏற்படின், அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.


24 பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று;
வறுமை தீயது என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.


25 மனிதரின் உள்ளம் நன்மைக்கோ தீமைக்கோ
முகத் தோற்றத்தை மாற்றி விடுகிறது.


26 இனிய உள்ளத்தின் அடையாளம் மலர்ந்த முகம்.
உவமைகளைக் கண்டுபிடிக்கக்
கடும் உழைப்போடு கூடிய சிந்தனை வேண்டும். [6]


குறிப்புகள்

[1] 13:3 = நீமொ 18:23.
[2] 13:10 = நீமொ 25:6-7.
[3] 13:14 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[4] 13:17 = நீமொ 29:27.
[5] 13:19 = ஆமோ 8:4.
[6] 13:26 = நீமொ 15:13.


அதிகாரம் 14[தொகு]

உண்மையான மகிழ்ச்சி[தொகு]


1 நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்;
அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்.


2 தம் மனச்சான்றால் கண்டிக்கப்படாதோர் பேறுபெற்றோர்;
நம்பிக்கை தளராதோரும் பேறு பெற்றோர். [1]

பொறாமையும் பேராசையும்[தொகு]


3 கஞ்சனுக்குச் செல்வம் ஏற்றதல்ல;
கருமிக்க அதனால் என்ன பயன்? [2]


4 தமக்கெனச் செலவிடாமல் சேர்த்து வைக்கும் செல்வம்
பிறரையே சென்று அடையும்;
அச்செல்வத்தால் பிறரே வளமுடன் வாழ்வர்.


5 தங்களையே கடுமையாக நடத்துவோர்
அடுத்தவருக்கு எங்ஙனம் நன்மை செய்வர்?
அவர்கள் தங்களிடம் உள்ள செல்வங்களையே
துய்த்து மகிழத் தெரியாதவர்கள்.


6 தமக்குத்தாமே கருமியாய் இருப்போரைவிடக்
கொடியவர் இலர்;
அவர்களது கஞ்சத்தனத்துக்கு இதுவே தண்டனை.


7 அவர்கள் நன்மை செய்தாலும்
அது அவர்களை அறியாமல் நிகழ்கின்றது;
இறுதியில் தங்கள் கஞ்சத்தனத்தையே காட்டி விடுவர்.


8 பொறாமை கொண்டோர் தீயோர்;
பிறரைப் புறக்கணித்து முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வர். [3]


9 பேராசை கொண்டோர் உள்ளது கொண்டு நிறைவு அடைவதில்லை;
பேராசையுடன் கூடிய அநீதி,
உள்ளம் தளர்வு அடையச் செய்கிறது.


10 கருமிகள் மற்றவர்களுக்கு உணவை அளந்தே கொடுப்பார்கள்.
அவர்களின் உணவறையில் எதுவும் இராது. [4]


11 குழந்தாய்,
உள்ளதைக் கொண்டு உன்னையே பேணிக்கொள்;
ஆண்டவருக்கு ஏற்ற காணிக்கை செலுத்து.


12 இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும்
நீ சாகவேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை
என்பதையும் நினைவில் கொள்.


13 நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு உதவி செய்;
உன்னால் முடிந்தவரை தாராளமாகக் கொடு.


14 ஒவ்வொரு நாளும் உனக்குக் கிடைக்கும்
நன்மைகளை நன்கு பயன்படுத்து;
உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டுவிடாதே.


15 உன் உழைப்பின் பயனைப்
பிறருக்கு விட்டுவிடுவதில்லையா?
நீ உழைத்துச் சேர்த்ததைப் பங்கிட்டுக்கொள்ள விடுவதில்லையா?


16 கொடுத்து வாங்கு; மகிழ்ந்திரு.
பாதாளத்தில் இன்பத்தைத் தேட முடியாது.


17 ஆடைபோன்று மனிதர் அனைவரும்
முதுமை அடைகின்றனர்;
'நீ திண்ணமாய்ச் சாவாய்' என்பதே தொன்மை நெறிமுறை.


18 இலை அடர்ந்த மரத்தின் சில இலைகள் உதிர்கின்றன;
சில இலைகள் தளிர்க்கின்றன.
ஊனும் உதிரமும் கொண்ட மனித இனத்திலும்
சிலர் இறப்பர்; சிலர் பிறப்பர்.


19 கை வேலைப்பாடுகளெல்லாம் மட்கி மறையும்;
அவற்றைச் செய்தோரும் அவற்றோடு மறைந்தொழிவர்.

ஞானிகளின் மகிழ்ச்சி[தொகு]


20 ஞானத்தில் நாட்டம் செலுத்துவோர் பேறுபெற்றோர்;
அறிவுக்கூர்மை கொண்டு வாதிடுவோரும் பேறுபெற்றோர்.


21 ஞானத்தின் வழிகள் பற்றித் தம் உள்ளத்தில் எண்ணிப்பார்ப்போரும்
அதன் இரகசியங்களைச் சீர்தூக்கிப் பார்ப்போரும் பேறுபெற்றோர்.


22 வேடர்போன்று அதைத் தேடிச்சென்று
அதன் வழிகளில் பதுங்கியிருப்போரும் பேறுபெற்றோர்.


23 அதன் பலகணி வழியே உற்றுநோக்குவோரும்
அதன் கதவு அருகே நின்று கேட்போரும் பேறுபெற்றோர்.


24 அதன் வீட்டின் அருகே தங்குவோரும்
அதன் சுவரில் தம் கூடாரத்தின் முளையை
இறுக்குவோறும் பேறுபெற்றோர்.


25 அதன் அருகிலேயே தம் கூடாரத்தை அமைப்போரும்
அதன் இனிமை நிறைந்த இடத்தில்
தம் இல்லத்தைக் கட்டுவோரும் பேறுபெற்றோர். [5]


26 அதன் நிழலில் தம் பிள்ளைகளைக் கிடத்துவோரும்
அதன் கிளைகளுக்கு அடியில் தங்குவோரும் பேறுபெற்றோர்.


27 வெப்பத்தினின்று ஞானத்திடம் தஞ்சம் புகுவோரும்
அதன் மாட்சியின் நடுவே குடியிருப்போரும் பேறுபெற்றோர்.


குறிப்புகள்

[1] 14:2 = உரோ 14:22; 1 யோவா 3:21; சாஞா 4:1-3.
[2] 14:3 = சஉ 4:8.
[3] 14:8 = தோபி 4:7.
[4] 14:10 = நீமொ 23:6-7.
[5] 14:10-25 = நீமொ 8:32-35.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை