உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து


"யூதித்து பாடிய பாடல்: 'என் கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்; ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள்...'உன் எல்லைகளைத் தீக்கிரையாக்குவேன்; உன் இளைஞர்களை வாளுக்கிரையாக்குவேன்'...என்று அசீரியன் அச்சுறுத்தினான். எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.'"- யூதித்து 16:1,4-5.


யூதித்து (The Book of Judith)

[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15

[தொகு]

இஸ்ரயேலரின் வெற்றி

[தொகு]


1 கூடாரங்களில் இருந்தவர்கள்
நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள்.
2 அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள,
அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்;
சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள்.
3 பெத்தூலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில்
பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள்.
இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும்
அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்.
4 பெத்துமஸ்தாயிம், பேபாய்,
கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும்,
இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி,
நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்;
மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய
பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் தூண்டினார்.
5 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று
ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து,
கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள்.
அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும்
அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்;
ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை
அவர்கள் அறிந்திருந்தார்கள்.
கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப்
பக்கவாட்டில் தாக்கித்
தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி
அவர்களைப் படுகொலை செய்தார்கள்.


6 பெத்தூலியாவில் எஞ்சியிருந்தோர்
அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்;
அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர்.
7 படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது
எஞ்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர்.
மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும்
நகர்களிலும் வாழ்ந்த மக்கள்
அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.

வெற்றி விழா

[தொகு]


8 இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும்,
யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும்,
தலைமைக் குரு யோவாக்கிமும்
எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின்
ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள்.
9 அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து
ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள்.
"நீரே எருசலேமின் மேன்மை;
நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி;
நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!
10 இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்;
இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர்.
இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும்
உமக்கு ஆசி வழங்குவாராக" என்று வாழ்த்தினார்கள்.
மக்கள் அனைவரும், "அவ்வாறு ஆகட்டும்" என்றார்கள்.


11 மக்கள் அனைவரும் முப்பது நாளாக
எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள்.
ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள்,
படுக்கைகள், கிண்ணங்கள்,
மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள்.
அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்;
தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.


12 யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும்
கூடிவந்து அவரை வாழ்த்தினார்;
அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர்.
யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார்.
13 அவரும் அவருடன் இருந்தவர்களும்
ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள்.
எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று,
எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார்.
இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும்
படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு,
புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.

யூதித்து பாடிய புகழ்ப்பா

[தொகு]


14 இஸ்ரயேலர் அனைவர் முன்னும்
யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார்.
மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.


அதிகாரம் 16

[தொகு]


1 யூதித்து பாடிய பாடல்:


"என் கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்; [1]
ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள்.
அவருக்குத் திருப்பாடலும் புகழ்ப் பாவும்[2] இசையுங்கள்;
அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.[3]


2 ஆண்டவர் போர்களை முறியடிக்கும் கடவுள்;
மக்கள் நடுவே தம் கூடாரத்தை அமைத்துள்ளார்;
துரத்துவோரிடமிருந்து என்னை அவர் விடுவித்தார்.[4]


3 அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்;
எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான்.
அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது.
அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது.


4 "உன் எல்லைகளைத் தீக்கிரையாக்குவேன்;
உன் இளைஞர்களை வாளுக்கிரையாக்குவேன்;
உன் குழந்தைகளைத் தரையில் அடித்துக் கொல்வேன்;
உன் சிறுவர்களைக் கவர்ந்து செல்வேன்;
உன் கன்னிப் பெண்களைக் கொள்ளைப் பொருளாகக் கொண்டுபோவேன்"
என்று அசீரியன் அச்சுறுத்தினான்.


5 எல்லாம் வல்ல ஆண்டவரோ
ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.


6 வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை;
அரக்கர்கள்[5] அடித்து நொறுக்கவில்லை;
உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை;
ஆனால் மெராரியின் மகள் யூதித்து
தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.


7 இஸ்ரயேலில் துயருற்றோரைத் தூக்கிவிட
அவர் கைம்பெண்ணுக்குரிய தம் ஆடையைக் களைந்தார்;


8 தம் முகத்தில் நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்;
தலையை வாரி முடித்து மணிமுடியைச் சூடிக்கொண்டார்.
அவனை மயக்க மெல்லிய உடையை அணிந்து கொண்டார்.


9 அவரது காலணி அவனது கண்ணைக் கவர்ந்தது;
அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது.


10 பாரசீகர் அவரது துணிவைக் கண்டு நடுங்கினர்;
மேதியர் அவரது மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.


11 தாழ்வுற்ற என் மக்கள் முழக்கமிட்டபோது பகைவர்கள் அஞ்சினார்கள்;
வலிமை இழந்த என் மக்கள் கதறியபோது அவர்கள் நடுங்கினார்கள்;
என் மக்கள் கூச்சலிட்டபோது அவர்கள் புறங்காட்டி ஓடினார்கள்.


12 பணிப்பெண்களின் மைந்தர்கள் அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்;
தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு இழைப்பதுபோல்
அவர்களைக் காயப்படுத்தினார்கள்;
என் ஆண்டவரின் படையால் அவர்கள் அழிந்தார்கள்.


13 என் கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
ஆண்டவரே, நீர் பெரியவர், மாட்சிமிக்கவர்;
வியத்தகு வலிமை கொண்டவர்; எவராலும் வெல்ல முடியாதவர்.[6]


14 உம் படைப்புகள் அனைத்தும் உமக்கே பணிபுரியட்டும்;
நீர் ஆணையிட்டீர்; அவை உண்டாயின.
உம் ஆவியை அனுப்பினீர்; அவை உருவாயின.
உமது குரலை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை.[7]


15 மலைகளின் அடித்தளங்களும் நீர்த்திரளும் நடுங்குகின்றன;
பாறைகள் உம் திருமுன் மெழுகுபோல் உருகுகின்றன.
உமக்கு அஞ்சுவோருக்கோ நீர் இரக்கம் காட்டுகின்றீர்.


16 நறுமணம் வீசும் பலியெல்லாம் உமக்குப் பெரிதல்ல;
எரிபலியின் கொழுப்பெல்லாம் உமக்குச் சிறிதே.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே எக்காலமும் பெரியோர்.


17 என் இனத்தாரை எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு ஐயோ கேடுவரும்.
எல்லாம் வல்ல ஆண்டவர் தீர்ப்பு நாளில் அவர்களைப் பழிவாங்குவார்;
அவர்களது சதைக்குள் நெருப்பையும் புழுக்களையும் அனுப்புவார்;
அவர்கள் துயருற்று என்றும் அழுவார்கள்."


18 மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன்
கடவுளை வழிபட்டார்கள்.
தங்களைத் தூய்மைப்படுத்தியபின்
எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும்
காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
19 மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒரோபெரினின் கலன்கள் அனைத்தையும்
யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்;
அவனுடைய படுக்கை அறையிலிருந்து
தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும்
கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார்.
20 மக்கள் எருசலேமில் திருவிடத்துக்குமுன்
மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள்.
யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

யூதித்தின் புகழ்

[தொகு]


21 பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர்.
யூதித்து பெத்தூலியாவுக்குச் சென்று
தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்;
தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார்.
22 பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்;
ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து
தம் மூதாதையரோடு துயில் கொண்டபின்
தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை.
23 அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது.
அவர் தம் கணவரின் இல்லத்தில்
நூற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்;
தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார்.
பெத்தூலியாவில் உயிர் துறந்தார்.
அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
24 இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர்.
அவர் தாம் இறப்பதற்கு முன்பே
தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர்,
தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும்
தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்.


25 யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும்
அவர் இறந்து நெடுங்காலத்திற்குப் பின்னரும்
எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை.

குறிப்புகள்

[1] 16:1 - 'முரசு கொட்டத் தொடங்குங்கள்' என்பது மூல பாடம்
[2] 16:1 - 'அவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்' என்று சில சுவடிகளில் காணப்படுகிறது. காண் 16:13
[3] 16:1 = திபா 150:4-5.
[4] 16:2 - 'தம் கூடாரத்துக்குள் என்னை அழைத்து வந்தார்' என்றும் மொழிபெயர்க்கலாம்.
[5] 16:6 - கிரேக்க பாடம் 'தீத்தானின் புதல்வர்கள்'
[6] 16:13 = திபா 96:1; 144:9.
[7] 16:14 = திபா 33:9; 104:30; 148:5.


(யூதித்து நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எஸ்தர் (கிரேக்கம்): அதிகாரங்கள் 1 முதல் 2 வரை