திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
1 அரசர்கள் (The First Book of Kings)
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]யூதா அரசன் அபியாம்
[தொகு](2 குறி 13:1 - 14:1)
1 நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில், அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.
2 அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.
3 அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் அவனும் செய்தான். அவன் உள்ளம் தம் மூதாதையான தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.
4 ஆயினும் தாவீதின் பொருட்டு அவருடைய கடவுளாகிய ஆண்டவர் எருசலேமில் அவரது குலவிளக்கை ஒளிரச் செய்தார். அவருடைய மகனை அவருக்குப் பின் எழுப்பி, எருசலேமை நிலைபெறச் செய்தார். [1]
5 ஏனெனில், தாவீது ஆண்டவரின் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். இத்தியனான உரியாவிடம் நடந்து கொண்ட முறையைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் அவர் ஆண்டவரின் கட்டளைகளினின்று வழுவியதில்லை. [2]
6 அபியாம் ஆண்ட காலமெல்லாம் அவனுக்கும் எரொபவாமுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது.
7 அபியாமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா? அபியாமிற்கும் எரொபவாமுக்குமிடையே போர் நடந்தது.
8 பிறகு, அபியாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரசன் ஆனான்.
யூதா அரசன் ஆசா
[தொகு](2 குறி 15:16 - 16:6)
9 இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், ஆசா யூதாவின் அரசன் ஆனான். அவன் நாற்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான்.
10 அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.
11 ஆசா தன் மூதாதை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.
12 அவன் விலை ஆடவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தன் மூதாதையர் செய்து வைத்திருந்த சிலைகளையெல்லாம் அகற்றினான்.
13 மேலும் அவனுடைய தாய் மாக்கா அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றைச் செய்து வைத்திருந்தாள். எனவே அவன் அவளை அரச அன்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்வுருவத்தைத் தகர்த்து கிதரோன் ஓடையருகே சுட்டெரித்தான்.
14 ஆனால் தொழுகை மேடுகள் அப்படியே இருந்தன. எனினும் ஆசாவின் உள்ளம் அவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருந்தது.
15 தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.
16 ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.
17 இஸ்ரயேலின் அரசன் பாசா யூதாவின்மீது படையெடுத்து வந்து, அரசன் ஆசாவுடன் இருந்த போக்குவரத்தைத் தடுக்க இடையில் இராமா நகரைக் கட்டினான்.
18 ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது:
19 "என் தந்தையும் உம் தந்தையும் செய்தது போல், நீரும் நானும் உடன்படிக்கை செய்து கொள்வோம். இதற்கெனப் பொன், வெள்ளி முதலியவற்றை நான் உமக்கு அன்பளிப்பாய் அனுப்புகிறேன். இஸ்ரயேலின் அரசன் பாசாவோடு நீர் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து விடும். அப்பொழுது அவன் என்னைவிட்டு அகன்று போவான்".
20 பெனதாது அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத் தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களின் மேல் படை எடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், பெத்மாக்கா ஆகிய நகர்களையும் கினரோத்து முழுவதையும் நப்தலி நாடு அனைத்தையும் தாக்கி முறியடித்தார்கள்.
21 பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.
22 அப்பொழுது அரசன் ஆசா, யூதா முழுவதற்கும் விதி விலக்கின்றி அனைவருக்கும் ஆணையிட்டான். அதன்படி அவர்கள் பாசா இராமாவைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு அரசன் ஆசா பென்யமினைச் சார்ந்த கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
23 ஆசாவின் பிற செயல்களும் அவனுடைய எல்லா வீரச் செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் நகர்களைக் கட்டியதும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா? முதியவயதில் அவன் கால்களில் நோய் கண்டது.
24 ஆசா தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் மூதாதை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோசபாத்து அரசன் ஆனான்.
இஸ்ரயேல் அரசன் நாதாபு
[தொகு]
25 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
26 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான்.
27 இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.
28 இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
29 அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான். [3]
30 இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம்.
31 நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
32 ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.
இஸ்ரயேல் அரசன் பாசா
[தொகு]
33 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
34 அவனும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். எரொபவாமின் வழியிலேயே நடந்து, அவனைப் போல் இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.
- குறிப்புகள்
[1] 15:4 = 1 அர 11:36.
[2] 15:5 = 2 சாமு 11:27.
[3] 15:29 = 1 அர 14:10.
அதிகாரம் 16
[தொகு]1 பாசாவுக்கு எதிராக அனானியின் மகனான ஏகூவுக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது;
2 "தூசிக்கு நிகரான உன்னை நான் உயர்த்தி என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன். நீயோ எரொபவாமின் வழி நடந்து என் மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய்.
3 எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும் அழிக்கப்போகிறேன். நெபாற்றின் மகனான எரொபவாமின் வீட்டுக்குச் செய்ததைப் போல, உன் வீட்டுக்கும் செய்வேன்.
4 பாசாவைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர் நாய்களுக்கு இரையாவர்; வயல்வெளியில் இறப்பவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்."
5 பாசாவின் பிறசெயல்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய வீரச் செயல்களும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
6 பாசா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின் திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஏலா அரசன் ஆனான்.
7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.
இஸ்ரயேல் அரசன் ஏலா
[தொகு]
8 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.
9 அவனது தேர்ப்படையின் பாதிக்குத் தலைவனாய் இருந்த சிம்ரி என்ற அவனுடைய பணியாளன் அவனை ஒழித்து விடச் சூழ்ச்சி செய்தான். திர்சாவில் அரண்மனை மேற்பார்வையாளன் அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்துபோது,
10 சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.
11 அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை.
12 இவ்வாறு இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான்.
13 பாசாவும் அவன் மகன் ஏலாவும் பல்வேறு பாவங்கள் செய்ததாலும், இஸ்ரயேல் பாவம் செய்யக் காரணமாய் இருந்து சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டியதாலும், இது நேர்ந்தது.
14 ஏலாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
இஸ்ரயேல் அரசன் சிம்ரி
[தொகு]
15 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர்.
16 சிம்ரி சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்றுவிட்டான் என்பதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டு, படைத்தலைவனாகிய ஓம்ரியை அன்றே பாளையத்திலிருந்து இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்கினர்.
17 அப்போது ஓம்ரி கிபத்தோனிலிருந்து இஸ்ரயேலர் அனைவருடன் சேர்ந்து புறப்பட்டுப் போய்த் தீர்சாவை முற்றுகையிட்டான்.
18 நகர் வீழ்ச்சியுற்றதைக் கண்டு, சிம்ரி அரண்மனையின் உட்கோட்டைக்குள் புகுந்தான். அந்த அரண்மனைக்குத் தீயிட்டு, தானும் அதில் மாண்டான்.
19 ஏனெனில். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து, எரொபவாமின் வழியில் நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.
20 சிம்ரியின் பிற செயல்களும் அவன் செய்த சூழ்ச்சியும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
இஸ்ரயேல் அரசன் ஓம்ரி
[தொகு]
21 அப்போது இஸ்ரயேலின் மக்கள் இரு பகுதியாகப் பிரிந்தனர். ஒரு பகுதியினர் கீனத்தின் மகன் திப்னியையும் மறுபகுதியினர் ஓம்ரியையும் அரசனாக்க முயன்றனர்.
22 கீனத்தின் மகன் திப்னியின் ஆள்களை விட ஓம்ரியின் ஆள்கள் வலிமை மிகுந்திருந்ததால், ஓம்ரி அரசனானான். திப்னி உயிரிழந்தான்.
23 ஓம்ரி அரசனாகி இஸ்ரயேல்மீது பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதல் ஆறு ஆண்டுகள் அவன் திர்சாவில் இருந்து கொண்டு அரசாண்டான்.
24 பின்னர் அவன் செமேர் என்பவனிடமிருந்து 'சமாரியா' என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் மீது நகர் ஒன்றைக் கட்டி முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் 'சமாரியா' என்று பெயரிட்டான்.
25 ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான்.
26 அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
27 ஓம்ரியின் பிறசெயல்களும் அவனுடைய வீரச் செயல்களும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
28 ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.
29 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
30 ஓம்ரியின் மகன் ஆகாபு ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைத் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகுதியாய்ச் செய்தான்.
31 நெபாற்றின் மகன் எரொபவாமின் வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள் ஈசபேலை மணந்துகொண்டு பாகால் தெய்வத்தை வணங்கி வழிபடலானான்.
32 மேலும் சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான்.
33 அதுவுமின்றி, ஆகாபு அசேராக் கம்பத்தை நிறுத்தி, தனக்கு முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்கள் எல்லாரையும்விட மிகுதியாக, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
34 அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான். நூனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும் அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான். [*]
- குறிப்பு
[*] 16:34 = யோசு 6:26.
(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை