திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தானியேல்:இணைப்புகள்/இணைப்பு 1: இளைஞர் மூவரின் பாடல்
தானியேல் என்னும் நூல் விவிலியத்தின் கிரேக்கத் திருமுறையில் மூன்று பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது.
1. இளைஞர் மூவரின் பாடல்: பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக அன்னியா, மிசாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் சூளையில் எறியப்பட்டார்கள். இத்தகைய தீங்குகளினின்று தங்களையும் தங்கள் மக்கள் இஸ்ரயேலரையும் விடுவிக்குமாறு ஆண்டவரிடம் அசரியா மன்றாட (1-22), அவரும் அவர்களைப் பாதுகாத்தார் (23-27). பின் அம்மூவரும் சேர்ந்து ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்தனர் (28-67).
2. சூசன்னா: யூத ஒழுக்கத்தின்படி அப்பழுக்கற்றவராய் வாழ்ந்துவந்த சூசன்னாவின் பேரழகில் மயங்கிய முதியோர் இருவர் காமுற்று அவரை அடைய முயன்றனர் (1-27). அது நிறைவேறாததால் அவர்மீது பொய்க் குற்றம் சுமத்தி, அவருக்குச் சாவுத் தண்டனை விதித்தனர் (28-41). ஆண்டவரோ தானியேல் வழியாக அவருக்கு முறையான தீர்ப்பு வழங்கி, அவரைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் (42-64).
3. பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும்: இப்பகுதி எரேமியா இறைவாக்கினரின் சொற்களை (51:34,35,41) அடிப்படையாகக் கொண்டது. பேல் என்னும் தெய்வம் முழுமுதற் கடவுள் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது (1-22). இதே போன்று, பாபிலோனியர் வணங்கிவந்த அரக்கப்பாம்பும் கடவுள் அல்ல என்பது வெளிப்படுகிறது (23-30). இவற்றுடன் இறைவாக்கினர் அபக்கூக்குப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றும் இணைக்கப்படுகிறது (33-39). இறுதியில் ஆண்டவர் தானியேலைச் சிங்கக் குகையினின்று வியத்தகு முறையில் விடுவிப்பது விளக்கப்படுகிறது (31-32, 40-42).
இப்பகுதிகள் மூன்றும் கிரேக்க மொழியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். "செப்துவசிந்தா" பாடத்தைவிடத் தெயொதோசியோன் மொழிபெயர்ப்பு தொன்மை வாய்ந்தது; ஆதலால் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பில் அதுவே மூலபாடமாக அமைகிறது.
"இஸ்ரயேலின் கடவுள் அனைத்திற்கும் ஆண்டவர் ஆவார்; அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்" என்ற தானியேல் நூலினது எபிரேய மொழி வடிவத்தில் நாம் காணும் மையக் கருத்தையே இம்மூன்று பகுதிகளும் வலியுறுத்துகின்றன.
தானியேல் (இணைப்புகள்)
[தொகு]நூலின் பிரிவுகள்
இணைப்பு வரிசையும் பொருளடக்கமும் | இணைப்பின் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. இளைஞர் மூவரின் பாடல் | 1 - 67 | 203 - 206 |
2. சூசன்னா | 1 - 63 | 207 - 210 |
3. பேல் | 1 - 42 | 211 - 213 |
தானியேல் (இணைப்புகள்) (Additions to the Book of Daniel)
[தொகு]இணைப்பு 1
இணைப்பு 1: இளைஞர் மூவரின் பாடல் [1]
[தொகு]அசரியாவின் மன்றாட்டு
[தொகு]
1 சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ ஆகியோர் [2]
கடவுளைப் புகழ்ந்து பாடியவாறும் ஆண்டவரைப் போற்றியவாறும்
தீப்பிழம்பின் நடுவே உலாவிக் கொண்டிருந்தார்கள்.
2 அப்பொழுது அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று,
உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்:
3 "எங்கள் மூதாதையாரின் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் வாழ்த்தப் பெறுவீராக, புகழப்படுவீராக;
உம் பெயர் என்றென்றும் மாண்புமிக்கது.
4 எங்களுக்குச் செய்துள்ள அனைத்திலும் நீர் நீதியுள்ளவர்.
உம் செயல்கள் யாவும் நேர்மையானவை;
உம் வழிகள் செவ்வையானவை;
உம் தீர்ப்புகள் அனைத்தும் உண்மையானவை.
5 எங்கள் மீதும் எங்கள் மூதாதையரின் திருநகரான எருசலேம்மீதும்
நீர் வருவித்துள்ள அனைத்திலும் நேர்மையான தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்;
எங்கள் பாவங்களை முன்னிட்டே இவற்றையெல்லாம்
உண்மையோடும் நீதியோடும் எங்களுக்கு வரச்செய்துள்ளீர்.
6 உம்மைவிட்டு விலகிச் சென்றதால் நாங்கள் பாவம் செய்தோம்; நெறி தவறினோம்;
எல்லாவற்றிலும் பாவம் செய்தோம்; உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை.
7 எங்கள் நலனைமுன்னிட்டு நீர் எங்களுக்குக் கட்டளையிட்டவாறு
நாங்கள் நடக்கவுமில்லை, செய்யவுமில்லை.
8 நீர் எங்கள்மீது வருவித்தவை அனைத்தையும்,
எங்களுக்குச் செய்த யாவற்றையும் உண்மையோடும் நீதியோடும் செய்திருக்கிறீர்.
9 நெறிகெட்ட எதிரிகளின் கையில்,
கடவுளைக் கைவிட்ட, மிகுந்த வெறுப்புக்குரியோர் கையில் எங்களை ஒப்படைத்தீர்;
நேர்மையற்றவனும் அனைத்துலகிலும் மிகக் கொடியவனுமான மன்னனிடம் எங்களைக் கையளித்தீர்.
10 இப்பொழுது வாய் திறக்க எங்களால் இயலவில்லை;
உம் ஊழியர்களும் உம்மை வழிபடுவோருமாகிய நாங்கள் வெட்கத்துக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானோம்.
11 உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டுவிடாதீர்;
உமது உடன்படிக்கையை முறித்துவிடாதீர்.
12 உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும்,
உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும்
உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும்,
உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர்.
13 விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும்
அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.
14 ஆண்டவரே, எங்கள் பாவங்களால்
மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டோம்;
உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம்.
15 இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை,
இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை;
எரிபலி இல்லை, எந்தப் பலியும் இல்லை;
காணிக்கைப்பொருளோ தூபமோ இல்லை;
உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.
16 ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும்
பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும்
நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக. [3]
17 அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக;
நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக;
ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.
18 இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம்;
உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம்.
எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்;
19 மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.
20 ஆண்டவரே, உம் வியத்தகு செயல்களுக்கு ஏற்ப எங்களை விடுவியும்;
உம் பெயரை மாட்சிப்படுத்தும்.
21 உம் ஊழியர்களுக்குத் தீங்கு செய்வோர் அனைவரும் வெட்கத்திற்கு உள்ளாகட்டும்.
அவர்கள் தங்கள் வலிமை, ஆட்சி அனைத்தையும் இழந்து இகழ்ச்சியுறட்டும்;
அவர்களது ஆற்றல் அழிந்துபடட்டும்.
22 நீரே ஒரே கடவுளாகிய ஆண்டவர் என்றும்,
மண்ணுலகெங்கும் மாண்புமிக்கவர் என்றும் அவர்கள் அறிந்துகொள்ளட்டும்."
கடவுளின் பராமரிப்பு
[தொகு]
23 மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின்
சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்
சூளையில் போட்டுத் தீ வளர்த்தவண்ணம் இருந்தனர்.
24 இதனால் தீப்பிழம்பு சூளைக்குமேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று.
25 அது வெளியே பரவிச்சென்று,
சூளை அருகே நின்று கொண்டிருந்த கல்தேயரைச் சுட்டெரித்தது.
26 ஆனால் ஆண்டவரின் தூதர் சூளைக்குள் இறங்கிவந்து,
அசரியாவோடும் அவர்தம் தோழர்களோடும் சேர்ந்து கொண்டார்;
அனற்கொழுந்து சூளையினின்று வெளியேறச் செய்தார்;
27 மேலும், சூளையின் நடுவில் குளிர்காற்று வீசச் செய்தார்.
இதனால் நெருப்பு அவர்களைத் தீண்டவேயில்லை;
அவர்களுக்குத் தீங்கிழைக்கவுமில்லை. துன்பமோ துயரமோ தரவுமில்லை.
மூவர் பாடல்
[தொகு]
28 அப்பொழுது அம்மூவரும் தீச்சூளையில் ஒரே குரலில்
கடவுளைப் போற்றிப் பகழ்ந்து, மாட்சிப்படுத்தினர்:
29 "எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே,
நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.
எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது; எத்திப் போற்றற்குரியது.
30 உமது தூய மாட்சிவிளங்கும் கோயிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக;
உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.
31 கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே,
நீர் வாழ்த்தப்பெறுவீராக;
நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.
32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப்பெறுவீராக.
33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.
34 ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
35 வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி ஏத்திப் போற்றுங்கள்.
36 ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
37 வானத்திற்குமேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்று.
38 ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
39 கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
40 விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
41 மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
42 காற்றுவகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
43 நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
44 நடுங்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரை புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
45 பனித்திவலைகளே, பனிமழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் பகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
46 பனிக்கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
47 உறைபனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
48 இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
49 ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, எத்திப் போற்றுங்கள்.
50 மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
51 மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுவதாக.
52 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
53 நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
54 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
55 நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
56 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
57 வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
58 காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
59 மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் பகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
60 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
61 ஆண்டவரின் குருக்களே ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
62 ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
63 நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
64 தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
65 அனனியா, அசரியா, மிசாவேல், ஆண்டவரை வாழ்த்துங்கள்;
என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.
ஏனெனில் பாதாளத்திலிருந்து அவர் நம்மை விடுவித்தார்;
சாவின் பிடியிலிருந்து நம்மை மீட்டார்;
கொழுந்துவிட்டெரியும் சூளையிலிருந்து நம்மைக் காப்பாற்றினார்;
நெருப்பிலிருந்து நம்மைக் காத்தருளினார்.
66 ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்;
அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
67 ஆண்டவரை வழிபடுவோரே,
தெய்வங்களுக்கெல்லாம் மேலான கடவுளை நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள்;
அவருக்குப் புகழ் பாடுங்கள், நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது." [4]
- குறிப்புகள்
[1] இப்பகுதி "உல்காத்தா" எனப்படும் இலத்தீன் மொழிபெயர்ப்பில்
தானி 3:24-90 ஆகக் காணப்படுகிறது.
[2] 1 - காண் தானி 3:23. இவர்களின் இயற்பெயர்கள் முறையே
அனனியா, மிசாவேல், அசரியா ஆகும் (காண் 1:6-7).
[3] 16 = திபா 51:16-17.
[4] 67 = திபா 136:26; 1 மக் 4:24.
(தொடர்ச்சி): தானியேல்:இணைப்புகள்: இணைப்பு 2: சூசன்னா